மின்சாரத்தைச் சேமிக்கும் விதமாக , எல்இடி பல்புகளை பயன் படுத்துங்கள் என்று நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

எல்.இ.டி பல்புகள் மூலம் மின்சாரத்தை பெருமளவு சேமிக்கமுடியும் என்பதை கருத்தில்கொண்டு, புதுதில்லியில் உள்ள தெருக்களில் எல்இடி பல்புகள் மூலம் எரியும் விளக்குகள் சோதனை அடிப்படையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, தேசிய அளவில் தெருவிளக்குகள், குடியிருப்புகளுக்கு எல்இடி பல்புகள் வழங்கும் திட்டம், தில்லி மின்நுகர்வோருக்கு எல்இடி பல்புகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திரமோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

இதையொட்டி, பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சௌத்பிளாக் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் சிலருக்கு எல்இடி பல்புகளை வழங்கி பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

"மின்சார பல்புகளுக்குப் பதிலாக எல்இடி பல்புகளைப் பயன் படுத்துவதை நாம் ஒரு விழிப்புணர்வு இயக்கம் போல நடத்த வேண்டும். மின்சாரத்தைத் தயாரிப்பதைவிட, அதை பராமரிப்பது தான் மிகவும் சிக்கலான பணியாகும். மின்சாரத்தைத் தயாரிக்கும் நிறுவனங்கள் திட்டமிட்ட இலக்கை நிர்ணயித்து உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்து கின்றன. ஆனால், மின்சாரத்தை முறையாக பயன்படுத்திச் செலவிட கோடிக்கணக்கான மக்களின் கூட்டுமுயற்சி அவசியமாகிறது. இத்தருணத்தில் நாட்டு மக்களிடையே மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வேண்டும். மின்சாரத்தை சேமிக்க எல்இடி பல்புகளை நாடுதழுவிய அளவில் மக்கள் பயன்படுத்த வேண்டும். இந்த இயக்கத்தில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் பிரபலங்கள், சாதனையாளர்கள் உள்ளிட்டோரையும் சேர்த்து அவர்கள்மூலம் மக்கள் விழிப்புணர்வு பெற முயற்சி செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் இத்திட்டத்துக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். இதனால், எல்இடி பல்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இனி வரும் நாள்கள் போட்டிகளும், சவால்களும் நிறைந்தவையாக இருக்கும். இதைக்கருத்தில் கொண்டு, தரமான எல்இடி பல்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

புத்தாண்டு தொடங்கியுள்ள வேளையில் நாம் வாழ்த்துகளைப் பரிமாறி கொள்ளும்போது பரிசுகளையும், நாள்காட்டி அல்லது நாள் குறிப்புகளையும் அளிக்கிறோம். இவற்றுக்கு மாற்றாக உங்கள் நண்பர்களைச் சந்தித்து வாழ்த்துக்கூறும் போது அவர்களுக்கு "எல்இடி' பல்புகளை பரிசாக அளித்து அவர்களுக்கும் மின் சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்துங்கள். இந்த திட்டத்தில் சாதாரண மக்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும். சாதாரண பல்புகளின் ஆயுளைவிட எல்இடி பல்புகள் நீடித்து உழைக்கும் சக்திகொண்டவை. எனவே, இதன் மூலம் மின்சாரத்தை மட்டுமன்றி மின் கட்டணத்தையும் மக்களால் சேமிக்கமுடியும்' என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Leave a Reply