கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்' என்பது போல, ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தன் 'பாய்ச்சலை' காட்டியிருக்கிறது பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஆட்சியைக் கைப்பற்றியதைவிட, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியானது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களவையில் கிடைத்த வெற்றியைத் தக்க வைக்க, எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க பலம் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். அதன் வேகம், நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தல்களிலும் எதிரொலித்திருக்கிறது. மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிய பா.ஜ.க.வால், ஜார்க்கன்ட் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இப்போது அதற்கு, 'முடியும்' என பதில் கிடைத்திருக்கிறது.

கடந்த நவம்பர் 25 முதல் 5 கட்டங்களாக நடந்த ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆட்சியைப் பிடித்தாலும், காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, தொங்கு சட்டசபை அமையும் என்றே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அது உண்மையாகியிருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ.க, காங்கிரஸ் என்று நான்குமுனைப் போட்டியில் ஓட்டுகள் சிதறியிருக்கிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தமுள்ள 87 தொகுதிகளில் சுமார் 65 சதவிகித வாக்குகள் பதிவானது. சமீபத்தில் வெள்ளத்தினால் காஷ்மீர் தத்தளித்தபோது மத்திய அரசின் நிவாரண உதவிகள், ஜனநாயகத்தின் மீதான காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்தது. இது பா.ஜ.க.விற்குக் கிடைத்த வெற்றியில் பிரதிபலிக்கிறது.

கடந்த 2008 தேர்தலில் 11 இடங்களில் மட்டும் பிடித்த பா.ஜ.க., தற்போது 25 இடங்களைப் பிடித்திருக்கிறது. ஜம்மு பகுதியில் தனது செல்வாக்கை அதிகப்படுத்தியிருக்கிறது பா.ஜ.க.
'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370-வது பிரிவை நீக்க வேண்டும்' என்று கடந்த காலத்தில் வலியுறுத்திய பா.ஜ.க., தேர்தலின்போது மறந்தும் அது பற்றிப் பேசவில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்கவில்லை.

உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15 தொகுதிகளில் வென்று மூன்றாம் இடம் பிடிக்க, 12 இடங்களுடன் 4–ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ். பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த முன்னாள் பிரிவினைவாதி சஜ்ஜத்கனி லோன் வெற்றி பெற்றிருக்கிறார். அதே போல், கலக்கோட்டே தொகுதியில் வென்றுள்ளார் அப்துல் கலிகோலி. இவர் பா.ஜ.க. சார்பாக, காஷ்மீரில் வென்ற முதல் முஸ்லிம் வேட்பாளர். இப்படி பல ஆச்சரியங்களைத் தந்த இந்தத் தேர்தல், முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது. சோனாவர் தொகுதியில் தோல்வியுற்ற இவர், பீர்வாவில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றியிருக்கிறார்.

"ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஷிற்கு எதிராகவே, மக்கள் ஓட்டளித்திருக்கின்றனர். இதனை உணர்ந்து, கூட்டணி அரசு அமைய வேண்டும்" என்ற குரல், தற்போது எழுந்திருக்கிறது. இதனால் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீத்தை நோக்கிப் பார்வையைத் திருப்பியிருக்கிறது பா.ஜ.க.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், "வளர்ச்சி மற்றும் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு பாடம். எனவே கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. வெளியிலிருந்து ஆதரவு தரவோ, எதிர்க்கட்சி வரிசையில் அமரவோ நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.

"மக்கள் ஜனநாயக கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்" என குலாம்நபி ஆசாத் கூறியிருக்கிறார் காங்கிரஷூடன் சேர்ந்தால், சுயேச்சைகள் அல்லது மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் தேவைப்படும். இது நிலையில்லாத ஆட்சியாக இருக்கும். அதே போல் காங்கிரஷூடன் கூட்டணி சேர்ந்தால், எதிக்கட்சி அரசாக மாறி, மத்திய பா.ஜ.க. அரசிடம் எதிர்பார்த்த உதவிகளை பெற வாய்ப்பில்லாமல் போகலாம். பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சியமைத்தால், மத்திய அரசிடம் தேவையானதை எளிதாகப் பெறலாம். இதனால், முப்தியின் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இதையே அதிகம் விரும்புவார்கள். காங்கிரஸா, மத்திய அரசில் உள்ள பா.ஜ.க.வா என்று உடனடியாக முடிவெடுக்க முடியாமல், 'நாங்கள் பொறுமையாக யோசித்து முடிவெடுப்போம்' என்று மெகபூபா கூறியிருக்கிறார்.

