21 ம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நவீனநகரங்கள் இருக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நாடுமுழுவதும் 100 நவீன நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் டில்லியில் மோடி தலைமையில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் பிரதமர் அலுவலகம், மத்திய நகர்ப்புறவளர்ச்சி அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:இந்த 21ம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு தக்கவகையில் நவீன நகரங்கள் இருக்கவேண்டும். நகர்ப் புறங்களில் வசிக்கும் மக்களையும், நகர்ப் புறங்களைச் சார்ந்துள்ள மக்களையும் மனதில் கொண்டு இதற்காக திட்டமிட வேண்டும்.இந்த நவீன நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக திகழவேண்டும். இதற்காக, நகர்ப்புறவளர்ச்சி தொடர்புடைய சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.நவீன நகரங்களை உருவாக்குவதில் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை ஆகியவை முக்கியப்பங்கு வகிக்க வேண்டும்.

நவீன நகரங்கள் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக நகரநிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்துவது இருக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கு வலிமைசேர்க்க வேண்டும் என்றார் பிரதமர்.

100 ஸ்மார்ட் சிட்டிகளில் காஞ்சிபுரம், மதுரா

* நாடுமுழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும் என்று மோடி கூறியிருந்தார். அதன் படி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட போது, வாரணாசி-ஜப்பானின் க்யோடா நகரங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

* இந்த ஒப்பந்தத்தின் படி நாடுமுழுவதும் உள்ள 15 பாரம்பரிய கோயில் நகரங்கள் உள்ப்பட 100 இடங்களில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன.

* வாரணாசியை தொடர்ந்து, காஞ்சிபுரம், அமிர்தசரஸ், அஜ்மீர், கயா, மதுரா உள்ளிட்ட 15 பாரம் பரிய, கோயில் நகரங்களும் இந்த 100 நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

* அதிக பக்தர்கள் வருகைதரும் இந்த நகரங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த நகரங்களின் பாரம்பரியத்துக்கு பாதிப்பில்லாத வகையில், சுத்தமான நகரமாக்கப்பட உள்ளன. அதேபோல் பாரம்பரியத்துடன், அனைத்து நவீன தொழில் நுட்ப வசதிகளும் கிடைக்கும். சாலைகள், தெரு விளக்குகள், தகவல் தொழில் நுட்பம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.

Leave a Reply