ஒரு சினிமாவை எடித்து முடித்து ரிலீஸ் செய்யும் நேரத்தில் 'குடைச்சல்' கொடுக்கும் வழக்கம், நம்மூரில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் சகஜம் போல! வடகொரிய அதிபரைக் கிண்டல் செய்து தயாரிக்கப்பட்ட "தி இன்டர்வியூ' படத்தை திரையிடும் தியேட்டர்களை குண்டுவைத்து தகர்ப்போம்' என்று 'இன்டர்நெட்'டில் மிரட்டியிருக்கிறது மர்ம கும்பல். இதனால் பயந்துபோன சோனி நிறுவனம், படத்தின் ரிலீஷை தள்ளி வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள முன்னனி சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சோனி. இது கிறிஷ்துமஷ் பண்டிகையையொட்டி, 'தி இன்டர்வியூ' என்ற படத்தினை ரிலீஸ் செய்வதாக அறிவித்தது. தற்போது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்த முழுப்படத்தையும் ஹேக்கர்கள் திருடிவிட்டதாக புகார் கூறியிருக்கும் சோனி நிர்வாகம், தங்கள் ஊழியர்களின் இ-மெயில் கணக்குகளையும் அபகரித்ததாகச் சொல்லியிருக்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது வடகொரிய அரசு' என்று குற்றம் சாட்டியிருக்கிறது சோனி நிறுவனம்.

'வடகொரியாவுக்கும் இவ்வியக்கங்களுக்கும் என்ன வாய்க்கா தகராறு' என்பவர்கள், முதலில் 'தி இன்டர்வியூ' படத்தின் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். கதைப்படி அமெரிக்கப் புலனாய்வுப் படையைச் சேர்ந்த சேத் ரோஜனும் ஜேம்ஸ் பிராங்கோவும் வடகொரியா செல்கிறார்கள். 'பேட்டி எடுக்கிறேன் பேர்வழி' என்று அதிபரைக் கொல்ல அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், காமெடி எக்ஸ்பிரஸாக இருக்குமாம். நம்மூர் சந்தானம் போல, காமெடி கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் சேத் ரோஜன். இது ஒன்றே போதும், படத்தின் தரத்தைச் சொல்ல!!

இதனால் படத்தின் 'பப்ளிசிட்டி'க்காக, வடகொரிய கனெக்க்ஷனை ஆரம்பத்திலேயே அறிவித்தனர் தயாரிப்பாளர்கள். அப்போது அவர்களின் காலைச் சூற்றிய ஏழரை, இப்போது வரை பின்னிப் பெடலெடுக்கிறது. ஏனென்றால், வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்! தன்னை எதிர்த்த கியூபா, ரஷ்யா, லத்தீன், அமெரிக்க நாடுகளை, மோசமான வில்லனாகவே காட்டும் வழக்கம் ஹாலிவுட்டுக்கு உண்டு.

வடகொரிய அதிபர் தும்மல் போட்டாலே செய்திகளை வெளியிடும் அமெரிக்க மீடியாக்கள் படத்தைப் பற்றிய செய்திகளை தாறுமாறாக 'அப்டேட்' செய்தன. ஏற்கெனவே கடுப்பில் இருந்த வடகொரியா, உலக அரங்கில் தனது கோபத்தை வெளிக்காட்டத் தொடங்கியது.

கடந்த ஜூன் மாதமே, இந்தப் படத்தை தடை செய்ய வேண்டுமென்று ஐ.நா.சபையில் புகார் தெரிவித்தார் வடகொரிய தூதர் ஜா சாங் னாம். "அமெரிக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, இதனை நிறுத்த வேண்டும். இல்லையெனில், தீவிரவாதத்தை உருவாக்குவதற்கான முழுப்பொறுப்பையும் அமெரிக்கா ஏற்க வேண்டியிருக்கும்" என்று அவர் எச்சரித்தார்.

'நம்மளை இல்ல, சோனியைப் பார்த்து சொல்றாருப்பா' என்று அமெரிக்க அரசும், அப்போது 'ரியாக்க்ஷன்' காட்டவில்லை. ஆனாலும் எதற்கு வம்பு என்று நினைத்த சோனி எண்டர்டெயின்மென்ட் அதிகாரி அமி பாஸ்கல், படத்தின் கதையில் மாற்றம் செய்வதாக அறிவித்தார். ஆனால் அந்த மாற்றத்தின் அளவு மில்லி மீட்டரா, கிலோ மீட்டரா என்பதை மட்டும் சொல்லவில்லை.

