"புத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் நக்சல்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது, அதனை தூக்கி எறிந்துவிட்டு நாட்டை மேம்படுத்த முன்வர வேண்டும்" என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாநிலத்தில் நக்சலைட் வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்ட லட்டே ஹர் மாவட்டத்தின் சண்டுவா பகுதியில் நடைபெற்ற தேர்தல்பிரசார கூட்டத்தில் பாஜக. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த மோடி பேசியதாவது:-

அப்போது அவர் பேசும்போது, "நமது நாட்டின்மீது கறை படிந்து விடாமல் பாதுகாப்பது நமது கடமை. மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை போற்றவேண்டியது அவசியம்.

ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடம் இல்லை. அதனால் யாருக்கும் எந்தப்பயனும் ஏற்பட போவதில்லை. வளர்ச்சிதான் அனைவருக்கும் முக்கியம். ஆயுதம் ஏந்தும் நக்சல்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்… உங்களது ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு, ஏர் கலப்பையை ஏந்த முன் வர வேண்டும். இது உங்கள் நாடு, தோளோடு தோள் நின்று இதை முன்னேற்ற நீங்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றவாருங்கள். கவுதம புத்தரும் மகாத்மா காந்தியும் வாழ்ந்த மண்ணில் ஆயுதங்கள் ஏற்படுத்தும் கறைவேண்டாம்.

நான் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், எனது நினைவு எல்லாம் உங்கள் மீதே இருந்தது. விவசாயிகளின் முன்னேற்றம் நாட்டிற்கு அவசியமாக உள்ளது. எனது ஜப்பான் பயணத்தின் போது நோபல் பரிசுவென்ற விஞ்ஞானிகளை சந்தித்து விவசாயத்துக்கும் பாமரமக்களின் சுகாதார வசதிகளுக்கான வழிகள் குறித்தும் பேசினேன்.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறச்செய்த ஜார்கண்ட் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அதேபோல இந்தமாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்றார்.

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் இம்மாதம் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.