மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சிநகரில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கராச்சி நகரிலிருந்து தாவூத் இப்ராகிம் தனது உதவியாளர்கள் மற்றும் தொழில்ரீதியான நண்பர்களுடன் பேசியதை இடைமறித்து ஐரோப்பிய உளவுத் துறை கேட்டது. இதன்படி, தாவூத் பாகிஸ்தான் கராச்சி நகரில் பதுங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

ஐரோப்பிய உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 20 ஆண்டுகளாக தாவூத் பாகிஸ்தானில்தான் இருந்து வருகிறான். ரியல் எஸ்டேட் தொழிலில் உலகின் பலநாடுகளில் கொடிகட்டி பறக்கும் தாவூத், பாகிஸ்தானின் கராச்சி நகரில் தனக்கென ஒருதொழில் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறான். மேலும் உலகம் முழுவதும் நடக்கும் பயங்கரவாத தாக்குதல் திட்டங்களுக்கு கோடிக் கணக்கான பண உதவி செய்து வருகிறான்.

தனது தொழில் சாம் ராஜ்யத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக துபாயில் உள்ள தனது தொழில் நண்பர்களுடன் நடத்திய உரையாடல் களையே ஐரோப்பிய உளவுத் துறை வெளியிட்டுள்ளது. தாவூத்தின் உரையாடல் குறித்த விபரங்கள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. அந்த உரையாடலில் தாவூத் பேசுகையில், நான் இங்கிருந்தாலும் உலகம் முழுவதிலும் இருந்து எனக்கு தகவல் வந்துகொண்டுள்ளது. பிரதமர் மக்களைத் தேடிச்சென்று குறைகளை கேட்பதில்லை. மக்கள்தான் அவரை தேடிச் சென்று குறைகளை கூறுகிறார்கள். அவரும் முடிவு எடுக்கிறார்.

அதுபோல் தான் நானும். ஒரு பொருளை விற்ற பிறகுதான் அடுத்த பொருளை வாங்க வேண்டும். அப்படி முடியாவிட்டால் அதில் 25 சதவீதம் பங்கை எங்களிடம் தனியாக தந்துவிட வேண்டும். எங்களுடைய பங்கையும் சேர்த்து விற்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

கம்பெனிகளின் நஷ்டங்கள் எங்களை பாதிக்கக்கூடாது என்பதுதான் எங்களின் ஒப்பந்தம். செய்யும் தொழிலில் உங்களுக்கும பங்குண்டு என்பதால் அந்த நஷ்டம் உங்களை சேர்ந்ததுதான். இதில் நான் சம்பந்தப்பட முடியாது. இதற்காக நான் எந்த கோர்ட்டுக்கும் செல்லமுடியாது. ஏனென்றால் என்னை பொருத்தவரை எனக்கு நான்தான் கோர்ட். நான்தான் நீதிபதி. எனக்கு வேறு எவரின் நீதியும் தேவையில்லை. யாரிடம் இருந்து எப்படி தகவலை பெறுவது என்பது எனக்குதெரியும் என தெரிவித்துள்ளான்.

தாவூத்தின் இந்த உரையாடல் பதிவுகளும், அவனது தொழில் சாம்ராஜ்யம் தொடர்பான போட்டோக்களும் அவன் பாகிஸ்தானில்தான் மிகவும் பாதுகாப்பாக உள்ளான் என ஐரோப்பிய உளவுத் துறை உறுதி செய்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ தான் தாவூத்தை பாதுகாத்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் ஐரோப்பிய உளவுத் துறை அளித்துள்ளது.

Leave a Reply