கத்திரிக்காய் முற்றினால், கூவிக்கூவித்தானே விற்க வேண்டும். படத்தின் 'ப்ரோமோ'க்கள் வரத் தொடங்க, வடகொரிய அதிபரை வருத்தெடுத்திருந்தது 100 சதவிகிதம் உறுதியாகியிருக்கிறது. இதற்குப் பிறகே, ஹேக்கர்களின் திருவிளையாடல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

முதலில் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் திரைக்கதை நெட்டில் வெளியானதில் சோர்ந்து போனது சோனி. அதன்பின்பு, நிறுவனத்திலிருந்த கம்ப்யூட்டர்களில் இருந்து 'தி இன்டர்வியூ' படத்தை 'ஹேக்' செய்தபோது அதிர்ச்சியில் உறைந்தது. தற்போது சோனி நிறுவனத்தின் மேலதிகாரிகள் மேற்கொண்ட இ-மெயில் பரிமாற்றங்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது அந்த மர்மக்கும்பல். இதனால் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் தொடர்ச்சியாக வெளிவருவதில், சோனி படு அப்செட்டாம்!

வடகொரியாவிற்கு வெளியேயிருந்து இந்த 'ஹேக்கிங்' நடந்திருப்பதை உறுதி செய்திருக்கும் அமெரிக்க அதிகாரிகள், 'இதற்கும் வடகொரியாவிற்கும் சம்பந்தம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை' என்று 'சப்பைக்கட்டு' கட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில், படத்தின் ரிலீஷை தள்ளிவைப்பதாகச் சொன்ன சோனி நிர்வாகம், "மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே, இந்த முடிவை எடுத்திருக்கிறோம்" என்றிருக்கிறது.

'இருக்கும் இடத்தில் இருந்தே, எங்கேயோ இருக்கும் ஒரு நிருவனத்தை ஆட்டுவிப்பதை வெளிக்காட்டியிருக்கிறது 'ஹேக்கிங்' விவகாரம். ஹேக்கர்கள் உதவியுடன், சோனி நிர்வாகத்தை முட்டுச்சந்தில் தள்ளியிருக்கிறது வடகொரியா' என்று பொரிந்து தள்ளியிருக்கின்றன அமெரிக்கப் பத்திரிக்கைகள். ஆனாலும், வடகொரியா தரப்பில் இருந்து பதில் ஏதுமில்லை.

தற்போது 'தி இன்டர்வியூ' படத்தினை இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இது சோனி கோபத்தில் எடுத்த முடிவா? அல்லது வடகொரியாவைக் கிளப்பி விடச் செய்த குசும்பர்களின் சதியா என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். உலக அரங்கில் வடகொரியாவின் முதுகைச் சொரிந்து விட்டிருக்கியது 'தி இன்டர்வியூ' திரைப்படம். 'படம் வெளியானால், போர் மூளும் அபாயம் இருக்கிறது' என்ற மர்மக்கும்பலின் மிரட்டலுக்கு, பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது அமெரிக்கா.

ஜப்பானிய நிறுவனமான சோனி ஹாலிவுட்டில் கோலோச்சினாலும் இந்த விவகாரம் ஜப்பான் மற்றும் வடகொரிய அரசுகளின் உறவைப் பாதிக்கும் என்ற விவாதம் எழுந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்தே, 'சோனி நிறுவனம் மோசமான நிலைக்குத் தள்ளப்படாமல் பாதுகாக்கும் நிலையில் இருக்கிறேன்' என்று சோனி என்டர்டெயின்மென்ட் கோ சேர்மன் அமி பாஸ்கல் படக்குழுவிடம் தெரிவித்திருக்கிறார். 'இந்தப் படத்தை ரிலீஸ் செய்தால், வருங்காலத்தில் சோனி தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் இதே கதிதான்!' என்ற ஹேக்கர்களின் எச்சரிக்கையினால், ஹாலிவுட்டின் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் ஆடிப்போயிருப்பது உண்மை!

நன்றி : குமுதம்
பா.உதய்

Tags:

Leave a Reply