தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில், ஏதாவது ஒரு கல்யாணம் காதுகுத்து என நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதில் தலைவர்கள் சந்தித்து பேசி கூட்டணிகளுக்கு ஆரம்ப கட்ட ஏற்பாடுகளைச் செய்வது வழக்கம். அதேபோல, தேர்தலில் தோற்றுப்போய் இருக்கும் காங்கிரசும், அந்தத் தோல்வி மூடில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் மற்ற காட்சிகளுடனான உறவுக்கு புத்துணர்வு கொடுப்பதற்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே இருந்தது.

இந்த சந்தர்பத்தை டக்கென்று தந்தார். மறைந்த ஜவஹர்லால் நேரு. அவரது 125வது பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த ஆண்டு அதை சாக்காக வைத்து காங்கிரஸ் தலைமை சுறுசுறுப்பு அடைந்தது. நேருவின் இந்த விழாவை சாராரணமாக கொண்டாடாமல், சர்வதேச விழாவாக நடத்த முடிவெடுத்தது. தற்போதைய நரேந்திரமோடியின் அரசு, காந்தி மற்றும் வல்லபாய் படேல் ஆகியோரது பிறந்தநாள் விழாக்களைத் தவிர வேறு எவரையும் கொண்டாடப்போவதில்லை என்று அறிவித்து இருந்ததும் இதற்கு காரணம்.

நேருவின் பெருமையை மூடி மறைக்க முயலும் மோடியின் அரசாங்கத்திற்கு இந்த விழாவை வைத்து மிகப்பெரிய பதிலடி கொடுக்கலாம் எனக் கருதி மளமளவென காரியங்களில் இறங்கினர். அந்த வகையில், டெல்லியில் கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய் கிழமையும் சர்வதேச விழா நடந்தது. மிகப்பெரிய நிகழ்ச்சிகள் நடந்த விஞ்ஞானபவன் அரங்கிலேயே ஏற்பாடாகி இருந்ததால், அனைவரது கவனைத்தையும் ஈர்த்தது.

விழா என்னவோ நேருவைப் பற்றியது என்றாலும், இதை வைத்துதான் தனது கூட்டணி காய் நகர்த்தல்களை செய்யப்போகிறது காங்கிரஸ் என்பதை பி.ஜே.பி. மோப்பம் பிடித்து இருந்தது. அதனால், அந்த விழாவை பி.ஜே.பியும் வெகுவாகவே கவனித்து வந்தது. சர்வதேசத் தலைவர்கள் என்று காங்கிரஸ் சொல்கிறதே… அப்படி யார் வரப்போகின்றனர் என்று அனைவரும் ஆவலாக எதிபார்த்தால் கடைசியில் பெரிய அளவில் பிரபலம் இல்லாத தலைவர்களே வந்திருந்தனர். தேசியத் தலைவர்கள் யாரெல்லாம் வந்தனர் என்பது பற்றிதான் ஊடகங்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தன.

காங்கிரஸ்சின் உம்மன்சாண்டி, சித்தராமையா போன்ற காங்கிரஸ் முதலமைச்சர்களே போகாத நிலையில், காங்கிரஸ் அல்லாத முதலமைச்சரான மம்தா பானர்ஜி பங்கேற்றதுதான் செய்தியாகிப் போனது. இடதுசாரித் தலைவர்கள் மட்டுமல்லாது, சரத்யாதவ், தேவகவுடா போன்ற மூன்றாம் அணித் தலைவர்களும் போய் இருந்தனர்.

இந்தத் தலைவர்களின் வருகையால், காங்கிரஸ் திருப்தி அடைந்துள்ளதா இல்லையா என்பதுதான் முக்கியம். காங்கிரஸ்சுக்கு இப்போது முக்கிய தேவை. துணை. பி.ஜே.பி.யை எதிர்த்து துணிச்சலுடன் களம் இறங்குவதற்கு சொந்தமாக முயன்றால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளதே இந்த துணை தேடலுக்கு முக்கியக் காரணம்.

பி.ஜே.பி.யை எதிர்க்கும் பலரும் காங்கிரசுக்கு துணையாக வரலாம் என்று நினைத்தாலும் அதை சுலபமாக தந்துவிட யாருக்கும் மனதில்லை. இந்த விழாவுக்கு வந்த மம்தா பானர்ஜியின் வருகைதான் மிகவும் கவனிக்கத்தக்கது. சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு ஆண்டே உள்ள நிலையல் மேற்கு வங்கத்தில் மம்தாவின் செல்வாக்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சிட்பண்ட் மோசடியில் மிகப்பெரிய அளவில் பெயர் கெட்டுப்போய் இருப்பது ஒருபுறம். அதைவிட, யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு செல்வாக்கு பெற்று விசுவரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் பி.ஜே.பி. மறுபுறம்.

மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்கத்தில், இந்த முறை எப்படியும் பி.ஜே.பி. தனது செல்வாக்கை நிலைநிறுத்தும் என எதிபார்க்கப்படும் சூழ்நிலையில், எதிரனி மிகவும் பலவீனமாக உள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள்,திரிணாமுல் என மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் என்ன என்ற யோசனை சமீப காலமாக அம்மாநில அரசியல் களத்தில் பிரதிபலித்த வண்ணம் உள்ளது.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் இதை பேசிக்கொண்டிருந்தலும், கட்சிகளின் தலைவர்கள் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் தான், காங்கிரசுடன் நேசக்கரம் நீட்டுவதர்காக மம்தா பானர்ஜி டெல்லிவந்து நேரு நிகழ்ச்சிக்கு வர சம்மதம் தெரிவித்தார். சோனியா காந்தியே நேரடியாக கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார் என்பதால் மம்தா வந்தார்.

வந்தவருக்கு முன்வரிசையில் இடதுசாரி தலைவர்களுக்கு அருகில் இருக்கை போட்டிருந்தது மம்தாவுக்கு பிடிக்கவில்லையாம். அதைவிட, தன்னையும் நேரு பற்றி பேசுவதற்கு மேடையில் வாய்ப்பு அளிப்பார்கள். அப்போது மதச்சார்பின்மை பற்றிப் பேசி, பி.ஜே.பி. யை எதிர்க்கும் தனது நோக்கத்தை சிக்னலாகக் காட்டலாம் என்று திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், விழாவுக்கு போய் இருந்த அரசியல் தலைவர்களுக்கு இருக்கை மட்டும்தான் தரப்பட்டதே தவிர, மைக் தரப்படவில்லை. இதனால் சில நிமிடங்களிலேயே மந்தா பானர்ஜி கிளம்பிப் போய்விட்டார்.

நிகழ்ச்சியை விட்டு கிளம்பியதை அறிந்த காங்கிரஸ் அதிர்ச்சியடைந்தது என்றால், சில நிமிடங்களில் பி.ஜே.பி. க்கும் அதிர்ச்சி. காரணம், நிகழ்ச்சியை விட்டு கிளம்பியவர் நேராக போனது அத்வானியின் வீட்டிற்கு. அத்வானியின் மனைவிக்கு உடல்நலக்குறைவு என்பதால் அவரையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று மம்தா போனதாகக் கூறப்பட்டாலும், காங்கிரசுக்கு சற்றே ஷாக்.

அதைவிட, காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிதம்பரம், கமல்நாத், சல்மான் குர்ஷித் போன்றவர்களுக்கு கூட நேரு விழாவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் அதுவும் அதிருப்தியகக் கிளம்பியுள்ளது. நேரு நிகழ்ச்சியை வைத்து புத்துணர்வு பெற நினைத்த காங்கிரஸ், கடைசியில் கண்டபடி குழம்பிப்போய் உள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

நன்றி : அரசியல்
சுரேஷ் கிருஷ்ணா

Leave a Reply