பிரதமர் நரேந்திர மோடியின் 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ் டெல்லியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் முழுமையாக இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள்நிதி திட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையிலான புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 28-8-2014 அன்று புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், வங்கிகணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவையில்லை. வங்கிகணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி நாடுமுழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, இந்த வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மாநில அரசு துறைகளின் திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படும். இந்த திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ருபே கிசான் அட்டைகளை வழங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்ததிட்டத்தை டெல்லி யூனியன் பிரதேசம் 100 சதவீதம் அளவுக்கு நிறைவேற்றி விட்டதாகவும் 31 லட்சத்து 63 ஆயிரத்து 579 குடும்பங்களுக்கு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு 'ஆதார்' திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி வருவாய்த் துறை செயலாளர் எஸ்.என். சஹாய் இன்று தெரிவித்தார்.

Leave a Reply