நழுவலோ, வழுவலோ இல்லாமல் பேசும் தலைவர்களில் ஒருவர் ஹெச்.ராஜா. பா.ஜ.க. தேசியச் செயலாளரான அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

ஐந்து மாதகால மோடி அரசின் குறிப்பிடத்தக்க செயல்பாடாக எதைக் கூறுவீர்கள்?

செயல்படும் அரசு என மக்களிடம் பெயர் வாங்கியிருப்பதுதான் மத்திய அரசின் முதல் சாதனை. வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் சொன்னபோது முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு, 'அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்தது. ஆனால், மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் கேபினட் கூட்டத்திலேயே சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முதல் தலைமுறை முதலீட்டார்களுக்கு பட்ஜெட்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் மூலதனத் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மொத்த முதலீடு ஒன்றரை லட்சம் கோடி ருபாய் வரை போகும். நாடு முழுவதும் வேலை வாய்ப்பைப் பேருக்கும் முயற்சியாக இதைச் சொல்ல முடியும்.

சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையை அதிகரிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பிரதமரின் அமெரிக்கப் பயணம், பிரிக்ஸ் வங்கி உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு ஐரோப்பிய நாடுகளுடன் உருவாகியிருக்கும் உறவு ஆகியன மூலதனத்தை ஈர்க்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது.

ஐ.மு.கூட்டணி ஆட்சியில் தொழில் வளர்ச்சி விகிதம் மைனஸில் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு 5.6 சதவிகிதம் என்ற அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டுகளில் முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் 8.3 சதவிகிதமாக இருந்ததுபோல உயர்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருகிறது. அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு, தூய்மை பாரதம் திட்டம் ஆகியன மக்களிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்கிறது.
தூய்மை பாரதம் திட்டத்தால், நடைமுறையில் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்?
மக்களை முழுமையாக அந்தப் பணியில் ஈடுபடுத்தும் திட்டம் இது. எப்படி தினமும் முகச்சவரம் செய்கிறோமோ, அதைப்போல் தூய்மைப் பணியையும் தினம்தோறும் செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு மிக அவசியம். பிரதமர் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தால், அந்த விழிப்புணர்வு ஏற்ப்பட்டிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர், சசிதரூர் போல பிரபலங்கள் பலரும் தாங்களாகவே அதில் இணைந்து வாரம் ஒருமுறை தங்கள் பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். மலேசியா,சிங்கப்பூரில் சுத்தமாக வைத்திர்க்கிறார்கள் என நாம் பேசுகிறோம். அவங்க மட்டும்தான் வைக்க முடிமா? நாம் வைக்க முடியாதா? இந்த எண்ணம் மக்களிடம் வரவேண்டும். அதற்கு ஒரு கிரியா ஊக்கியாக மோடி இருக்கிறார்.

கருப்புப் பண விவகாரத்தில் சிலரது பெயர்களை மட்டும் வெளியிட்டு, பலரைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாக விமர்சனங்கள் கிளம்புகிறதே ?

அது தவறான விமர்சனம்! இதில் முந்தைய ஐ.மு.கூட்டணி அரசுக்கும் மோடி அரசுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அவங்க விசாரணையை ஆரம்பித்திருக்கிறோம். கடந்த ஐ.மு.கூட்டணி ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிடம் நாம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குற்றம் நடந்திருந்தால் மட்டுமே வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை வெளியிட முடியும்.

அதை மீறி நாம் வெளியிட்டால், இதற்கு மேல் தகவல்களைத் தர வெளிநாடுகள் மறுத்து விடக்கூடும். இதுவரை சுமார் 700 கணக்குகள் குறித்த விவரங்களைத்தான் பெற்றிருக்கிறோம். இன்னும் சுவிஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தகவல்களைப் பெற வேண்டியிருக்கிறது. எனினும், இதுவரை கிடைத்த வெளிநாட்டு கணக்குகள் குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டோம். இனி நீதிமன்றத்தின் முடிவைத்தான் பார்க்கவேண்டும்.

ஒரு காலத்தில் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்த ராமர் கோயில் விவகாரத்தில் இபோது மௌனம் காப்பது ஏன்?

1980-களில் அந்தப் பிரச்சனை நாங்கள் கையிலெடுத்தது நியாயம் என்பதை அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தி விட்டது. அதாவது, கோயிலை இடித்து மசூதி கட்டினார்கள் என இரண்டு நீதிபதிகளும் கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டினார்கள் என ஒரு நீதிபதியும் தீர்ப்பு கூறினார்கள்.

ஆக, நாங்க நடத்திய பிரசாரம் வெற்றி பெற்றது. இப்போது அந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஆண்டு விசாரனையைத் துரிதப்படுத்துவோம். நீதிமன்றதிற்கு வெளியே சுமுகமான முடிவு கிடைத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.ஆனால் நிச்சயமாக கோயில் அங்கு கட்டப்படும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து பா.ஜா.க. என்ன திட்டம் வைத்திருக்கிறது?

