கம்ஸனின் அரச சபையே கதிகலங்கிப் போயிருந்தது. கண்ணனைத் தீர்த்துக் கட்ட கம்ஸனால் ஏவிவிடப்பட்ட மாயாவிகள் அனைவரும் அடியோடு நாசமாயினர். பூதனை என்ற அரக்கி எப்படிப் போனாளோ அப்படியே மடிந்து போனான். புயலாய்ப் போனத்ருவர்த்தன் பூண்டோடு அங்கே அழிந்தான். அப்படி எத்தனை அரக்கர்களை ஏவிவிட்டானோ ஆத்தனை அரக்கர்களும் கண்ணனை ஒன்றும் செய்ய மடியாமல் அடிபட்டும் மிதிபட்டும் குற்றுயிரும் குலையுயிருமாய் கம்ஸன் முன்வந்து கலங்கிப்போய் நின்றார்கள். கம்ஸனும் செய்வதறியாது திகைத்துப் போய் திணறினான்.

கோபத்தில் அவன் கண்கள் சிக்கச் சிவந்திருந்தது. ஆத்திரத்தில் அவன் நெஞ்சு துடித்துக் கொண்டிருந்தது. தன சக்திகள் முழுவதையும் பயன்படுத்தியும் தனக்கு தோல்வியே என்பதை உணர்ந்து வெந்துபோன நெஞ்சத்தொடு நொந்து போயிருந்தான் கம்ஸன். ஆவேசத்தில் தன காலடிகளை எடுத்து பூமியின் மீது அழுத்தினான். பூமியே அதிர்ந்தது. அற்புதமான அவனுடைய அந்த அரண்மனையில் அவன் அங்கும், இங்கும் நடந்து கொண்டே அடுத்து என்ன செய்யலாம்? இந்த கண்ணனை எப்படி காலனின் காலடியில் தள்ளலாம்? என்பதை பல கோணங்களிலும் பரிசீலித்தான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

மதுரா நகரத்தில் அவன் ஒரு தனுர்யாகத்தை நடத்தப் போவதாகவும், அப்போது கண்ணனையும், பலராமனையும் அழைத்து ஒரு மல்யுத்த போட்டியை நடத்த அதில் தன்னுடைய வலிமைமிக்க பராக்கிரமசாலியான சானுரன், முஷ்டகன் என்ற இரண்டு மல்லர்களைக் கொண்டு கண்ணனையும், பலராமனையும் பழிவாங்கப் போவதாகவும், அவர்கள் நாட்டுக்குள் நுழையும் முன்பே அந்த மல்யுத்த சபையின் வாயிலில் குவலயாபீடமென்ற மிக வலிமைமிக்க யானையை நிறுத்தி அதன் மூலம் அவர்களைக் கொல்லவும் திட்டம் தீட்டினான் கம்ஸன்/

இந்த அருமையான திட்டத்தை அறிவிக்க தனது அமைச்சரவையைக் கூட்டினான். தன்னுடைய பரம எதிரியான கண்ணனை ஒழித்துக் கட்ட, தன்னால் தீட்டப்பட்ட இந்தத் திட்டத்தை ஒன்றுவிடாமல் எடுத்துக்கூறி அவையோர்களின் கருத்தைக் கோரினான் கம்ஸன்.

கம்ஸன் மீதுள்ள பயத்தாலும் அவன் அச்சுறுத்தும் செயல்களாலும் மிரண்டு போயிருந்த அமைச்சர்களும் மற்ற அனைவரும் கம்ஸன் சொன்னவைகளுக்கெல்லாம் ஆமாம் என்றும், சரி என்றும் சொல்கின்ற தலையாட்டி பொம்மைகளாகத்தான் இருந்தார்கள். எதிர்த்து எதையும் எடுத்துக்கூறும் தைரியசாலியாக யாரும் அங்கெ இருக்கவில்லை.

ஆத்திரக்காரனும், மூடனும் அரசனாக இருந்தால் அறிவாளிகள் அனைவரும் அவனுக்கு அடிமையாகி தொண்டு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அப்படித்தான் ஆயிற்று இங்கும்.

ஒரு சில காரியங்களைச் சாதிக்க ஒரு சிலராலேயே முடியும். அந்த ஒரு சிலரும் அதற்குத் தகுதியானவர்களாக இருப்பார்கள். கடலில் மீனைப் பிடிக்கவும், முத்தை எடுக்கவும் மீனவனால் மட்டுமே முடியும். வயலில் நெல்லை விதைக்கவும், அறுத்து எடுக்கவும் விவசாயினால் மட்டுமே முடியும். அப்படி இருக்க்க இந்த வேலைக்கெல்லாம் கொல்லனையும், தச்சனையும் அனுப்பினால் என்னவாகும்? எந்தெந்த வேலைகளை யார் யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ, அந்தந்த வேலைகளை அவர்களிடம் ஒப்படைத்தால், நடக்க வேண்டிய வேலை நன்றாக முடியும். இதை நன்றாகவே தெரிந்துவைத்திருந்தான் கம்ஸன். கண்ணனை அழைத்து வர சரியானவர் தனது நண்பர் ‘அக்ரூரர்‘ தான் என்பதை கம்ஸன் உறுதிப்படுத்திக் கொண்டான்.

அக்ரூரர் யது குலத்தைச் சேர்ந்த சிறந்த பண்பாளர். வஷுதேவருக்கு நெருங்கிய உறவினன். கம்ஸனுக்கு மிகவும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்கும் அன்பான நண்பன். கம்ஸனுக்கு எது விருப்பமோ அதைச் செய்து கொடுப்பவர். அதில் வரும் நல்லது கெட்டதை சொள்ளிவிட்டு அதற்குப் பின், அவன் விருப்பப்படி நடப்பவர். துரியோதனுக்கு ஒரு கர்ணனைப் போன்று இந்த கம்ஸனுக்கு ஒரு அக்ரூர். ஒரு துஷ்டனுடன் ஒரு நல்லவனைச் சேர்ப்பது இறைவனின் விளையாட்டு. ராவணனுக்கு ஒரு விபீஷணன் இருக்கவிலையா, அப்படிதான்.

அக்ரூரரை அழைத்து வர ஆணையிட்டான் கம்ஸன். அடுத்த சில நாழிகையில் அக்ரூரர் அங்கெ வந்தார். தனது காரியத்தின் நிச்சயத்தை அறிந்தவனாகிய கம்ஸன், அக்ரூதருடைய கையைப் பிடித்துக்கொண்டு, “எனதருமை நண்பரே! ஒரு மித்திரன் செய்ய வேண்டிய காரியத்தை எனக்கு நீர் செய்ய வேண்டும். போஜ விருஷ்ணிகளுக்குள் உம்மைப் போல பிரீதியுடன் எனக்கு ஹிதத்தைச் செய்பவர் யாருமில்லை. இந்திரன், விஷ்ணுவை ஆச்ரயித்துத் தனுடைய காரியத்திச் சாதித்துக் கொண்டது போல பெரியதாகிய காரியத்தை முடித்துக் கொள்ள உம்மை ஆச்ரியத்திருக்கிறேன்” என்று தனது அகலமான கண்களை அகல விரித்து அக்ரூரரிடம் கூறினான் கம்ஸன்.

“அரசே! எனதருமை நண்பரே! தங்களின் கருத்து என்னவோ அதை எடுத்துக் கூறுங்கள். இந்த அடியேனால் அதை சாதிக்க முடியுமானால் சாதித்துக் காட்டுகிறேன். தங்கள் மனதைக் குளுமையாக்குகிறேன்” என்று அக்ரூரர் அரசனின் கட்டளையை எதிர்நோக்கினார். கண்ணனை அழைத்து வருவது முதல், அவனை எப்படித் தீர்த்துக் கட்டப் போகிறேன் என்பதை அப்படியே எடுத்துரைத்த கம்ஸன், கோகுலத்திலிருக்கும் கண்ணனையும், பலராமனையும் அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டான்.

“அக்ரூரரே! அதோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற அந்த ரதத்தில் ஏறி கோகுலம் செல்லுங்கள், என் விரோதிகளை அழைத்து வாருங்கள். என்னை கொல்லத் துடிக்கும் அவர்களை கொன்றபின் அவர்களை ஆச்ரயித்துக் கர்வம் கொண்டிருக்கும் விருஷ்ணிகளையும் போஜர்களையும், தாஸர்களையும், அந்த வஷுதேவர் முதலியவர்களையும், எனக்குப் பிதாவும் வயதில் முதிர்ந்தவரும் எனது ராஜ்யத்தில் விருப்பமுள்ள உக்கிரஷேனனையும், நாசஞ் செய்கிறேன். அதற்குப் பிறகு இந்த மாபெரும் பூமியை, யாதொரு இடையூறுமின்றி நான் ஆளப்போகிறேன்’ என்று மார்தட்டிக் கொண்டு கர்ஜனை செய்தான் கம்ஸன்.

