அப்பாவும் மகனும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒரே நேரத்தில் படித்திருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வாஜ்பாயும் அவரது தந்தையும் தகப்பனும் மகனும் மட்டுமல்ல, வகுப்புத் தோழர்களும் கூட. அதுமட்டுமல்ல, கல்லூரி விடுதியில் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டவர்கள்.

பட்டப்படிப்பை முடித்த பிறகு சட்டம் படிக்க வாஜ்பாய் கான்பூரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் சேர்ந்தார். அவரது தந்தை, கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய், அப்போது பள்ளி ஆசிரியர். அவரும் சட்டம் படிக்க விரும்பினார். அவரும் விண்ணப்பித்தார். இருவருக்குமே இடம் கிடைத்தது. இருவரையும் ஒரே வகுப்பில் போட்டார்கள். இருவருக்கும் விடுதியில் ஒரே அறை.

தந்தையும் மகனும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிப்பது கல்லூரி வளாகம் முழுவதும் பரபரப்பான பேச்சாகியது. அது கல்லூரி நிர்வாகத்தின் காதில் விழுந்ததும் அவர்களைப் பிரித்து வேறு வேறு செக்ஷன்களில் போட்டது. என்றாலும் விடுதியில் ஒரே அறையில் தொடர்ந்தார்கள்.

ஆனால் விடுதிச் சாப்பாடு சகிக்க முடியாததாக இருந்தது. எனவே வெளியே அறையெடுத்துத் தங்கினார்கள். அப்பாவும் மகனும் சேர்ந்து சுயமாகச் சமையல் செய்யக் கற்றார்கள். அதுதான் வாஜ்பாயை பின்னாளில் சாப்பாட்டுப் பிரியராக மாற்றியது. எமர்ஜென்சியின்போது சண்டிகரில் சிறை வைக்கப்பட்டார் வாஜ்பாய். அப்போது அங்கு அவர்தான் 'சீப் குக்'.

வாஜ்பாய் திறமையான சமையல்காரர் என்று நண்பர்கள் வட்டாரத்தில் பெயர் பெற்றிருக்கலாம். ஆனால் ஒரு சிறிய நகரில் வாழ்வைத் துவக்கிய ஒரு சிறுவனை வரலாற்றின் நாயகனாக சமைத்தது காலம்.

விடுதலைக்கு முன் குவாலியர் ஒரு தனி சமஷ்தானமாக, அதாவது ஒரு மன்னரின் ஆட்சியின்கீழ் இருந்தது. வாஜ்பாயும் அவரது அண்ணன் பிரேம் பிகாரி வாஜ்பாயும் குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளையனே வெளியேறு போராட்டம் அவர்களை வசீகரித்தது. என்ன நடந்தது என்பதை வாஜ்பாயின் அண்ணன் பிரேம் பிகாரி, 'மத்தியப் பிரதேஷ் சந்தேஷ்' என்ற இதழில் (மே 12,1973) விவரித்திருக்கிறார்:

'குவாலியர் அரசரிடம், பவார் என்று ஒருவர் அமைச்சராக இருந்தார். உள்துறை, அரசியல் விவகாரம், ராணுவம் எல்லாவற்றிற்கும் அவர்தான் அமைச்சர். நாங்கள் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம் என்ற விஷயம், உளவாளிகள் மூலம் அவருக்குத் தெரிந்து விட்டது. அவர் எங்கள் தந்தையின் நண்பர். தலைமை ஆசிரியராக இருந்த எங்கள் தந்தை அப்போது பள்ளிக் கல்வி ஆய்வாளராகப் பதிவி உயர்வு பெற்றிருந்தார். பவார் அப்பாவை அழைத்து, 'உன் பையன்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிகிறது. கண்டித்து வை' என்று எச்சரித்து விட்டார். அப்பா எங்களைக் கூப்பிட்டுக் கண்டித்துவிட்டு, முன்னெச்சரிக்கையாக எங்களை பூர்வீகக் கிராமமான பதேஷ்வருக்கு அனுப்பி விட்டார்.

பதேஷ்வர் ஆக்ராவிலிருந்து அறுபது மைல் தொலைவில் இருந்த சிறு கிராமம். யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த அழகிய கிராமம். புகழ் பெற்ற சிவன் கோயில்களும், சமணரது கோயில்களும் இருந்ததால் அவற்றிற்கு வந்து போகும் பக்தர்களைத் தவிர பெரிய சலனம் ஏதும் இருக்காது.

ஆனால் ஆங்கிலேயர்கள் அதை ஒரு புரட்சிக் கிராமம் என ஆவணப்படுத்தி வைத்திருந்தார்கள். ஏனெனில் 1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போரில் (சிப்பாய்க் கலகம்') ஈடுபட்ட கிராமம் அது.

குவாலியரில் இருந்து 'வெளியேற்றப்பட்ட' வாஜ்பாய் சகோதரர்கள் தங்கள் போராட்டத்தை அந்தக் கிராமத்தில் அரங்கேற்ற முடிவு செய்தார்கள். உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் ரக்ஷா பந்தனுக்கு மறுநாள், 'புஜாரியா கா மேலா' என்று ஒரு திருவிழா நடக்கும். ஊர் கூடி தங்கள் மூதாதையர்களைப் போற்றிப் பாடல்கள் பாடுவார்கள், 'போற்றிப் பாடடி பொண்ணே!' போல. அந்த நாளை வாஜ்பாய் சகோதரர்கள் தேர்ந்தெடுத்தார்கள் (ஆகஸ்ட் 27, 1942).

அந்தச் சிற்றூரில் ஆங்கிலேய அரசின் வனத்துறை அலுவலகம் ஒன்றிருந்தது. அந்த ஊரில் இருந்த அரசு அலுவலகம் அது ஒன்றுதான். பாடல்கள் பாட ஊர் கூடியதும் தேசபக்திப் பாடல்களைப் பாடிவிட்டு, காந்தியின் உறுதி மொழியைப் படித்துவிட்டு, ஆங்கிலேய அரசுக்கு எதிரான கோஷங்களை முழங்கிக்கொண்டு ஊர்வலம் ஒன்று புறப்பட்டது. சிறிய ஊர்வலம்தான். ஒரு இருநூறு பேர் இருந்திருப்பார்கள் (இருநூறு பேர் எனக் காவல்துறை ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால் நீதித்துறை ஆவணம் 125 பேர் என்கிறது). வாஜ்பாய் சகோதரர்கள் அந்த ஊர்வலத்தில் முன்னணியில் நின்றார்கள்.

பத்து நிமிஷத்தில் ஊர்வலம் ஆங்கிலேயர்களின் அலுவலகத்தை அடைந்தது. அங்கு காங்கிரசின் மூவர்ணக் கொடியை ஏற்றினார்கள். 'ஆங்கிலேயர்களிடமிருந்து நாங்கள் விடுதலை அடைந்து விட்டோம்' என அறிவித்தார்கள். காடுகளில் வந்து மேய்ந்தன என்ற காரணத்திற்காக அங்கு ஆங்கிலேயர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த கால்நடைகளை அவிழ்த்து விட்டார்கள்.

அரசு அலுவலகத்தைத் தாக்கினார்கள் என 37 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) போட்ட காவல்துறை இரண்டு நாள்கள் கழித்து 11 பேரைக் கைது செய்தது. வாஜ்பாய் சகோதரர்கள் இருவரும் அந்த 11 பேரில் அடங்குவர். அட்டார் சிங் என்ற காவல்துறை துணை ஆய்வாளர் அவர்களைக் கைது செய்தார். ஆக்ராவில் ஒரு சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டு கே.என். வாஞ்சூ என்ற நீதிபதி வழக்கை விசாரித்தார்.

ஒரு மாதச் சிறை வாசத்திற்குப் பிறகு (செப்டம்பர் 23, 1942) வாஜ்பாய் சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் நடந்தபோது வாஜ்பாய்க்கு வயது 17. வாஜ்பாய் பொதுவாக தனிமை விரும்பி. பதின்ம வயதில் உள்ள பலரைப் போல அவரது மனம் கவிதையில் தோய்ந்து கிடந்தது. அப்போதே அவர், அவரது கவிதைகளுக்காகப் புகழ் பெற்றிருந்தார். அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் அவர் ஒரு கவிஞராகவே தொடர்ந்திருப்பார். ஆனால் காலத்தின் கணக்குகள் வேறு விதமாக இருந்தன.

'என் நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்… நான் அரசியலில் நுழைந்திருக்காவிட்டால் ஒரு பிரபல இந்தியக் கவிஞனாக மலர்ந்திருப்பேன் என்று. ஒன்றை மட்டும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அரசியல் என்னுடைய கவிதை வளர்ச்சியில் குறுக்கிட்டது உண்மைதான். ஆனால் ஆழ்ந்து பார்த்தால் அரசியல் மட்டும் இதற்கு முழுக்காரணம் அல்ல. எனது சட்டப்படிப்பை விட்டுவிட்டு, 'ராஷ்ட்ர தர்ம' என்ற பத்திரிகையின் ஆசிரியராக லக்னோவிற்குப் போய்ச் சேர்ந்தபோது இந்த வேலை தவிர வேறெந்த வேலையும் என்னால் செய்ய நேரம் கிடைக்கவில்லை. சொல்லப் போனால் அன்றாடம் வருகிற தினசரிப் பத்திரிகைகள், வார இதழ்கள் போன்றவற்றைக் கூட என்னால் படிக்க முடியாமல் போய்விட்டது. கற்பனைச் சிறகுகள் விரித்துப் பறக்கும்போது எந்தவிதமான சழக்குகளும் குறுக்கிடக் கூடாது. தவிர எந்தக் காலக் கெடுவும் இப்பணியைக் கட்டுப்படுத்த முடியாது' என்று எழுதுகிறார் வாஜ்பாய் (வாஜ்பாய் கவிதைகள் முன்னுரை).

பத்திரிக்கை உலகில் அடியெடுத்து வைத்துதான் அவரது வாழ்வின் திருப்புமுனை. 'ராஷ்ட்ர தர்மா' என்ற அந்தப் பத்திரிக்கையும் பின் 1948-ல் துவக்கப்பட்ட, 'பாஞ்ச ஜன்யா' (மகாபாரதப் போரில் கண்ணன் ஒலித்த சங்கின் பெயர்) என்ற பத்திரிக்கையும் இவரது எழுத்துக்களுக்கு இடம் அளித்தன. ஆழ்ந்த தர்க்கமும், வசீகரமான மொழியும் கொண்ட இவரது கட்டுரைகள் இளைஞர்களை ஈர்த்தன.

50 ஆண்டுகளுக்கும் மேலாக வாஜ்பாயினுடைய நண்பராகவும் சகாவாகவும் இருந்த அத்வானி அவருடனான முதல் சந்திப்பைப் பற்றி எழுதுகிறார்:

அது 1952-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்காக பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய ஆண்டு அடல்ஜி தொடங்கிய பாரதிய ஜனசங்கம் என்ற கட்சியைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ராஜஸ்தான் கோட்டவிற்கு அடல்ஜி வந்திருந்தார். அப்போதுதான் முதன் முறையாக அவரைப் பார்க்கிறேன். அப்போது அவருக்கு 27, 28 வயது இருக்கும். இளமைத் துடிப்போடு என்னைப் போலவே ஒல்லியாக இருந்த அவரது தோற்றம் இன்றளவும் என் மனதில் அப்படியே இருக்கிறது. கவித்துவமான அவரின் பேச்சு, அறிவாற்றல், கொள்கைப் பிடிப்பு இவற்றைப் பார்க்கும் எந்த இளைஞனும் எளிதாக அவர் பின்னால் அரசியலுக்கு வந்துவிடுவான் என்றுதான் எனக்குத் தோன்றியது.

1957-இல் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நுழைகிறார் வாஜ்பாய். தில்லி வாழ்க்கையும் அரசியலும் இயல்பாகவே அவருக்குள் இருந்த மனிதத்துவம் மிகுந்த மனதை மேலும் பக்குவப்படுத்தின. ஓர் உதாரணம், நேரு இறந்தபோது அவர் ஆற்றிய உணர்ச்சியும் கவிதையும் ததும்பும் உரை.

நேருவை முற்றிலுமாக எதிர்த்த அமைப்பிலிருந்து உருவானவர் வாஜ்பாய். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நேரு சாதாரண இந்தியர்களைப் பற்றி ஏதுமறியாத, மேலைநாட்டு கலாசாரத்தில் தன்னை இழந்த பணக்காரர்; சிறுபான்மையினரை கவர்ந்திழுக்க போலி மதச்சார்பின்மை பேசுபவர். காஷ்மீரில் பாதியை விட்டுக் கொடுத்த பலவீனமான நிர்வாகி. பொருளாதாரக் கொள்கைகளிலோ சோவியத் யூனியனின் சோஷலிச முத்திரை கொண்டவர்.

