குஜராத் கடல்பகுதியில் கடந்த 1ம் தேதி அதிகாலை தீவிபத்தில் அழிந்த, மீன்பிடி படகில் இருந்தவர்கள் பற்றிய விவரங்கள், இன்னும் 3 நாட்களில் முழுமையாக வெளியிடபடும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர், சரியான நேரத்தில் கடலோர காவல் படையினர், அந்தப் படகை சுற்றி வளைத்ததை பாராட்டினார். பாகிஸ்தானில் இருந்து வந்ததாகக் கூறப்படும் அந்த மீன்பிடிப்படகில் இருந்தவர்கள், பாகிஸ்தான் அதிகாரிகள், ராணுவம் மற்றும் கடல்சார் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அமைச்சர் பரிக்கர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய மீன்பிடி படகில் வந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய பரிக்கர், அவர்கள் நிச்சயம் தீவிரவாதிகளாக இருக்கவேண்டும் என செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தியவர்களாக இருந்திருந்தால், போதைவஸ்துகளை கடலில் வீசிவிட்டு சரணடைந் திருப்பார்கள் என்றும் தீவிரவாதிகள் என்பதால் தான், தற்கொலை படையைப்போல் படகை தீயிட்டுக் கொளுத்திவிட்டு தங்களையும் அழித்து கொண்டனர் என்றும் பரிக்கர் குறிப்பிட்டார். இந்தவிவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்படுவதாகவும், அதிகபட்சம் 4 நாட்களில் முழுவிவரங்களும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply