இந்தியாவில் தாக்குதலை நடத்த பாகிஸ்தான், தீவிரவாதிகளை பினாமிகளாக பயன்படுத்துவதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது..

இந்தியாவில் தொடர்ந்து பாகிஸ்தான், தீவிரவாதிகளைக் கொண்டு நாச வேலைகளை அரங்கேற்றுகிறது.
பிரதமராக பதவி ஏற்ற பின்னர், கடந்த ஆகஸ்டு மாதம் 2ந் தேதி காஷ்மீர் மாநிலம்சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பாதுகாப்புபடையினர் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், ''நமக்கு அருகில் இருக்கும் நாடு (பாகிஸ்தான்) நம்மிடம் மரபுசார்ந்த போர் புரியும் பலத்தை இழந்துவிட்டது. எனினும், நமது நாட்டில் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டி விட்டு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது'' என குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்துவது போன்று அமெரிக்காவும் கூறியள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறி உள்ளதாவது :–

பாகிஸ்தானில் இயங்கிவருகிற தீவிரவாதிகள் இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர். இது ஆப்கானுக்கு கேடாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு தீங்காகவும் அமைகிறது.

ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை இழந்தநிலையில், தீவிரவாதிகளை அங்கு பாகிஸ்தான் மறை முகமாகப் பயன் படுத்துகிறது. இதேபோன்று வலுவான இந்திய ராணுவத்தை எதிர் கொள்வதற்கு தீவிரவாதிகளை பினாமிகளாக பயன்படுத்துகிறது.

இந்தியாவில் பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பதற்கு 3 நாட்கள் முன்பாக ஆப்கானிஸ்தானில் ஹெராத்தில் உள்ள இந்திய துணைதூதரகம் தாக்குதலுக்கு ஆளானது. அங்கு ஆயுதம் ஏந்திய 4 தீவிரவாதிகள் கடும் தாக்குதல்கள் நடத்தினர். பிரதமர் மோடி இந்துதேசியவாத குழுக்களுக்கு நெருக்கமானவர் என்ற எண்ணத்தில், அவர் பதவி ஏற்புநேரத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply