மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் நல்லாட்சி தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இதுதொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக நாகர் கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உயிர்காக்கும் ரத்தம் சேகரிக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதற்காக தனிக்கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்.

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதை ஒட்டுமொத்த நாடே வரவேற்கிறது. நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக வாழ்ந்த வருக்கு தான் விருது வழங்கப் பட்டுள்ளது.

இதுபோன்ற விருதை வழங்குவதற்கு ஒருகுழு உள்ளது. அந்த குழுவினர் தான் யாருக்கு விருதுவழங்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.

பெரியார், அண்ணாவுக்கு இந்தவிருது வழங்கப்படுமா? என கேட்கிறார்கள். யாருக்கும் வழங்கக் கூடாது என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.

ரெயில்வே துறையினை தனியார் மயமாக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தனியார்மயம் என்பது வேறு, முற்றிலும் தனியார் மயமாக்கல் என்பதுவேறு. நாங்கள் முற்றிலும் தனியார் மயமாக்கலை எதிர்க்கிறோம்.

இலங்கை தமிழர்கள் வாழ்வு வளம்பெற வேண்டும். அவர்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பாஜக கூட்டணிக்கு யாரும் வரலாம். இக்கூட்டணியில் இருந்து சிலகட்சிகள் வெளியேறும் என்று கூறுவதை ஏற்கமாட்டேன்.

பாஜக கூட்டணிக்கு வருவது ஒரு வழிபாதை. இந்த கூட்டணியில் இடம் பெற்ற யாரும் இங்கிருந்து திரும்பி செல்லக் கூடாது. அதுதான் எங்களின் விருப்பம்.என்று அவர் கூறினார்.

Leave a Reply