ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி யமைப்பதற்காக, தேர்தலுக்குப்பிறகு எந்த பிராந்தியக் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இரு பிராந்தியக் கட்சிகளுடனும் (தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி) பாஜக அரசியல் உறவு வைக்கவில்லை.

இந்தமாநிலத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக, எந்த பிராந்தியக் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது. ஒருவேளை தேசியளவிலான கட்சிகள் கைகோக்க விரும்பினால், அவர்களை எங்களுடன் சேர்த்து கொள்வோம்.

இங்குள்ள மக்களைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலையில்லை. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம் என்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர்.

இந்தமாநிலத்தில் பல ஆண்டுகளாக அநீதி இழைத்த அரசுகளிடம் இருந்து மக்கள் மீள்வதற்கு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

இந்த மாநிலத்தில் அரசியல்சட்டம் 370ஆவது சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

முந்தைய காலங்களில் மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் சிறிய கட்சியாக இருந்த பாஜக, அந்த மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது. அந்த நம்பிக்கையில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலு பாஜக போட்டியிடுகிறது.

ஜம்முகாஷ்மீரில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி) அமைக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரைக்கு ஜம்முகாஷ்மீர் மாநில அரசு இன்னமும் இடம் ஒதுக்கவில்லை.

அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவில் இருந்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்றார் ஜேட்லி.

Tags:

Leave a Reply