"தலைகீழாக நின்றாலும் தி.மு.க.வால் இனி மீண்டும் தலையெடுக்க முடியாது. கருணாநிதியின் வாரிசு தலைவராவதை அவரது குடும்பத்தில் உள்ளவர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் எப்படி ஏற்பார்கள்?" – அக்மார்க் ஆந்திர காரத்துடன் போட்டுத் தாளிக்கிறார் முரளிதர் ராவ்.

பா.ஜ.க.வின் அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழகப் பொறுப்பாளருமான முரளிதர் ராவ் சமீபத்தில் கோவை வந்திருந்தார். ஆந்திராவைச் சேர்ந்த அவருடன் 'மாட்லாடு'னதில் இருந்து…..

பிரதமர் மோடியின் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?

"ஆயிரம் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி குறைவதே மிக சாதுர்யமான நிர்வாகம் நடக்கிறது என்பதற்கான சமிக்ஞை. இந்த விலை குறைவு மூலம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியிருக்கிறதே".

'மிஸ்டு கால் கொடுங்க, பா.ஜ.க.வுல சேருங்க'னு டேபிள் கம்பெனி மாதிரி கமர்ஷியலா கட்சி நடத்துவதாக கிண்டல் பண்றாங்களே?

"கட்டுக்கட்டாக பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக நடந்து ஆள் பிடிக்கும் கன்சர்வேடிவ் ஸ்டைல் அரசியலெல்லாம் இப்போது எடுபடாது. மொபைல் போன் வழியே கட்சி வளர்ப்பதை 'அப்டேடட் அரசியலாக' பார்த்து பாராட்ட வேண்டும். பல நாடுகளில் ஆட்சி மாற்றமே பேஷ்புக் மூலமாக நடக்கிறது, புரட்சி வெடிக்கிறது."

தமிழக அரசியல் சூழலை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்?

"இந்த மாநிலம், மோடியை மிகவும் எதிர்பார்க்கிறது. 2016 தேர்தலில் எங்களுக்கான அறுவடை அமோகமாக இருக்கும். அமித்ஷா ஜி, எங்களுக்கு ஸ்பெஷல் அஷைன் மென்ட்களை தந்திருக்கிறார். பல ஆச்சரிய, அதிரடி திட்டங்களை விரைவில் செய்ய இருக்கிறோம். அது என்னவென்று கேட்காதீர்கள், பொறுத்திருந்து பாருங்கள்".

திராவிட பாரம்பரியத்தில் ஊறியிருக்கும் இந்த மண்ணை 'ஜஸ்ட் லைக் தட்'டாக காப்பாற்ற முடியுமா? "இந்த மாயைகளை நாங்கள் நம்பவில்லை. சமீபத்திய தேர்தல் முடிவுகள் என்ன?

பா.ஜ.க.வின் வெற்றி கிராப், டாப் கியரில் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி இடைத்தேர்தலை திராவிடக் கட்சிகள் கூட புறக்கணித்தபோது, நாங்கள் தில்லாக களமிறங்கினோம். டெபாசிட் பெற்றோமே! தமிழகத்தில் நாங்கள் படிப்படியாக விஸ்வரூபமெடுக்கிறோம்".

ஆளுங்கட்சிக்கு எதிரான அலை ஏதும் இல்லாத சூழலில், அ.தி.மு.க.வைப் பார்த்து தமிழக பா.ஜ.க. பயப்படுகிறதுதானே?

"பால் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது இந்த அரசு. நாங்கள் அவர்களைப் பார்த்து பயப்படுகிறோம் என்பது சுத்த பேத்தல்".

தி.மு.க.வில் பதவிகளை பிடிக்க நடக்கும் போட்டாப் போட்டியில் புத்துணர்ச்சி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறதே?

(சத்தமாக சிரித்தார்) " அழுத்தமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தலைகீழாக நின்று தவமிருந்தாலும் தி.மு.க.வால் இனி அரசியலில் தலைதூக்க முடியாது. மாவட்டங்களை எத்தனையாகப் பிரித்து, எவ்வளவு பேரை செயலாளர்களாகப் போட்டாலும் பலம் கூடப்போவதில்லை. கருணாநிதியின் ஒரு வாரிசு தலைவராவதை மற்ற வாரிசுகளே விரும்புவதில்லை. நிலைமை இப்படியிருக்கும்போது, மக்கள் எப்படி இவர்களை விரும்புவார்கள்? தி.மு.க. தலைமைக்கு வேறு சில முக்கிய பணிகள் இருக்கின்றது. 2ஜி கேஷை பாலோ செய்ய வேண்டும், கலைஞர் டி.வி.க்கு பணம் மாறிய பிரச்சனையைச் சமாளிக்க வேண்டும். இதையெல்லாம் யோசியுங்கள்."

தி.மு.க.விலிருந்து வந்த நெப்போலியனை அரவணைத் திருக்கிறீர்களே?

"வர விரும்பினார், வரவேற்றோம். இன்னும் பலர் பல கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வுக்குள் நுழையத் துடிக்கிறார்கள். விருப்ப மனு போட்டிருப்போரின் பெரிய லிஸ்ட்டே என் கையில் இருக்கிறது. இந்த இணைப்பு அவ்வப்போது நடக்கும்.'

பா.ஜ.க. இன்னுமா ரஜினிகாந்தை எதிர்பார்க்கிறது?

"ரஜினிகாந்தை எப்பவும் எதிர்பார்க்கிறோம். தவிர்ப்பதற்கோ, தள்ளி வைப்பதற்கோ அவர் ஒன்றும் சமூக விரோதியல்ல. பா.ஜ.க.வில் இணைய அவர் விரும்பினால் அதை வரவேற்போம், அவ்வளவு தான். அதற்காக ரஜினி இல்லையென்றால் தமிழக பா.ஜ.க.வுக்கு வாழ்க்கை இல்லை என என்றும் நினைத்ததில்லை."

கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறி விட்டார். ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோரும் வெளியேறுவார்கள் போலத் தெரிகிறதே?

"வைகோ நேற்று போய் விட்டார்தான். ஆனால், நாளை மீண்டும் வரமாட்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? அதை அவராலேயே சொல்ல முடியாது. பா.ம.க. எங்களோடு இருப்பதை அன்புமணி விரும்புகிறார். ராமதாஸ் வேறு கதை பேசுகிறார். அவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் இருக்கிறது. தந்தைக்கு ஒரு பீலிங், மகனுக்கு ஒரு பீலிங், அதற்கு என்ன செய்ய முடியும்? கூட்டணி என்றால் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.'

ராஜபக்சேவுடன் அதீத நட்பு பாராட்டுவதால், தமிழர்களின் உணர்வுகள் காயப்படுமென்பது புரியவில்லையா?

"ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்தியது வெறும் சம்பிரதாயம்தான். அண்டை நாடுகளுடன் குறைந்தபட்ச நட்புடன் இருப்பதுதான் தேச பாதுகாப்புக்கு நல்லது என்பதை அறிந்தால்தான் ராஜதந்திரி. அதை மோடி செய்வது தவறா? தூக்கு கையிற்றை தொட்டுவிட்ட மீனவர்களை வீடு கொண்டு வந்து சேர்த்தது மோடிதான். ஈழம், ஈழம் என்று பேசும் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்களுக்கு நிகழாத துயரங்களா? அப்போது அவரால் ஏன் காப்பாற்ற முடியவில்லை? பார்மாலிடிக்கு எதிர்த்துவிட்டு, பதவிக்காக பம்மிப் பதுங்கும் நபரில்லை மோடிஜி. அவர் செயலில் புயல்!"

இவ்வாறு பதிலளித்த முரளிதர் ராவ், 'விரைவில் பா.ஜ.க.வின் அடுத்த நடவடிக்கையைப் பார்ப்பீர்கள்' என்று சஷ்பென்ஸ் வைத்து விட்டுச் சென்றார்.

நன்றி : ரிப்போர்ட்டர்
– எஸ். ஷக்தி

Leave a Reply