பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நேற்று பகலில் ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிர வாதிகள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தி 132 பள்ளிக் குழந்தைகளை கொன்று குவித்தனர்.

இந்த படுகொலை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பக்கத்து நாடான இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை தாக்குதலைப் போல் பெஷாவரிலும் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதையடுத்து அனைத்து மாநில அரசுகளையும், பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துமாறும் மத்திய அரசு உஷார் படுத்தியுள்ளது.

சமீபத்தில் 'சிமி' இயக்க தீவிரவாதிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கு அவர்கள் 'ஓநாய் தாக்குதல்' என்று பெயரிட்டு இருப்பதாகவும் உளவுதுறைக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சிமி இயக்க தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள டெல்லி, மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தாக்குதல் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் உளவு அமைப்புகள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளது.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர்களும் டுவிட்டரில் இந்தியாவில் தாக்குதல் பற்றிய ரகசிய தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இவற்றையும் உளவுத்துறை கண்டுபிடித்து அதுபற்றிய ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையையொட்டி லஸ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியாவில் செயல்படும் உள்ளூர் தீவிரவாதிகளும் தாக்குதலுக்கு சதி திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிதாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு தெரிவித்துள்ளது. குறிப்பாக பள்ளிக் கூடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நேற்று பாகிஸ்தானில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மாலையிலேயே இந்த புதிய எச்சரிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பி உள்ளது.

அதில் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து பள்ளிக் கூடங்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்கவும், அனைத்து பள்ளிக் கூடங்களின் வரை படத்தை போலீசார் வைத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மாநில அரசு பள்ளிகள் தவிர மத்திய அரசு பள்ளிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளிகளில் தீவிரவாதிகள் புகுந்தால் எப்படி சமாளிக்க வேண்டும், எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்ற யோசனைகளை தெரிவித்து இருப்பதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து பள்ளி – கல்லூரிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகைகளும் உடனடியாக தொடங்கப்பட்டன.

Tags:

Leave a Reply