பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தில்லி காவல்துறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "ஹிம்மத்' (துணிச்சல்) என்ற "ஆன்ட்ராயிட்' கைப்பேசிகளுக்கான மென் பொருளை (அப்ளிகேஷன்) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினார்.

இதையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "ஹிம்மத்' சேவையை தொடங்கி வைத்து, அதன்மூலம் புகார் பதிவு செய்த பெண்ணிடம் ராஜ்நாத்சிங் பேசி குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தில்லி காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டுக் குரியவை. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன், ஆபத்து காலங்களின்போது காவல் துறையை உடனடியாகத் தொடர்புகொள்ள பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு: பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுமிகள், இளம் பெண்கள் என சுமார் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு தில்லி காவல்துறை சார்பில் தற்காப்பு கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய பயிற்சிகள் பெண்களிடையே தன்னம் பிக்கையை அதிகரிக்க உதவும். மத்திய படைகளில் பெண்களுக்கு 1.5 சதவீதமாக உள்ள இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். மாநில காவல்துறைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்துமாநில அரசுகளிடமும் கருத்துகளைக் கேட்டுள்ளது' என்றார் ராஜ்நாத் சிங்.

"ஹிம்மத் குறிப்பு இந்தியாவிலேயே பெண்களின் பாதுகாப்புக்காக முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அப்ளிகேஷன் தொகுப்பாக "ஹிம்மத்' திகழ்கிறது. இந்த அப்ளி கேஷனை ஆன்ட்ராயிட் கைப்பேசியில் பதிவிறக்கம்செய்து, தங்கள் தொலைபேசி எண், பெயர் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பெண் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தில்லி காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையுடன் எப்போது வேண்டுமானாலும் அந்த கைப்பேசிதொடர்பை இணைக்க முடியும். அப்பெண்கள் செல்லுமிடங்களின் விவரமும் வரை படமும் 10 விநாடிகளுக்கு ஒருமுறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும்.

இதன் மூலம் ஆபத்துக்கால சூழ்நிலைகளைப் பெண்கள் சந்திக்க நேரும்போது, உடனே கைப்பேசியில் உள்ள "பவர்' பட்டனை இரண்டுமுறை அழுத்தினாலோ, அசைத்தாலோ அவரது கைப்பேசி விவரம் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். இதைவைத்து, அருகே உள்ள காவல்ரோந்து வாகனங்களில் இருக்கும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ நடைபெற்றபகுதிக்கு சென்று காப்பாற்றமுடியும்' அவசரகால அழைப்பை வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ மூன்று முறைக்கு மேல் அழைத்தால் சேவை ரத்தாகும். மீண்டும் இணைப்பை பெற தில்லி காவல் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.

Leave a Reply