பாரதம் இண்டியாவாகி, இண்டியன் வெள்ளைக்காரனாகி, மெக்காலே கல்வியால் மூளை மழுங்கி பண்பாட்டிலிருந்து சரிந்து விழுகின்ற காலமிது. அதனால் கண்ணை விற்றுச் சித்திரம் வாக்கும் அனர்த்தங்கள் பெருகியிருக்கின்றன. இன்றைய இந்தியன் வயிற்றுக்காக ஆன்மாவை இழக்கத் தயாராயிருக்கிறான். முன்னோர்களின் பெருமை ஏதும் இன்றைய தலைமுறையின் தலையில் ஏறவில்லை. வள்ளுவனை, கிருஷ்ணனைத் தெரியாத இந்தியன், தந்தை பெயர் அறியாதவன் என்றால் தவறு ஒன்றுமில்லை.ஆனால், அத்தகைய இழிநிலையில் இன்றைய தலைமுறை இருக்கிறது.

ஆனாலும், இப்போது ஒன்றும் முழு மோசம் வந்துவிடவில்லை. சாம்பலில் நெருப்பாய்… நம் நாட்டில் இன்னும் பண்பாட்டின் உயிர்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஊதி ஊதிப் புதிய வேள்வி செய்துவிட முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைக்கு காரணம், இன்னும் திருக்குறள் நம் கையில் இருக்கிறது; கீதை இருக்கிறது என்பதுதான் அவ்விரண்டு நூல்களிலும் உள்ள ஆன்மிக ஒளி, சூரியனிலும் சந்திரனிலும் இல்லாதது. சூரிய தீபமும் ஒருநாள் அணையக்கூடும். கீதையின் ஒளியோ, குறளின் ஒளியோ என்றும் அணையாது. அது உலகின் கடைசி மனிதனுக்கும் வழிகாட்டும்.

 நம் நாட்டில் காணப்படும் கோயில்கள், ஓவியங்கள், சிற்பங்கள், இசை, கவிதை… இவை எல்லாமே ஆன்மிக மெய்மைகளை வெளிப்படுத்தும் கலை வெளிப்பாடாக விளங்குகின்றன. ஜீராவில் குலோப் ஜாமூன் ஊறுவது போல, ஆன்மிகத்தில் ஊறிக் கிடந்த உள்ளங்களிலிருந்துதான் இத்தகைய வெளிப்பாடுகள் தோன்ற முடியும்.

ஆயுதங்களுக்கு சாணை பிடிக்கும் யுத்தப் பொழுதிலும் ஆத்மா விசாரணை செய்து கிடந்த மன்னர்களை வரலாறு காட்டுகிறது. தெய்வீக உணர்வில் திளைத்துக் கிடந்த கோடானு கோடி மகான்கள், ரிஷிகள், கவிஞர்கள் பற்றிய சான்றாதாரங்கள் எத்தனை எத்தனை இலக்கியங்களிலும் பிறவற்றிலும் காணக் கிடைக்கின்றன.

சராசரி மனித வாழ்க்கையும் தத்துவத்தில் ஊறியதாக, தார்மிகம் நிறைந்ததாக இருந்திருப்பதைக் காண முடிகிறது. இதற்கு சான்றுகள் தரமுடியும். தும்மினால்கூட ‘முருகா’ என்பவர்களை இன்றும் இங்கே காணமுடிகிறது. பிறர் மீது கால்பட்டு விட்டால், ‘சிவசிவ’ என்கிறாள் இந்நாட்டுப் பாமரப் பெண். காணும் இடமெல்லாம் பரம்பொருளைக் கண்டு பழகியவர்களின் குடும்பத்தில் பிறந்தால் வந்த பயன் இது.

கோபுரக் கிளிகளும் வேத மந்திரங்கள் சொல்லும் எனும்படி…. வேதம் செழித்த நம் நாட்டில் உலகாயத விஷம் தீண்டி… மக்கள் அஞ்ஞானக் குருடர்கள் ஆகிவருகின்றனர். இப்படி ஆன்மிக விழிப்பு கெட்டு, உறக்கமும் கொட்டாவியுமாக இருக்கின்ற கீதையையும் ஒரு சமூகச் சூழலில்,குறளையும் கீதையையும் குறித்து சில சிந்தனைகளை முன்வைக்க விழைகிறேன்.

