'தமிழினத் துரோகி' என்று தமிழகக் கட்சிகளின் வசைகளை, ஒட்டுமொத்தமாகச் சம்பாதித்திருக்கிறார் ஹிந்தி நடிகர் சல்மான்கான். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் கொடுக்கல் – வாங்கல் உறவிருந்தாலும், இந்த முறை இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு ஆதரவாகக் களமிறங்கியது நம்மவர்களின் கோபத்தைக் கிளரியிருக்கிறது.

ஜனவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் இலங்கை அதிபருக்கான தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெறும் முனைப்பில் இருக்கிறார் மகிந்த ராஜபக்சே. பதவியைக் கைப்பற்ற சகல பிரயத்தனங்களையும் பரீட்சித்துப் பார்க்கிறார். இதனால் வழக்கமான பிரசார முறைகளையும் கடந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் டிஜிட்டல் பேனர்கள் இலங்கை முழுவதும் விரவிக் கிடக்கின்றன. கிரிக்கெட் வீரர் தில்ஷான் திலகரத்னேவும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தடகள வீராங்கனையும் சுசாந்திகா ஜெயசிங்காகவும் ராஜபக்சே ஆதரவுப் பிரசாரங்களில் குரல் கொடுத்துவிட்டனர்.

'ஆனாலும் வாக்கு கேட்டு களத்தில் இறங்கினால் ராஜபக்சேவிற்கு வரவேற்பில்லை. கடந்த ஒரு மாதத்தில் ராஜபக்சே சந்தித்த அனுபவங்களின் எதிரொலியாக, நடிகர் சல்மான்கானின் உதவி தேவைப்பட்டிருக்கிறது' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

'பீயிங் ஹியூமன்' என்ற தன்னார்வ நிறுவனத்தை சல்மான்கான் நடத்தி வருவது, நம்மில் பலர் அறியாதது. இதன் மூலமாக, அவரது ரசிகர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். தற்போது இந்த அமைப்பு, கடல் தாண்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்திருக்கிறது. அக்கட்சியின் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்த கண்புரைச் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு, 200 கேட்ராக்ட் லென்ஷ்களை வழங்கியிருக்கிறார் சல்மான். இதில் அவருடன் பங்கேற்றவர் ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

இவரது பூர்வீகம் இலங்கை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ராஜபக்சே மகன் நமலின் நெருங்கிய தோழி ஜாக்குலின் என்கின்றன இலங்கை பத்திரிக்கைகள். சில ஆண்டுகளுக்கு முன்பு, மிஸ் இலங்கையாகத் தேர்வான இவர் பாலிவுட்டின் பக்கம் பார்வையைத் திருப்பினார். கடந்த ஆண்டில் வெளியான 'கிக்' என்ற படத்தில், சல்மான்கானின் ஜோடியாக நடித்தார். அதனால் 'நண்பனின் நண்பன்' என்ற அடிப்படையில், இதில் கலந்து கொண்டார் சல்மான் என்றிருக்கின்றன இலங்கை பத்த்திரிக்கைகள். விழாவில் ராஜபக்சேவைப் பாராட்டிப் பேசிய இருவரும், போட்டோக்களுக்கு 'போஸ்' கொடுத்த பிறகு தேர்தலில் வாக்களிக்குமாறு பிரசாரமும் செய்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச சினிமா விருது விழாவில் கலந்து கொள்ளாமல், தமிழ்த் திரையுலகம் புறக்கணித்தது. ஆனால் எதிர்ப்புகளை மீறி, அதில் கலந்து கொண்டார் சல்மான்கான். அப்போது பூத்த நட்பின் அடிப்படையில், ராஜபக்சேவின் மரியாதைக்குரிய(?!) லிஸ்டில் இடம்பிடித்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது "ராஜபக்சே கருணைமிக்கவர். நினைத்ததைச் சாதிப்பவர்" என்ற சான்றிதழ் தந்திருக்கிறார்.

சர்வாதிகார ஆட்சிமுறை, வெளிச்சத்திற்கு வந்த ஊழல் குற்றச்சாட்டுகள், குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கை, மகன்களைப் பற்றிய செய்திகள் என்று, கடந்த ஆண்டு முழுவதும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு இறங்குமுகம்தான். அதனால்தான் முன்னேற்பாடாக, தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்த முடிவு செய்தார் ராஜபக்சே.

ஆனால், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனா எதிர்முகாம் செல்வார் என்பதை, அவர் எதிர்பார்க்கவில்லை. அப்போது உண்டான ஏமாற்றம், அதிகரித்துவரும் சிறிசேனாவின் செல்வாக்கை கண்டு கொதிப்பின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. அதோடு இலங்கைத் திரையுலகத்தினரின் ஆதரவும் ராஜபக்சேவிற்குக் கிடைக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. "சிங்களர்களின் ஓட்டுகளை வேட்பாளர்கள் பிரித்துவிடும் சூழ்நிலையில், இரு தரப்பும் சிறுபான்மை மக்களின் ஆதரவை வேண்டுகின்றன. அமைச்சரவையில் இருந்த முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த ரிஷத்பதியுதீன் மற்றும் ரஷப் ஹக்கீம் பதிவி விலகி, சிறிசேனாவிற்கு ஆதரவு தெரிவித்து விட்டனர். தமிழ் கூட்டமைப்பும் ராஜபக்சேவிற்கு எதிரான முடிவைத் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், இதுபோன்ற கவன ஈர்ப்பு மட்டுமே ராஜபக்சேவிற்கு இருக்கும் ஒரே வழி" என்கின்றனர் விமர்சகர்கள்.
தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பு, நிச்சயம் ராஜபக்சேவிற்கு சாதகமாகத்தான் இருக்கும் என்பது கடந்த காலத் தேர்தல் நிகழ்வுகள் சொல்லும் செய்தி. அதனால் சல்மான் மீதான எதிர்ப்பு, அவரை உற்சாகம் அடையவே செய்யும். "கிழக்குப் பகுதியில் சுயாட்சி வேண்டுமென்ற முஸ்லிம் கட்சிகள். அதற்கு ராஜபக்சே ஆதரவு தெரிவிக்கவில்லை. தற்போது சிறிசேனாவுடன் சேர்ந்து கொண்டனர்" என்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான செய்திகளைப் பரப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் சிலர்.

'இது ராஜபக்சேவின் பயத்தைக் காட்டுகிறது. சுமார் 400க்கும் மேற்பட்ட தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனா பக்கம் தாவியிருக்கின்றனர். அதனால் சிங்களர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறும் உத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்' என்பது விமர்சகர்களின் குரல். தற்போது சல்மான்கான், ஜாக்குலின் என்று நட்சத்திரங்களின் துணையை நாடியிருப்பதும் அவற்றில் ஒன்று என்கின்றனர்.

நன்றி : ரிப்போர்ட்டர்
– உதய் பாடகலிங்கம்

Tags:

Leave a Reply