டெல்லி சட்டப் பேரவை தேர்தலுக்கான பாஜக பிரசாரத்தில், முதல்முறையாக வரும் 10ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச உள்ளார்.

டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் . பாஜக பல்வேறு கட்டங்களாக தன்னுடைய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட பிரசாரத்தில், அக்கட்சியின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 எம்பி.க்கள் கலந்துகொண்டு பேசினர். இந்நிலையில், அடுத்த கட்டமாக இன்று முதல் 2வது கட்டபிரசாரத்தை பாஜக தொடங்குகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு 70 கூட்டங்களை நடத்த கட்சியின் தலைமை முடிவுசெய்துள்ளது. இதில், கட்சியின் உள்ளூர் எம்.பி.க்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

இதற்கிடையே, பாஜக பிரசாரத்துக்கு மேலும் உத்வேகம் அதிகம் அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச முடிவு செய்துள்ளார். இதன்படி, வரும் 10ம்தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிரமாண்ட பாஜக பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச உள்ளார்.

பிரதமரின் கூட்டத்துக்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்களை அழைத்துவர பாஜக தலைவர்கள் தயாராகி வருகின்றனர். பிரதமரின் பிரசாரத்துக்கு பின்பு, நாடுமுழுவதும் இருந்து முக்கியமான பாஜக தலைவர்களை டெல்லிக்கு அழைத்துவந்து பிரசாரத்தில் ஈடுபடுத்த கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது.

Leave a Reply