எதிர்க் கட்சிகள் ஒத்துழைத்தால் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், ஒருமித்த கருத்து ஏற்பட்டால், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில்கொண்டே, கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவருவோம் என பாஜக அறிவித்திருந்தது. ஆனால், அதுவும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். ஒருமித்த கருத்து ஏற்படாத வரை, அதுபோன்ற சட்டம் எதையும் மத்திய அரசு கொண்டு வராது.

மாநில அரசுகளின் சட்டங்கள் உறுதியாக இல்லை என்றால், அகில இந்திய அளவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில், இதுதொடர்பாக மத்திய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், அதுகுறித்து எதிர்க்கட்சிகள் சாதகமான பதிலை த் தெரிவிக்கவில்லை.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து, மதமாற்றம் நடந்து வருகிறது. தாய் மதத்துக்குத் திரும்புவது கெட்டது என்றால், மதமாற்றமும் கெட்டதுதான். மதமாற்றம் நல்லது என்றால், தாய் மதத்துக்குத் திரும்புவதும் நல்லதுதான். இதை மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தி, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அது தவறாகும். அப்போது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது தவறு. காங்கிரஸ் கட்சி உருவாக்கி வைத்துள்ள வாக்கு வங்கி அரசியலுக்குதான் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாடு தற்போது அமைதியாக உள்ளது. எங்கும் வகுப்புவாத மோதல்கள் நடைபெறவில்லை. வளர்ச்சி மீதே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நல்ல சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன.

நாதுராம் கோட்úஸவுக்கு சிலைகள் அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என ஹிந்து மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. கோட்úஸவுக்கு சிலை அமைக்க அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

இதனிடையே, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "கட்டாய மதமாற்றத்தில் பாஜகவுக்கு உடன்பாடு கிடையாது. நாட்டில் எங்கு நடைபெற்றாலும், பாஜக அதை எதிர்க்கும். இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் அதற்குத் தயாராக இல்லை.

விவாதம் நடத்த ஒப்புக் கொண்டால், தங்களின் வேஷம் வெளிப்பட்டு விடும் என்பதை அக்கட்சிகள் உணர்ந்துள்ளன. இதனாலேயே இவ்வாறு செயல்படுகின்றன' என்றார்.

Leave a Reply