காங்கிரஸை போன்று இல்லாமல் வலுவான பிரதமரின் தலைமையில் செயல்படும் அரசை நாட்டுக்கு பாஜக தந்துள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவில் நேற்று முன்தினம் தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "மக்களவைத் தேர்தலின்போது 100 நாட்களில் கருப்புபணத்தை மீட்போம் என்று பாஜக அளித்த வாக்குறுதி என்னவாயிற்று?" என கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியின் பணிகளை பாஜக அரசு தாங்கள் செய்தது போல் காட்டிக்கொள்ள முயல்கிறது" என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கூறும்போது, "ஆட்சியை இழந்தபிறகும் சோனியாவுக்கு உரை எழுதித்தருபவர்கள் உரிய முன்தாயரிப்பின்றி எழுதித்தருவது வருத்தமாக உள்ளது. இதனால் தான் அவர் இவ்வாறு பேசுகிறார். இதனை அவர் கண்ணாடி வழியாகபார்த்தால் தனது தவறுகளை உணர்வார்.

கருப்பு பணத்தை மீட்க உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகளாக சிறப்புபுலனாய்வு குழு அமைக்கவில்லை. பாஜக அரசு முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுத்து குழுவை அமைத்தது. தற்போது கருப்புபணம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள சுவிட்சர்லாந்து உட்பட உலகின் அனைத்து நாடுகளும் முன்வந்துள்ளன.

முந்தையை காங்கிரஸ் அரசு பணியாற்றுவது போல் காட்டிக் கொண்டது. ஆனால் மோடியின் அரசு முடிவுகள் எடுத்து செயல் படுத்தும் அரசாக உள்ளது.

வலுவற்ற பிரதமரை சோனியா நாட்டுக்கு கொடுத்தார். அவர்கூறுவதை கட்சியோ, அமைச்சர்களோ காதுகொடுத்து கேட்டதில்லை. ஆனால் பாஜக வலுவான பிரதமரை நாட்டுக்கு கொடுத்துள்ளது.

அவரது ஆட்சித் திறன் காரணமாக அவரது கருத்துகளை நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளும் கூர்ந்து கவனிக்கின்றன.

ஏன் முடிவுகள் பிரதமர் இல்லத்தில் எடுக்கப் படுகின்றன? ஏன் தேசிய ஆலோசனை கவுன்சில் போன்று எதுவும் இல்லை? என்பது தான் சோனியா காந்தியின் இப்போதைய பிரச்சினை" என்றார்.

Leave a Reply