2014ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையை பிடித்தோம். அதுபோல் 2016 சென்னை ஜார்ஜ்கோட்டையை பிடிப்போம். கோடி உறுப்பினர்கள் சேர்ப்போம். தமிழகத்தில் மோடி அரசு அமைப்போம் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் என்று சென்னை அருகே நடந்த தமிழக பாஜகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.

டாக்டர் தமிழிசை செளந்தர ராஜன் பாஜக தலைவராக பதவியேற்ற பின்னர் நடந்த முதல் பொதுக் குழுக் கூட்டம் இது. இதில் தமிழிசையின் செளந்தர ராஜன் தேர்வுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூட்டம் தொடங்கியதும் தமிழிசை செளந்தர ராஜன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, பொதுக் குழு அங்கீகாரம் வழங்கியது. அவருக்கு தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

அதை தொடர்ந்து மற்ற தலைவர்கள் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கட்சியின்வளர்ச்சி, எதிர் கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் தமிழிசை பேசுகையில், என்னை தமிழக பா.ஜ.க. தலைவராக அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2014ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையை பிடித்தோம். அதுபோல் 2016 சென்னை ஜார்ஜ்கோட்டையை பிடிப்போம். கோடி உறுப்பினர்கள் சேர்ப்போம். தமிழகத்தில் மோடி அரசு அமைப்போம் என்றார் அவர்.

பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி.

இதுவரை இல்லாத வகையில் மோடி அரசு பதவி ஏற்ற 6 மாதத்தில் 8 முறை பெட்ரோல் விலையையும் 2 முறை டீசல் விலையையும் குறைந்ததற்கு பாராட்டு.

– எரிவாயு சிலிண்டர் வினியோக கட்டுப்பாட்டை நீக்கிய மத்திய அரசுக்கு நன்றி.

– ஆர்.எஸ்.எஸ். பேரணியை தடுத்து கைது செய்த தமிழக காவல்துறைக்கு கண்டனம்.

– தமிழ்நாட்டில் முழு மது விலக்கை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– பால் விலையை கடுமையாக உயர்த்திய தமிழக அரசுக்கு கண்டனம்.

– மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

– தமிழகத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்த தமிழக நதிகளை இணைக்க வேண்டும்.

– தமிழக அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

– தமிழ்நாட்டில் மழை சேதத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply