பாஜக மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011–ம் ஆண்டில் ரதயாத்திரை மேற்கொண்டார். அவர் மதுரைக்கு வந்து அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டார். இந்த சமயத்தில் அவரது யாத்திரைசெல்லும் வழியான திருமங்கலம் ஆலம்பட்டி அருகே பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப்வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கொலைமுயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டு, சிறப்புபிரிவு போலீசார் விசாரணை செய்துவந்தனர். இந்தவழக்கில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், முகமது அனீபா என்ற தென்காசி அனீபா, அப்துல்லா என்ற அப்துல் ரகு மான், இஸ்மத், ஹக்கீம் என்ற கருவா ஹக்கீம் ஆகிய 6 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டனர்.

மதுரை சுண்ணாம்புக் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் நேதாஜி ரோட்டில் பால்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 26ந் தேதியன்று இரவு 10 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தகொலை வழக்கிலும் தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், புதூரை சேர்ந்த அப்துல், நெல் பேட்டை தவ்பீக் உள்பட பலருக்கு தொடர்பிருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த இரு வழக்குகளும் சிபிசிஐ.டிக்கு மாற்றப்பட்டன. இந்தவழக்குகள் தொடர்பான விசாரணை மதுரை 4–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தவழக்குகளின் முக்கிய குற்றவாளிகளான போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அத்வானி வெடி குண்டு வழக்கும், பால் கடை சுரேஷ் கொலை வழக்கும் பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் மாற்றப்பட உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply