பிரதமர் நரேந்திர மோடியின் மாதிரி கிராமம் திட்டம்' (சன்சத் கிராம யோஜ்னா) கீழ் பயன் பெறும் கிராமத்தை அடையாளம் கண்டு, திட்டத்தை விரைவுபடுத்த உடனே நடவடிக்கை எடுங்கள் என அனைத்து எம்.பி.க்களுக்கும் மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்க ளையும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராமங்களாக 2016-ல் மாற்ற பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். இந்தத்திட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அவர் கோரியுள்ளார். இத்திட்டத்தை கண் காணித்து செயல்படுத்தக் கூடிய உரிமையையும் அவர் எம்.பி.க்களுக்கு அளித்துள்ளார்.

இந்தத்திட்டம் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட போது, அனைத்து எம்.பி.க்களும் ஒருமாதத்தில் தங்கள் தொகுதிக்கு உள்பட்ட ஒருகிராமத்தை தேர்வுசெய்து அதன் திட்ட மதிப்பீடு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, வரும் நவம்பர் 11-ம் தேதிக்குள் மாதிரி கிராமம் திட்டத்தை எம்.பி.க்கள் அடையாளம் கண்டு அங்கு நிறைவேற்ற உத்தேசித்துள்ள வசதிகளை அறிக்கையாக அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் இந்த திட்டத்தைச் செயல் படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. கிராமங்களுக்கு "சுயராஜ்ஜியம்' அளிக்கும் வகையில் இந்தத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு அரசுத்துறைகளின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகிறது. இந்தத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களைத் தொடங்குவதற்காக மாநில அரசு உயரதிகாரிகளுக்கு பயிற்சிமுகாம் நடத்தும் நடவடிக்கைகளை மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் பகுதியில் மாதிரிகிராமம் திட்டத்தைச் செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த முயற்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என கட்கரி கூறியுள்ளார்.

Leave a Reply