ஜார்க்கண்ட் மாநில சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் பா.ஜ.க.,வும் அதன் கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பும் சேர்ந்து (37+5) 42 இடங்களை கைப்பற்றியது. அங்கு முதல்மந்திரியை தேர்வு செய்வதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்எல்ஏ.க்கள் கூட்டம் ராஞ்சியில் இன்று காலை நடந்தது.

இதில் மேலிட பார்வையாளர்களாக பா.ஜனதா தலைவர்கள் ஜெ.பி.நத்தா, வினய் சகஸ்ர புத்தே ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்–மந்திரி பதவிக்கு முன்னாள் துணை முதல்– மந்திரியும், பா.ஜனதா தேசிய துணைத் தலைவருமான ரகுபர்தாஸ் பெயரை மேலிட தலைவர்கள் முன்மொழிந்தனர். அதை எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து ரகுபர்தாஸ் முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரகுபர்தாஸ் பழங்குடி இனத்தவர் அல்லாதவர் ஆவார். ஜார்க்கண்ட்டில் 32சதவீதம் பேர் பழங்குடியின மக்கள் ஆவார்கள். ஜார்க்கண்ட் மாநிலம் உருவானதில் இருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதல்– மந்திரிகளாக இருந்துள்ளனர். தற்போது ரகுபர்தாஸ் முதலாவது பழங்குடி இனத்தவர் அல்லாத முதல்– மந்திரி ஆவார்.

ஜார்க்கண்ட்டில் இதுவரை 9 அரசுகள் ஆட்சி செய்துள்ளன. 3 முறை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. பா.ஜனதா 2000–ம் ஆண்டு (பாபுலால் மாரண்டி), 2003 (அர்ஜுன் முண்டா), 2010 (அர்ஜுன் முண்டா) என 3 முறை ஆட்சி செய்தது. இப்போது பா.ஜனதா மீண்டும் 4–வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

மாநிலக்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தான் அங்கு செல்வாக்கு பெற்று இருந்தது. சிபுசோரன் 3 முறையும், அவரது மகன் ஹேமந்த் சோரன் ஒரு முறையும் முதல்–மந்திரி பதவி வகித்தனர். கடைசியாக ஹேமந்த் சோரன் முதல்– மந்திரியானார். ஆனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செல்வாக்கை பிரதமர் மோடியின் பிரசாரம் தகர்த்து விட்டது. தேர்தல் தோல்வியால் ஹேமந்த்சோரன் கடந்த 23–ந்தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

5 நாட்களுக்கு ஹேமந்த் சோரனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. எனவே புதிய அரசு வருகிற 30–ந்தேதி பதவி ஏற்கிறது. ஜார்க்கண்ட் முதல்– மந்திரியாக பதவி ஏற்கும் ரகுபர்தாஸ் சத்தீஷ்கர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரது தந்தை ஜாம்ஷெட்பூருக்கு குடிபெயர்ந்து டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.

ரகுபர்தாசும் டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்தார். பா.ஜனதா மாணவர் அமைப்பில் சேர்ந்தார். பின்னர் பா.ஜனதா உறுப்பினர் ஆனார். சமீபத்தில் இவரை தேசிய துணைத்தலைவராக கட்சி தலைவர் அமித்ஷா நியமித்தார். இந்த தேர்தலில் ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ரகுபர்தாஸ், ஜார்க்கண்ட் மாநில பா.ஜனதா தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார்.

Leave a Reply