ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தில் தாக்குதல் நடத்த நக்சைலைட்டுகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இந்த இரு மாநிலங்களிலும் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் எல்லையில் தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீதும், போலீஸ் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு படையினர் அதை முறியடித்து விட்டனர்.

காஷ்மீரில் பிரதமர் பிரசாரம் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்ததால் மோடியின் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அடுத்ததாக பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5–ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சார கூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளார். இதையொட்டி நக்சலைட்டுகள் பற்றி உளவுதுறை ரகசிய விசாரணையில் ஈடுபட்டு அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.

மேலும் தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக நக்சலைட்டுகளை போலீசாரும், பாதுகாப்பு படையினரும் கைது செய்து வருகிறார்கள். அப்போது அவர்களிடம் இருந்து ஒரு 'லேப்–டாப்' கைப்பற்றப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் இயக்கிப் பார்த்த போது பிரதமர் மோடி பற்றிய தகவல்கள், அவரது சுற்றுப் பயண விவரங்கள் போன்ற தகவல்களும் சில வீடியோ காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.

பாராளுமன்ற தேர்தலின் போது மோடி பேசிய பொதுக்கூட்ட இடங்களும், அவர் கலந்து கொண்டு பேசியபோது எடுத்த காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்று இருந்தது. அத்துடன் சமீபத்தில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மோடி பிரச்சார வீடியோவும் இடம் பெற்று இருந்தது. இதன் மூலம் நக்சலைட்டுகள் பிரதமர் மோடி பிரசாரத்தின் போது தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இந்த வீடியோ பாதுகாப்பு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதை ஆய்வு செய்து வருகிறார்கள். தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் இதுபற்றி விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த வீடியோக்களில் பெரும்பாலும் பிரசார பொதுக்கூட்டங்களில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம் பெற்று இருந்தது. பிரதமர் வருகையின்போது எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. எவ்வளவு போலீசார் குவிக்கப்படுகிறார்கள் விவரங்களும் அடங்கி இருந்தது.

எனவே பிரதமர் மோடிக்கு நக்சலைட்டுகள் குறி வைத்துள்ளதையே இது உறுதியாகி காட்டுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிரதமர் மோடியின் பிரசார கூட்டங்களுக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உளவுதுறையினர் உத்தரவிட்டுள்ளனர். பொதுக்கூட்ட மேடை மட்டுமல்லாது மக்கள் கூடியிருக்கும் பகுதி, கூட்டம் நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த தாக்குதலையும் முறியடிக்கும் வகையில் போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மத்தியில் பாரதீய ஜனதா அரசு பதவி ஏற்றதும் ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மாநிலங்களில் நக்சலைட்டுகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 1–ம் தேதி சுக்மா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் தவிர பெரிய அளவில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply