ஜப்பானின் டோக்கியோ நகரைச்சேர்ந்த மார்க்கெட் மீளாய்வு அமைப்பான GMO, சுமார் 26 000 ற்கும் அதிகமான மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றின் படி உலகில் மிகச்சிறப்பாக கடமையாற்றி வரும் உலகத் தலைவர்களில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் முதல் இடத்தினையும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது இடத்தினையும் ஜேர்மன் சேன்சலர் ஏஞ்சலா மெர்கெல் 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தமது தலைவர்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் இக்கருத்து கணிப்பில் ஓர் அளவீடாகப் பாவிக்கப்பட்டது. இதில் ஜீ ஜின்பிங் 10 இற்கு 7.5 புள்ளி களையும், மோடி 7.3 புள்ளிகளையும், மேர்கெல் 7.2 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமா 6.6 புள்ளிகளுடனும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரூன் 6.5 புள்ளிகளுடனும் பிரெஞ்சுஅதிபர் ஹொல் லாண்டே 6.3 புள்ளிகளுடனும், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே 6.1 புள்ளிகளுடனும், ரஷ்ய அதிபர் புடின் 6 புள்ளிகளுடனும் உள்ளனர். இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் ஹார்வார்ட் கென்னெடி பள்ளியின் ஜனநாயக ஆட்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான ஆஷ்பிரிவால் வெளியிடப்பட்டதுடன் இது குறித்த பள்ளியிலுள்ள சீன நிபுணரான அந்தோனி சைஹ் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.

ஆசியாவில் இருந்து 12 நாட்டு தலைவர்கள், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து 4 நாட்டுத் தலைவர்கள், ஐரோப்பாவிலிருந்து 8 நாட்டுத்தலைவர்கள் மற்றும் அவுஸ்திரேலியா நியூசிலாந்து ஆகியவற்றில் இருந்து இருநாட்டுத் தலைவர்கள் என மொத்தம் 30 நாட்டுத்தலைவர்கள் மத்தியில் இந்த சர்வே நடத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply