• வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்தபோது வாஜ்பாய் ஒரு சிறுவன். போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார் அந்த சிறுவர். இதை சொல்லி சிரிப்பார் வாஜ்பாய்.

• சுதந்திரப் போராட்டத்தின் போது வாஜ்பாயும், அவரது சகோதரர் பிரேமும் கைதாகி ஒரே சிறையில் வைக்கப்பட்டார்கள்.

• கான்பூரில் சட்டப்படிப்பு படிக்க ஹாஸ்டலில் சேர்ந்தார் வாஜ்பாய். விடுதியில் அவருடன் ஒரே அறையில் தங்கி சட்டப்படிப்பு படித்தவர் அவரது தந்தை!

• வாஜ்பாய் கவிஞர். இவரது கவிதைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார் இன்னொரு பாரத ரத்னாவான லதா மங்கேஷ்கர்.

• மீனாட்சிபுரத்தில் முஸ்லிம்கள் ஹிந்துக்களை கொத்து கொத்தாக மத மாற்ற முயற்சி செய்த போது அதிர்ந்துபோன அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, வாஜ்பாயையே மீனாட்சிபுரம் சென்று சூழ்நிலையில் மாற்றம் கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார். வாஜ்பாயும் தமிழகம் வந்தார்.

• பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் நியுயார்க் சென்றார். அங்கு பொது நிகழ்ச்சி ஒன்றில், ‘நான் ஒரு ஸ்வயம்சேகவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ என்று அறிவித்தார்.

• அமெரிக்காவின் உளவுத்துறையையும் மீறி பாரதத்தை அணு ஆயுதம் தாங்கிய நாடு ஆக்கினார். அதையடுத்து அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதாரத் தடை வாஜ்பாயின் அணுகுமுறையால் தகர்ந்தது.

• வாஜ்பாய் 1970களில் பாரதிய ஜன சங்கத்தின் அகில பாரத தலைவராக இருந்தபோது, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதல் கிளை தொடங்கிய ராயப்பேட்டை சங்கஷ்தானத்தில் சங்க பிரார்த்தனையில் கலந்து கொண்டார். தமிழக ஜன சங்கத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள அவர் சென்னை வந்திருந்தார்.

 மதன் மோகன் மாளவியா

• சொந்தஊர் அலகாபாத் ஆனால் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியது காசியில், காரணம் பண்டைய பாரதத்தில் தட்சீலா, நாளந்தா போன்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக காசி விளங்கியதுதான். தேசம் அதேபோன்ற நிலையை அடைய மாளவியா விரும்பினார்.

• ஹரிஜன் சேவக் சங்கத்தை 1933ல் மாளவியா தொடங்கினார். ஹரிஜன பக்தர்கள் காலாராம் ஆலயத்திற்குள் செல்ல மாளவியா உதவியதால் அவரை அவரது பிராமண ஜாதி அமைப்பு பகிஷ்கரித்தது. ‘ஹிந்துவே உன் மதம் உன்னை பரிசுத்தமானவன் என்று கூறுகிறது என்றால் நீ எந்த ஒரு மனிதனை தீண்டினாலும் அந்தப் புனிதம் போய்விடாது’ இதுதான் மாளவியாவின் கருத்து.

• தீண்டாமையை ஒழிப்பது ஹிந்து வழிமுறை மூலமேதான் என்று கருதிய மாளவியா ஹரிஜனங்களுக்கு மந்திர தீட்சை அளித்தார்.

• பாரதத்தில் ஸ்கவுட் இயக்கம் மாளவியாயின் முயற்சியால்தான் துவக்கப்பட்டது. கட்டுப்பாடான தொண்டர் அணி என்பது மாளவியாவுக்கு பிடித்த விஷயம். எனவே காசியில் ஆர்.எஸ்.எஸ். துவங்கியபோது அந்த அமைப்பிற்கு காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் ஒரு அலுவலகம் அமைத்துக் கொடுத்தார் மாளவியா.

• மாளவியாவின் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்த கோல்வல்கர் (ஸ்ரீ குருஜி) ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது அகில பாரத தலைவர் ஆனார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் மாளவியாவிடம் சங்கத்தைப் பற்றி எடுத்துக் கூறியதும் நிதிதர முன்வந்தார் மாளவியா. பணிவுடன் அதை மறுத்த ஹெட்கேவார், ‘நன்கொடை அல்ல, நீங்களே சங்கத்திற்கு வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

• சுதந்திர போராட்ட வீரரான மாளவியா பத்திரிகை பலம் அவசியம் என்று உணர்ந்தார். மோதிலால் நேருவுடன் சேர்ந்து ‘லீடர்’ என்ற ஆங்கில நாளிதழ் தொடங்கினார். பிறகு ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழை பிர்லாவிடமிருந்து வாங்கினார். அதன் ஹிந்தி பதிப்பையும் தொடங்கினார்.

நன்றி : விஜய பாரதம்

Tags:

Leave a Reply