“அரசே உங்கள் ஆசைகள் அனைத்தையும் அறிந்து கொண்டேன். ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன். கோபமும், குரோதமும் இரண்டு பெரிய அழிவுப்பாதைகள். கோபம் ஒரு நாளும் எதிரியை மாற்றிவிடாது. உங்கள் மனம் முழுக்க கல்லாகிப் போகியுள்ளது. உங்களது ஆத்திரமும் கோபமும் ஏன் என்பது எனக்குப் புரிகிறது. கோபம் சில சமயம் ஆரம்பத்திலேயே வெற்றியைப் போல காட்டினாலும் இறுதியில் அது மாபெரும் தோல்வியையே தரும். சற்று சிந்தித்துச் செயல்படுங்கள்” என்றார் அக்ரூரர்.

“ஹே! அக்ரூரரே என்ன சொன்னீர்? சிந்தித்துச் செயல்படுவதா? சிந்திக்கவே நேரமில்லை. எனது மரணத்தை எண்ணி நான் தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். கரையைத் தொட்டு விட்டு அங்கேயே அப்படியே நின்றுவிட நினைக்கும் அலைகள், அடுத்து வரும் அலைகளால் இழுத்துச் செல்வதைப்போல, நான் ஏவிய அஷ்திரங்களெல்லாம் அப்படியா அடித்து நொறுக்கப்பட்டு விட்டன. அப்படியிருக்க நான் மேலும் சிந்தித்துக் கொண்டே இருந்தால், அந்தக் கண்ணனின் எண்ணம் கொஞ்சநாளில் ஈடேறிவிடாதா?” துடிதுடித்தான் கம்ஸன்.

“பூமாலையை ஸர்ப்பம் என்று நினைக்கும் புத்தியற்றவனல்ல கம்ஸன். அவன் வாழ் எடுத்தால் தூள் பறக்கும் என்பதை அறிந்தவன் நான். கோடிச் செல்வத்தைச் செலவு செய்து மிகப்பெரிய தேரை உருவாக்கும்போது, சிறிய இரண்டு சக்கரத்தை செய்ய செலவுக்கு யோதிப்பதா? அரசே! உமது எண்ணம் எதுவோ அதயே அடியேன் ஸாதிக்கிறேன். தங்களுக்கு நேரும் மரணத்தை இந்தத் திட்டம் தடுத்து நிறுத்துமானால் தங்களுடை யோசனையை நல்லதாகவே நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தக் காரியம் நன்மையில் முடிந்தால் அதைக் கண்டு மகிழ்ச்சியும் அடைய வேண்டாம். முடியாவிட்டடல் துக்கமும் பட வேண்டாம். விதி என்பது மிக வலிமையானது” என்றார் அக்ரூரர்.

“எப்படிப்பட்ட விதியானாலும், அதை எனக்கேற்றவாறு மாற்றிக் கொள்பவன் நான். எனது ஆசார்யன் ஜராசந்தன் எனக்கு உறுதுணையாக இருக்கிறான். திறமைசாலியான எனது தோழன் த்விதன் என்னருகிலேயே இருக்கிறான். என்மீது அமோகப் பிரீதியில் இருப்பவர்கள். சம்பரன், நரகன், பாணன். இத்தனை பேர் இருக்கையில் விதி என்னசெய்துவிட முடியும்?”

“அரசே! தெய்வபலமில்லாத காலத்தில் எடுத்த காரியம் எதுவும் சித்தியில்லாமல் போய்விடும். அந்த தெய்வத்தின் பலத்தை தாங்கள் சோதிக்க விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று சொல்லிவிட்டு, அக்ரூரர் எதிரே இருந்த தேரின் மீது ஏறினார். தேரோட்டி லகானை தளர்த்திவிட, குதுரையும் தேறும் புயல் வாகத்தில் கோகுலத்தை நோக்கிப் பறந்தது.

ஸ்ரீ ராமன் மீதும், கிருஷ்ணன் மீதும் பரம பக்திகொண்ட அக்ரூரருக்கு, கிருஷ்ணனைக் காணும் பாக்கியம் எதிர்பாராமல் தனக்கு இப்படிக் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார். தேரைவிட, வேகமாக அவரது ஆசை கண்ணனைக் காண மேலும் வேகமாகப் போனது.

அக்ரூரர் கோகுலம் சேர்ந்தார். தேரிலிருந்து கீழே குதித்து நந்தகோபனின் இல்லத்திற்குள் சென்றார். உள்ளே கண்ணனும் பலராமனும் இரண்டு யானை குட்டிகள் போல நின்றிருப்பதைக்கண்டு, கம்பீரமான அந்த இளைசர்களின் காலிலே விழுந்து வணங்கி எழுந்தார்.

கம்ஸனின் தூதுவன் என்பதாலும், அக்ரூரரின் உள்ளத்தை அறிந்திருந்தாலும் கண்ணன் புன்னகைத்து, கண் குளிர அக்ரூரரை வரவேற்று உபசரித்தான். தான்வந்த காரியத்தை கண்ணனிடம், நந்தனிடமும் எடுத்துரைத்தார் அக்ரூரர். தனுர்யாகத்திற்கு கம்ஸன் அழைத்திருப்பதால் அடுத்தநாள் காலை மதுராவுக்குப் போக முடிவெடுத்தனர் அனைவரும்.

அடுத்தநாள் காலைநேரம். அக்ரூரும், கண்ணனும், பலராமனும், வஷுதேவருடன் பால், தயிர், வெண்ணை, நெய் போன்றவற்றை தனுர்யாகதிற்குக் காணிக்கையாக எடுத்துக் கொண்டு ரதத்தில் புறப்பட்டனர்.

கோகுலத்து கோபிகைகள் கொண்டாடிய கண்ணன் அவர்களைப் பிரிந்து செல்வதைக் கண்டு, ‘தாமோதரா, கோவிந்தா, மாதவா” என்று கண்ணனை அழைத்து அவர்களின் அன்பைச் சொரிந்தனர். கண்ணன் அவர்களின் விழியையே கொண்டு செல்வதாக நினைத்தனர்.கோபிகைகள் கண்ணன் செல்வதை கண் இமைக்காமல் பார்த்தபடியே துயரத்துடன் வாடி நின்றனர். “நான் மீண்டும் வருவேன். கவலை வேண்டாம்” என்று கண்ணன் கூறி விடைபெற்றுச் சென்றான்.

நடுப்பகல் நேரம். யமுனை நதிக்கரையோரம், அவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். கண்ணனும், பலாராமனும் தேரில் அமர்ந்திருக்க, அக்ரூரர் மாத்யான்னிக வழிபாடி செய்ய யமுனை நதிக்குள் மூழ்கினர். நீருக்குள் கண்ணனும், பலராமனும் கண்ணுக்குத் தெரிந்தனர். வெளியில் தேரில் அமர்ந்திருக்கும் இவர்கள் இங்கே எப்படி வந்தார்கள். ஆச்சரியப்பட்டுப் போன அவர் நீருக்கு மேலே வந்து தலை தூக்கிப் பார்த்தார். பழைய நிலையில் எப்படி இருந்தார்களோ அப்படியே அவர்கல்தேரில் அமர்ந்திருந்தனர். இதைப் பார்த்துவிட்டு மீண்டும் நீருக்குள் மூழ்கினார். அப்போது ஆதிஷேசன் மீது பள்ளிகொண்டு ஸர்வாபரண பூஷிதராய், ஸநகாதி மகரிஷிகள் துதிபாட, க்ருஷ்ணனே மஹா விஷ்ணுவாய் வீற்றிருந்தார். அக்ரூரர் பகவானை ஸ்தோத்திரம் செய்து, நமஷ்கரித்துவிட்டு மீண்டும் ஆற்றின் நீருக்கு மேலே வரலானார்.

கரையேறி வந்த அக்ரூரரை பார்த்துக் கண்ணன் “என்ன அக்ரூரரே! ஏதோ அற்புதத்தைக் கண்டவர் போல தோன்றுகிறதே!” என்று கேட்டான். அதற்கு அவர் இந்த பிரபஞ்சம் முழுதும் என்னென்னே அற்புதங்கள் உண்டோ/ அவை அனைத்தும் கண்ணனே! கண்ணனைப் பார்த்தாலே போதும். “அதிலேயே அத்தனையும் அடக்கம்” என்று அடக்கத்தோடு கூறினார் அக்ரூரர்.

மாலை நேரம், அனைவரும் மதுராபுரியை அடைந்தனர். அங்கிருந்த பூஞ்சோலையில் அவர்களை அமர்த்திவிட்டு அக்ரூரர் கண்ணனின் வருகையை கம்ஸனிடம் அறிவிக்கச் சென்றார்.

