முன்னாள் பிரதமர் அடல்பீகாரி வாஜ்பாய் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் இந்து சமாஜ் இயக்க தலைவருமான மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வாஜ்பாயின் 90வது

பிறந்த நாள் நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரை கவுரவிக்கும்விதமாக மத்திய அரசு இந்தவிருதினை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஜ்பாய், இரண்டு முறை பிரதமராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக சிறந்த பார்லிமென்ட்டேரியனாக பரிமளித்தவர். அரசியல் துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. . பாரத ரத்னா விருது பெறும் 42வது நபர் வாஜ்பாய். இவரது 90வது பிறந்த நாளை நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், வாஜ்பாயை மேலும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா வழங்க, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டு வந்தது.
வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, வாஜ்பாய் மற்றும் மாளவியாவிற்கு பாரதரத்னா வழங்க ஒப்புதல் தெரிவித்தார்.

மதன் மோகன் மாளவியா, சுதந்திர போராட்டவீரர் மட்டுமின்றி, இந்து மகா சபாவை தோற்றுவித்த வரும் ஆவார். 'மகாமன்னா' என அனைவராலும் போற்றப்பட்ட புகழ் பெற்ற கல்வியாளரும் கூட. வாரணாசியில் இருக்கும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த வரும் மாளவியா தான். இதனால் ஆட்சி பொறுப்பேற்றதும் இவருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளிவித்திருந்தார். இதன்படி தற்போது மாளவியாவி்ற்குள் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் வரவேற்பு : வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப் பட்டுள்ளதற்கு பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானி, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாரபட்சமின்றி ஒருமித்த குரலாக நாடுமுழுவதிலும் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். தங்கள் குடும்பத்திற்கு கிடைத்துள்ள கவுரவம் என வாஜ்பாயின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply