வெளிநாட்டு வங்கிகளில் கருப்புபணம் குவித்துள்ள எல்லோர் பெயரையும் வெளியிட்டுவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .

வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒருவழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்தவழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் முகுல்ரோத்தகி ஆஜராகினார். அப்போது அவர் ஒரு மனு தாக்கல்செய்தார். வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் குவித்துள்ள அனைவரது பெயரையும் வெளியிட்டுவிட முடியாது என்பதே அதன் சாராம்சம்.

இது தொடர்பாக அதில், ''வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக இந்தியா இரட்டை வரி விதிப்புதவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளில் உள்ள வங்கிகளில் கருப்புபணம் குவித்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடமுடியாது. இதற்கு அந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன''

''லீச்டென்ஸ்டெயின் எல்.ஜி.டி. வங்கியில் பணம் டெபாசிட்செய்துள்ள இந்தியர்கள் பற்றிய தகவல் வெளியிட ஜெர்மனி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது'' என கூறினார்.

இதையடுத்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ''இந்தியா சிலநாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிவிக்கமுடியாது. வரி ஏய்ப்புசெய்து, லீச்டென்ஸ்டெயின் வங்கியில் டெபாசிட்செய்துள்ள அனைவரின் ரகசிய கணக்கு தகவல்களையும் தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்கும்படி கேட்டுள்ளோம்.

யார் மீதெல்லாம் சட்டப்பூர்வமான நீதிமன்ற நடவடிக்கையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதோ, அவர்களின் கணக்கு ரகசியங்களை மட்டுமே வெளியிட கேட்டுள்ளோம். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட்செய்துள்ள பணம் அவ்வளவும் கருப்புபணம் என்று கூறிவிடமுடியாது. அத்தகைய வங்கிக் கணக்குகளை தொடங்குவது ஒன்றும் குற்றம் அல்ல'' என கூறினார்.

Tags:

Leave a Reply