இந்திய – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகா எல்லைச்சாவடி பகுதியில் ஞாயிற்றுக் கிழமை மாலை நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உள்பட 55 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள எல்லைப்பகுதி வாகா. இந்தியாவின் அமிர்த சரஸிலிருந்து பாகிஸ்தான் செல்லும் நுழைவாயில் இது. இங்கு இந்திய பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தும் கொடி இறக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம்.

இந்த எல்லையையொட்டி பாகிஸ்தானுக் குட்பட்ட பகுதியில் நேற்றுமாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பார்த்த அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்படத் தயாராகினர்.

அப்போது அங்கே வந்த தற்கொலைபடை தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த இரும்புகேட்' மீது மோதி, தனது உடலில் கட்டி\யிருந்த வெடி குண்டுகளை வெடிக்கச்செய்தார். அப்போது அந்தப் பகுதியே அதிர்ந்தது. எங்கும் ஒரே மரண ஓலம். அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த சம்பவத்தில் சிக்கி 55 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள கண்டன செய்தியில் இந்த தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி தருவதாகவும் , கோழைத்தனமானதாகவும் உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply