பாரதியார் எங்கே போனாலும் ராகத்துடன் பாட ஆரம்பித்து விடுவார். ராகம், தாளம், மாறாமல் நல்ல இசை நயத்துடன் பாடுவார்.

ஒருநாள் அவர் தன் மனைவி செல்லம்மாளுடன் கடற்கரைக்குச் சென்றார். அந்த மாலை நேரச் சூழலும் கடலும் அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. தாளம் போட்டு, ராகத்துடன் பாட ஆரம்பித்தார்.

கடற்கரையில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பாரதியாரை நெருங்கி வந்து சுற்றி அமர்ந்தது. அவரது இசையை ரசிக்கத் தொடங்கினார்கள்.

திடீரென வேறொரு பாட்டுச் சத்தம் பக்கத்தில் கேட்டது. கரைக்குப் படகை ஒட்டிக் கொண்டு வந்த ஒரு மீனவன் தன்னை மறந்து பாடிக் கொன்டிருந்தான்.

பாரதியாரைச் சுற்றி இருந்து பாட்டைக் கேட்டு கொண்டிருந்த குழந்தைகள் முதலில் எழுந்து மீனவனை நோக்கி ஓடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியவர்களும் எழுந்தனர்.

பாரதியாரும் தன் பாட்டை நிறுத்தினார். கையில் ஒரு தாளை எடுத்துக்கொண்டு மீனவன் அருகே சென்று, அவன் பாடும் பாட்டின் வரிகளை எழுதத் தொடங்கினார். அவன் பாடி முடித்தான்.

அவன் அருகே சென்ற பாரதியார் அவனைப் பாராட்டி, "ஐயா! நீ என் குரு" என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் "என்ன பாரதி! உங்க புலமை, இசை ஞானம் என்ன? இவரைப் போய் குரு என்கிறீர்களே!" என்று கேட்டனர்.

அதற்கு பாரதி, 'உலகத்திலே எந்த இசை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறதோ அது தான் உயர்ந்தது. அது யாராக இருந்தாலும் அவர்களை நான் குருவாக மதிக்கிறேன்.

இந்த மீனவ நண்பனின் பாடு, ராகம், தாளம் கட்டுக்கோப்பை மீறி இருந்தாலும் அது பொதுமக்களைக் கவர்ந்து இழுக்கிறதே!" என்றார்.

நன்றி : விஜய பாரதம்

Leave a Reply