மறுநாள் மதுரா நகருக்குள் கண்ணனும் பலராமனும் சென்றபோது அந்த நகரத்து மக்கள் கண்ணனுக்கு மலர்தூவி வரவேற்று, திரள் திரளாக வந்து நமஷ்கரித்தனர். தீபம், பூரண கும்பத்தோடு தரிசித்தனர்.

தனது ஊரான மதுராவைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட கண்ணன், முதலில் அன்றாடம் கம்ஸனுக்கு மாலை கட்டித்தரும் மாலாக்காரனைப் பார்க்க அவன் வீட்டிற்கு போனான். திடீரென்று கண்ணனைக் கண்ட மலாக்காரன் அதிர்ந்து போனான். அங்கும் இங்கும் ஓடினான். கண்ணன் காலில் விழுந்து வணங்கினான். “அடியேன் தங்களைக் கண்டது பெரும்பாக்கியம்”என்றான்.

“எனக்கு ஒரு பூமாலை வேண்டும்” என்று கண்ணன் கேட்டான். தருகிறேன் என்று ஓடிச்சென்று உள்ளே இருந்து ஒரு பூமாலையைக் கொண்டுவந்து கொடுத்தான். அந்த பூமாலை கம்ஸனுக்கு அளிக்கும் பூமாலை போலவே இருந்தது.

மாலையை வாங்கிக் கழுத்தில் போட்டுக் கொண்டு, மாலாக்காரனை ஆசீர்வதித்து சென்றான் கண்ணன். கண்ணன் சென்றபின்பு கீழே விழுந்துகிடந்த பூக்கள் எல்லாம் பொற்காசுகளாக மாறின.

செல்லும் வழியில் ஒரு சலவைத் தொழிலாளி ஒரு மூட்டைத் துணிகளை பவ்யமாக எடுத்துக்கொண்டு போனான். கண்ணன் அவனை அழைத்து தங்களுக்கு நல்ல துணிகளைக் கொடுக்கும்படி கேட்டான். “பிரபுக்களே! தாங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. நான் கொண்டு செல்லும் இந்தத் துணிகள் அத்தனையும் அரண்மனைக்குரியது. இதில் அரசரின் பட்டு வேட்டி,மேலாடை,ராணியின் மார்புக்கச்சை,முத்துக் கோர்த்த பட்டுச் சேலை என்று பலவும் உள்ளன. இதை அணியக்கூடிய தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. எனது நாட்டரசன் கம்ஸராஜனுக்கு மட்டுமே உண்டு. இந்த ஆடைகளை நீங்கள் கேட்டதைக் கேள்விப்பட்டாலே எங்கள் அரசனுங்கள் தலையை எடுத்து விடுவான். கேட்டதற்கு தலையை எடுத்தால், நான் உங்களுக்கு இதைக் கொடுத்தால் ஏன் நிலை என்னவாகும்? நான் கொடுக்க மாட்டேன்” என்றான்.

“ஏய்! நீ என்ன சொல்கிறாய்.இந்த வஷ்த்ரங்களை அணிய எங்களுக்கு தகுதி இலையா? எதை எண்ணிச் சொல்கிறாய்?” கண்ணன் கோபத்தோடு கேட்டான்.

“உங்களைப் பார்த்தாலே தெரிய வில்லையா? அரசருடைய சொத்தை அபகரிக்க வந்த மூடர்கள் நீங்கள். ஓடிப் பொங்கல். இல்லாவிடில் காவலாளிகளை வரவழைப்பேன்” என்று கர்வத்துடன் கூறினான்.

“அரசன் என்ன உன் தலையை வாங்குவது… இதோ பார்” என்று கண்ணன் கடுங்கோபத்துடன் அந்த சலவைத் தொழிலாளியை அடித்து கீழே வீழ்த்தினான்.

வஸ்திர மூட்டைகள் அங்காங்கு சிதறப்போய்க் கிடந்தன. கண்ணனும் பலராமனும் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்து உடுத்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். அப்போது நெசவாளி ஒருவன் பகவானின் எதிரில் வந்து மிகுந்த பிரியத்துடன் பட்டு வஷ்திரங்களில் கொடுத்து, ஆபரணங்களால் அலங்கரித்து அவர்களை பிரகாசிக்கச் செய்தான். கண்ணன் மனம் குளிர்ந்து அந்த நெசவாளிக்கு மிகுந்த ஐஸ்வர்யத்தை அனுக்கிரகித்துச் சென்றான்.