 

கடும்குளிர், வெள்ளபாதிப்புகள், எல்லையில் நிகழ்ந்த தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகளோடு, தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்ற தீவிரவாத இயக்கங்களின் மிரட்டல் வேறு மக்களை அச்சுறுத்தியது. இத்தனையையும் மீறி வாக்குச்சாவடிக்கு வந்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற, புதிய அரசு 6 ஆண்டுகள் முழுமையான ஆட்சியைத் தரவேண்டும். இந்த வகையில், ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக பா.ஜ.க. உருவெடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஜார்க்கண்டில் நிலையான ஆட்சி!

'இனிமேல்தான் நிலையான ஆட்சி’ என்று தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் குதூகலிக்கிறார்கள் ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. தொண்டர்கள். காரணம், அந்த மாநிலத்தின் கடந்த கால வரலாறு அப்படி.

கடந்த 2000-ம் ஆண்டில், பீகார் மாநிலத்தில் இருந்து தனியாகப் பிரிந்து உதயமானது ஜார்க்கண்ட். இங்கு தொடக்கம் முதலே, பா.ஜ.க.வின் ஆதிக்கம் அதிகம். ஆனாலும், கடந்த 15 ஆண்டுகளில், ஜார்க்கண்ட் மாநிலம் 9 முதல்வர்களையும் 3 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியையும் கண்டிருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்களில், இங்கு எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை. இதனை உணர்ந்த பா.ஜ.க., 'இந்தமுறை அந்த தவறைச் செய்யாதீர்கள். நிலையான ஆட்சிக்கு வழிகாட்டுங்கள்' என்றே பிரசாரம் செய்தது. ஜார்க்கண்ட் மாணவர்கள் அமைப்புடன் கூட்டணி சேர்ந்தது. பா.ஜ.க. தொண்டர்களுக்குக் கூடுதல் உத்வேகத்தைத் தந்தது.

இதனை எதிர்த்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் களமிறங்க, மும்முனைப் போட்டி உருவானது. இதற்கிடையில் பீகாரில் செல்வாக்கு பெற்ற லாலு-நிதீஷ் கூட்டணியும் ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா போன்ற உதிரிக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன.

ஆனாலும் மொத்தமுள்ள 81 இடங்களில், 42ஐ பிடித்திருக்கிறது பா.ஜ.க. கூட்டணி. கடந்த 2009 தேர்தலில், இங்கு 18 இடங்களை மட்டுமே பிடித்தது பா.ஜ.க .

தற்போதுதான், ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சி மரபு முடிவுக்கு வந்து நிலையான ஆட்சி அமைகிறது. முதல்வர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட அர்ஜுன் முண்டாவின் தோல்வி, அவரே எதிர்பாராதது. இவர் மட்டுமின்றி, பாபுலால் மராண்டி, மதுகோடா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களும் தோல்வியடைந்திருக்கின்றனர். 'தோல்வியடைந்தாலும் அர்ஜுன்முண்டா கட்சியின் முக்கியமான தலைவர்தான்' என்றிருக்கிறார் அமித்ஷா. ஆனாலும், கட்சியின் தேசிய துணைத் தலைவரான ரகுபர்தாஷ் முதல்வராகலாம் என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.

புதிய முதல்வருக்கு பொறுப்புகள் மிக அதிகம். ஊழல் குற்றச்சாட்டுகள், சுயலாபத்திற்காக கூட்டணி முறிவு என்று கடந்த 15 ஆண்டுகளில், நிறையவே பார்த்துச் சலித்துவிட்டார்கள் ஜார்க்கண்ட் மக்கள் அதிக கனிமவளம் கொண்ட பகுதிகளை சுரண்டி சுகம் கண்டன முந்தைய அரசுகள். இதன் எதிரொலியாக வளர்ந்து வரும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை வேரறுக்கும் கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி : குமுதம்
பா. உதய்

Tags:

Leave a Reply