‘அதுசரி சுவாமி! இந்தக் குரலிலும், கீதையிலும் அப்படி என்னதான் இருக்கிறது?’ என்று சிலர் கேட்கிறார்கள். அதில் என்னதான் இல்லை என்ற பதிலை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். குறள், கீதை இரண்டும் மேலோட்டமாகப் பார்த்தல் மிக எளிய நூல்கள். ஆனால் அந்நூலுக்குள் எல்லோரும் மூழ்கி முத்தெடுக்க முடியாது. அவ்வளவு ஆழம் அதில் உள்ளது.

பொதுவாக வேதங்களை ‘எழுதாக்கிளவி’ என்றே முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் அவை முனிவர்களாலும் ரிஷிகளாலும் எழுதப்பட்டவை அல்ல. அவை அவர்களால் கிரஹிக்கப்பட்டவை. வானத்தில் அலையும் ஒலி வடிவங்களை ஒரு வானொலி பெட்டி கிரஹித்துக் கொடுப்பது போல அவர்கள் வேதங்களை கிரஹித்து வழங்கினார்கள் என்று கருதுவதே மரபு.

ஆனால், இந்தக் குறள், கீதை இரண்டு நூல்களையும் இறைவனே நேரடியாக வந்து வழங்கியதாக நம் முன்னோர்கள் எழுதியிருக்கிறார்கள்.
உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் இந்த திருக்குறளை நான்முகனே வள்ளுவர் வடிவில் வந்து வழங்கினான் என்று எழுதியிருக்கிறார். அப்படி ஒரு வெண்பா திருவள்ளுவ மாலையில் உள்ளது. கீதை திருமாலின் அவதாரமென, கிருஷ்ணன் வாய்மொழியாக வந்துள்ளது. ஆக, இவ்விரண்டு நூல்களின் பிறப்பு குறித்து, இது சாட்சாத் தெய்வமே வந்து தந்தவை என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

அலைபேசி நடைமுறைக்கு வரும் முன்பு, பேஜர் என்ற ஒரு கருவி எல்லோருடைய இடுப்பிலும் இருந்தது. இப்போது இல்லை. அந்த பேஜர், அலைபேசி வந்த பிறகு சிறப்பிழந்துவிட்டது. பயனையும் இழந்துவிட்டது.
ஆனால், இந்தக் குறளும் கீதையும் தோன்றிய பிறகு எத்தனை எத்தனை புதிய நூல்கள் தோன்றியுள்ளன. ஆயினும், இவ்விரண்டு நூங்களும் தம் சிறப்பையோ, பயனையோ இழந்து விடவில்லை. இதுதான் அந்த நூல்களின் விசேஷம்.

திருவள்ளுவர் ‘சிறப்பீனும் செல்வமும் ஈனும்’ என்று தர்மத்தைப் பற்றிச் சொல்கிறார்.

தர்மமாக வாழ்ந்தால், நல்ல பேர் கிடைக்கும். காசு கிடைக்குமா என்று சந்தேகப்படுபவர்களுக்காகவே சொன்ன குறள் அது. சிறப்பு என்பது ஞானத்தையும் செல்வம் என்பது உலகச் செல்வத்தையும் குறிக்கும்.

திருக்குறள் முப்பால் நூல் என்று அழைக்கப்பாட்டலும், அதில் நாற்பாலும் அடங்கியுள்ளது. அதாவது, அறம்,பொருள், இன்பம், என மூன்று தவிர, வீடுபேறு என்ற மோட்ச சாஸ்திரக் கருத்துகளும் அதில் அடங்கியுள்ளன.

துறவறம், அவாஅறுத்தல், மெய்யுணர்தல் போன்ற அதிகாரங்களில், குறள் மோட்ச சாஷ்திரங்கள் கூறும் கருத்துகளை எல்லாம் நுட்பமாக கூறுகின்றது. ஆனால், கீதை என்பது தர்ம சாஸ்திரக் கருத்துகளையும் விரிவாகக் கூறுகிறது. அதிலும் தர்மத்தில் கர்மயோகம் மட்டும் அதிகம் பேசுகிறது.

