நாடு முன்னோக்கி செல்வதற்கு வளர்ச்சியும் நல்லாட்சியும் தான் ஒரேவழி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதியை நல்லாட்சி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந் நாளில் மோடி தனது சொந்தத் தொகுதியான வாராணசிக்கு வியாழக் கிழமை சென்றார். அதேபோல் கட்சியின் மற்ற எம்.பி.க்களையும் இந்நாளில் அவரவர் சொந்த தொகுதிகளில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தில்லியில் இருந்து வாராணசி புறப்படும் முன் மோடி, வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "நாடு முன்னோக்கிச் செல்வதற்கு வளர்ச்சியும் நல்லாட்சியும் தான் ஒரேவழி. நாம் இணைந்து மக்களின் வாழ்வில் நல்விளைவை ஏற்படுத்துவதோடு, வளர்ச்சி யடைந்த இந்தியாவை உருவாக்குவோம்' என்று தெரிவித்தார்.

பின்னர், அவர் தனிவிமானம் மூலம் வாராணசி வந்தார். அவரை உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும், மாநில அமைச்சர் அகமது ஹசனும் வரவேற்றனர்.

பின்னர் வாராணசியில் அமைந்துள்ள ஹிந்து பல்கலைக் கழகத்துக்கு மோடி சென்றார். அங்கு நடைபெற்ற நல்லாட்சிதின நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த இந்த நாட்டில்தான், பெண் சிசுக்கொலை என்ற கொடியவழக்கமும் உள்ளது. இதை விடப்பெரிய பாவம் வேறெதுவும் இல்லை.

பெண் சிசு கொலையை தடுப்பதற்கும், தூய்மையின் அவசியம் குறித்தும் கவியரங்குகளை நடத்தலாம் என்றார்.

இந்த 21ம் நூற்றாண்டில் உலகில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. உலக அளவில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்கவேண்டும். அதையடுத்து, ஹிந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனரான மதன் மோகன் மாளவியாவின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ரூ.900 கோடி மதிப்பிலான தேசிய ஆசிரியர் பயிற்சித்திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்.

இதையடுத்து, வாராணசியில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள அஸ்ஸிகாட் பகுதியில் நடைபெற்ற "தூய்மை இந்தியா' திட்டப் பணியில் மோடி பங்கேற்றார்.

அத்துடன், அஸ்ஸிகாட் பகுதியில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்துக்கு செல்லும் வழியை துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்தார். மேலும், "தூய்மை இந்தியா' திட்டத்தின் தூதுவர்களாக நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ்கங்குலி, பாலிவுட் நகைச் சுவை நடிகர் கபில்சர்மா, நாட்டிய கலைஞர் சோனல் மான் சிங், ஈநாடு குழும தலைவர் ராமோஜிராவ், இந்தியாடுடே குழுமத்தின் அருண் பூரி ஆகியோரைத் தேர்வு செய்து அறிவித்தார்.

Leave a Reply