1991-ல் இருந்து தமிழகத்தில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. காரணம், மூன்றாவது சக்தி இல்லாததுதான். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மூலமாக தமிழகத்தில் என்.டி.ஏ, நிரூபிக்கப்பட்ட மூன்றாவது சக்தியாக வந்திருக்கிறது. தி.மு.க. அணி 24 சதவிகிதம் வாங்கியது என்றல் எங்கள் அணி பத்தொன்பதரை சதவிகிதம் வாக்கு வாங்கியிருக்கிறது. எனவே, இனி அ.தி.மு.க. வேண்டாம் என நினைக்கும் மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

தி.மு.க.வுக்கு குடும்பப் பிரச்சனை, 2ஜி, ஏர்செல்-மேக்ஷிஸ் என அத்தனை ஊழல் பிரச்சனைகளும் இருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் முதலிடத்தையும் 6௦ இடங்களில் 2-வது இடத்தையும் பெற்றிருக்கின்றன. மோடி அரசு மீதான நன்மதிப்பும் எங்களுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.

ரஜினி,விஜய் என சினிமா பிரபலங்களின் பின்னால் பா.ஜ.க. செல்வதாக ஒரு தோற்றம் இருக்கிறதே?

அந்தத் தோற்றம் ஏற்ப்பட்டது துரதிருஷ்டவசமானது. எனைப் பொறுத்தவரை, ஆல் ஆர் வெல்கம். ஆனால், ஒருவர் நான் பாரதீய ஜனதாவில் சேருகிறேன் எனச் சொல்வதற்கு முன்பாக அந்த விஷயம் பற்றி பேசக்கூடாது என்பது எனது கருத்து.

அடுத்த நேரத்தில் தனது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்பதை விஜயகாந்த் வலியுறுத்தி வருகிறாரே?

தேர்தல் நேரத்தில் யாருக்கு அதிகமான 'சீட்' என்பதை முடிவு செய்துகொள்ளலாம் பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, கூட்டணியில் இருக்கும் நண்பர்கள் தொடர வேண்டும் என விரும்புகிறோம், நாங்களாக யாரையும் வெளியே அனுப்பியதாக சரித்திரம் கிடையாது. மகாராஷ்டிராவில் சிவசேனா கூட யதார்த்தம் புரியாமல், அவங்களாக வெளியே போனார்கள். 2009 தேர்தலில் அங்கு 169 இடங்களில் நின்ற சிவசேனா, 42 இடங்களில் தான் ஜெயித்தது. பா.ஜ.க. 119 தொகுதிகளில் நின்று 46-ல் வென்றது.அதனால்தான் எதிர்கட்சியாக பா.ஜ.க. இருந்தது. இந்த முறை சம அளவிலான 'சீட்' களைத் தரக்கூட சம்மதிக்காமல் வெளியே போனார்கள். பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அதன் வளர்ச்சி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பங்கீடுகள் இருக்கும்.

முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை, பா.ஜ.க. ஏற்குமா?

அந்தக் கேள்வி இப்போது எழவில்லை. தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயம் அது.

ராஜபக்சேவுக்கு 'பாரத ரத்னா' விருது கொடுக்கவேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது, தமிழகத்தில் பா.ஜ.க.வுக்குப் பின்னடைவை உருவாக்காதா?

இல்லையில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து, பா.ஜ.க.வுக்கு எந்த பின்னடைவையும் அது ஏற்படுத்தாது.

இந்த தருணத்தில் நீங்கள் அவரைச் சந்தித்து, அந்தக் கருத்துக்கு ஆதரவு கொடுத்தது போல் ஆகாதா?

நான் சென்றது முழுக்க முழுக்க மீனவர்களின் பிரச்சனைக்காகத்தான். கடந்த 6௦ நாட்களாக மீனவப் பிரதநிதிகள் என்னிடம் பேசினார்கள். அதாவது, 'இலங்கையில் பிடிபட்டிருக்கும் படகுகள் எல்லாம் பணக்கார்களுக்கு உடையது' என்பதாக சுப்பிரமணியன் சுவாமியின் நிலைப்பாடு இருந்தது. ஆனால், 73 மீனவர்களும் கடன் வாங்கி படகு வாங்கியிருக்காங்க. அவை கப்பல்களல்ல, படகுகள்தான். 'இந்த உண்மை நிலையை சுவாமிக்குப் புரிய வைக்க வேண்டும். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியமா? என மீனவப் பிரதிநிதிகள் கேட்டார்கள். சுவாமியும் அதற்கு சம்மதம் சொன்னார்.
அந்த சந்திப்புக்குப் பிறகு சுவாமியின் கருத்து முழுமையாக மாறியிருக்கிறது. எப்பவும் ஏழை மீனவர்கள் பக்கம் நிற்பதாகவும் சுவாமி கூறியிருக்கிறார். என்ன இருந்தாலும், சுவாமி பா.ஜ.க.வின் சீனியர் லீடர். டெல்லியில் எல்லாத் தலைவர்களுடனும் தொடர்பில் இருப்பவர். அந்த்த தொடர்பைப் பயன்படுத்தி மீனவர்களின் படகுகளை மீட்பதாகக் கூறியிருக்கிறார். இது நல்ல விஷயம்தானே!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்

Leave a Reply