கிராமத்தில் தென்னங்கீற்றுக்குப் பின்னே சிரிக்கும் அதே நிலவுதான், நகரத்தில் கான்கிரீட் கம்பிகளுக்கு பின்னே சிரிக்கிறது. உலகில் மொழிகள் மாறினாலும், அந்த மொழியின் வழியே தோன்றும் பரம்பொருளின் ஒளி ஒன்றுதான்.

வள்ளுவருக்கோ, கம்பருக்கோ சமஷ்கிருதத்தில் காழ்ப்புணர்ச்சி கிடையாது. ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ என்று ஒரு குறளில் ஆச்சாரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர். கருமம் என்ற சொல்லைப் பல குறலில் அவர் பயன்படுத்தியுள்ளார்.
மொழியை விடவும், அந்த மொழியின் வழியாகச் செய்யும் விஷய தானமே அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றியிருக்கிறது. நானும் அந்த விஷய தானத்தைக் கருதியே, குறளையும் கீதையையும் இணைத்துப் பேசுகிறேன்.

வள்ளுவரைப் பார்த்து, ‘வள்ளுவப் பெருமானே! கடவுளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று நீங்கள் கேட்டால், அவர் அழகாக விளக்கமாகச் சொல்லி விடுவார்.

கிருஷ்ணனும் அதைப்பற்றி நன்றாகச் சொல்கிறார்.
திருக்குறளில் முதல் குறள், ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது. இது எல்லோருக்கும் தெரிந்த குறள்தான் என்றாலும், இக்குறளை ஆழமாக நோக்கினால், நாம் காணாத பொருளும் காட்டும்.

அகரம் மொழிக்கு முதல், அதுபோல் இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்பது எல்லோரும் அறிந்திருக்கும் பொருள்தான்.

‘அட்சரங்களின் நான் அகரமாக இருக்கின்றேன்’ என்று ஸ்ரீகிருஷ்ணரும் கீத்தையில் கூறுகிறார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
-என்ற குறளில், உலகுக்கு முதலாக இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையும் அவர் தெளிவாகக் கூறிவிட்டார். கடவுள் இருக்கிறார் என்ற கட்சி அவர் கட்சி.

கடவுள் இல்லை என்று சொல்கிறவர்களை பேயாக எண்ணி ஒதுங்க வேண்டும் என்றும் கூட வள்ளுவர் சொல்லியுள்ளார். உலகத்தார் உண்டு என்பதை இல்லைஎன்பவன் வையத்துள் அலகையாய் வைக்கப்படும் என்பது அவர் கருத்துதான்.

‘அஹமாத்மா குடாகேச’ என்று கீதையில் பகவான் சொல்கிறார். உடலில் நான் ஆன்மாவாக இருக்கின்றேன் என்பது அதன் பொருள்.

உடல் வீடு; அதில் உள்ளுறையும் ஆத்மா அந்த வீட்டில் குடியிருப்பவன் ஆவான்.

இதம் சரீரம் கௌந்தேய ஷேத்ர மித்ய பி தீயதே| ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹீ: ஷேத்ராஜ்ஞ இதி தத்வித:

அர்ஜூனா இந்த உடல் ஷேத்திரம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்த உடலில் இருந்து கொண்டு, இந்த உலகையும், இந்த உடலையும் தன்னிலிருந்து வேறானதாக அறிபவன் சேத்திரக்ஞன் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

இதுவரை குரளிலிருந்தும், கீதையிலிருந்தும் சில மேற்கோள்கள் காட்டினேன். குரலிலும் கீதையிலும் உள்ள ஞானமணிகளில் ஒரு கைப்பிடி அளவு அள்ளித் தந்தேன். இன்னும் அவற்றில் ஏராளமாக இருக்கிறது. ஏராளமான ஞானச் செல்வம். அதை முழுவதும் அனுபவிக்க இறையருள் துணை செய்யட்டும்.

நன்றி : விஜய பாரதம்
– சுவாமி ஒங்காரானந்தர்

Leave a Reply