போகும்வழியில் ‘த்ரிவிக்ரா’ என்ற கூனி, கம்ஸனுக்காக சில வாசனைத் திரவியங்களைக் கொண்டு செல்வதைக் கண்டான் கண்ணன் கண்ணனைக் கண்டதும் அந்தக் கூனி அருகில் வந்து இந்த வாசனைத் திரவியங்களையும், சந்தனத்தையும் பூசிக்கொள்ள முழுத் தகுதியுள்ளவர் நீங்களே! இந்தாருங்கள், பூசிக் கொள்ளுங்கள் என்று ஆசை தீர அள்ளி அள்ளிக் கொடுத்தாள். கண்ணனும் பலராமனும் ஆனந்தமாக அதைப் பூசிக் கொண்டனர். மனமகிழ்ந்து போன கண்ணன் அந்தக் கூனிக்கு அனுக்கிரஹம் செய்ய எண்ணி தன் கால் விரலால் அவள் காலை அழுத்தி, தன் கை விரலால் அவள் தாடையே லேசாக உயர்த்தினான். அவள் கூனில் அகன்று, அழகிய இளம் பெண்ணாக மாறினால்.

தனுர்யாகம் செய்யும் இடத்தைத் தேடிப்போன பொது அங்கே பல ரத்தினங்கள் பதிக்கப்பட்ட வில் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின்னிக் கொண்டிருந்த அந்த அற்புதமான வில்லை நாணேற்றி படீரென்று முறித்தான் கண்ணன். இடியோசை போல் கேட்டது. இதைக் கண்ட காவலர்கள் கண்ணனையும் பலராமனையும் பிடிக்க ஓடிவந்தனர். கையில் அகப்படுவானா கண்ணன். ஓடிப்போய் விட்டான்.

மறுநாள் காலை மல்யுத்தர்களிடம் போராடக் கண்ணனும் பலராமனும் அரங்கத்திற்குச் சென்றபோது, குவாலய பீடம் என்ற யானை அவர்களை மிதித்துக் கொன்றுவிட எத்தனித்தது. அடுத்த கணம் கண்ணனால் கட்டுண்ட அந்த யானை கதறி, பதறி களைத்துப்போனது. கண்ணன் அந்த யானையின் தந்தங்களை பிடித்து இழுத்து உருவி எடுத்தான். யானையைக் கீழே தள்ளி அந்த தந்தங்களால் யானையைக் குத்திக் கொன்றான்.

அந்த இரண்டு தந்தங்களையும் ஆளுக்கொன்று தோளில் சார்த்திக் கொண்டு மல்யுத்த களத்தில் இறங்கினார்.

கம்ஸன் சிமாசனத்தில் வீற்றிருக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, சானூரனுக்கும் சரியான யுத்தம் நடந்தது. பலராமனுக்கும் முஷ்டகனுக்கும் அதைவிட பெரிய யுத்தம் நடந்தது. ஒருவருக்கொருவர் கட்டிப் புரண்டனர். சீரிப் பாய்ந்தனர் . முற்றிய சண்டை மடிந்தது. சானூரனும் முஷ்டகனும் மடிந்தனர்.

கடுமையான கோபம்கொண்ட கம்ஸன் காவலர்களை விட்டு கண்ணனையும் பலராமனையும் கொன்றுவிடக் கட்டளையிட்டான். இதைக் கேட்ட கன்னன் வெகுண்டு, சினம் கொண்டு, கம்ஸன்மீது சிங்கம்போல பாய்ந்தான். கம்ஸனின் கேசங்களைப் பிடித்து, இழுத்து, சிம்மாசனத்திலிருந்து தலைக்குப்புற சாய்த்துக் கீழே தள்ளினான். கிரீடம் சிதறுண்டு தரையில் உருண்டது. அடிமேல் அடி. பலத்த அடி அவன் மார்பு மீது அமர்ந்தான். அடித்து நொறுக்கினான், மயங்கி விழுந்த கம்ஸன் அப்படியே மாண்டு போனான்.

சிலருக்கு மரணம் தேடிவருவதுவண்டு. அனல், கம்ஸனோ மரணத்தை தானே வரவழைத்துக் கொண்டான்.

நன்றி : விஜய பாரதம்
– ராமசுப்பு

Leave a Reply