நேருவின் மரணம் நிகழ்வதற்குச் சில நாள்களுக்கு முன், 1964-ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது வாரம் 'காஷ்மீர் சிங்கம்' ஷேக் அப்துல்லா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல, பாகிஸ்தானை ஆண்டு கொண்டிருந்த சர்வாதிகாரி அயூப்கானோடு காஷ்மீர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

நேருவின் இந்தச் செயலைக் கடுமையாக எதிர்த்தார் வாஜ்பாய். நாடாளுமன்றத்தில் இருவருக்குமிடையே அனல் பறக்கும் விவாதங்கள் நிகழ்ந்தன. அவை விவாதங்கள் அல்ல, ஒரு சொற்போர்.

ஷேக் அப்துல்லா, பாகிஸ்தான் பிடியில் உள்ள காஷ்மீர் தலைநகரான முசாபராபாத்தைச் சென்றடைந்தபோது நேரு மரணமடைந்த செய்தி அவரை எட்டியது. பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர் நாடு திரும்பினார்.

இந்தத் தருணத்தில் வாஜ்பாய், நேருவிற்கு நிகழ்த்திய அஞ்சலி உரையை இப்போது படித்தாலும் மேனி சிலிர்க்கிறது (இந்தியில் உள்ள இந்த உரையை 1964-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற அவைக் குறிப்புகளில் காணலாம்).

எந்த நேருவோடு சில தினங்களுக்கு முன் அனல் பறக்கும் விவாதத்தை நடத்தினாரோ அந்த நேருவைப் பற்றி வாஜ்பாய் தனது கவித்துவமான மொழிகளிலே சொன்னார்: 'ஒரு பாடல் மௌனமாகிவிட்டது. ஒரு சுடர் கண்ணால் காண முடியாத இடத்தில் ஒளிந்து மறைந்து விட்டது. ஆனால் அவரது கனவுகள் மீதமிருக்கின்றன. நிறைவேறாமல் அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்தக் கனவு என்ன? அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் விடுதலை. இந்த இழப்பு ஒரு குடும்பத்தினுடையது அல்ல. ஒரு சமூகத்தினுடையது அல்ல. ஒரு கட்சியினுடையது அல்ல. தனது இளவரசன் நிரந்தரமாகத் துயில் கொள்ளச் சென்று விட்டதை எண்ணி இந்திய அன்னை துயறுற்றிருக்கிறாள். சூரியன் மறைந்து விட்டது. நட்சத்திரங்களின் ஒளியில் நடப்போம் நாம். சோதனையான காலம்தான். ஆனால் அந்த லட்சியங்கள் முக்கியமானவை. ஏனெனில் இந்தியா வளம் மிக்கதாக, திறம் கொண்டதாக, வலிமை வாய்ந்ததாக ஆக வேண்டும்.'

இது பேச்சு, செயல் ஒன்றும் அவரது பண்பைப் பேசுகிறது. எமர்ஜென்சியை அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ், ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. தொடர்ந்து முப்பதாண்டு காலம் காங்கிரசும், இரண்டு தலைமுறைகளாக நேரு குடும்பத்தினரும் ஆண்டு வந்ததால் அதிகாரிகள் பலர் அவர்களது விசுவாசிகளாக ஆகியிருந்தார்கள். என்றாலும் எதிர்கட்சியிலிருந்து வந்து இன்று அமைச்சர்களாகி இருப்பவர்களின் அபிமானத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக காக்கா பிடிக்கும் முயற்சிகளில் இறங்கியிருந்தார்கள்.

மொரார்ஜி தலைமையில் அமைந்த அரசில் வாஜ்பாய் அயலுறவுத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். பதவியேற்றபின் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தார். சுவர்களைச் சுற்று முற்றும் பார்த்தார். 'இங்கிருந்த நேருவின் படம் எங்கே? என்று அதிகாரிகளைக் கேட்டார். 'ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காதோ எனக் கழற்றி வைத்து விட்டோம்' என்றார்கள் அதிகாரிகள் 'அதை உடனே எடுத்து வந்து மாட்டுங்கள்' என்று சீறினார் வாஜ்பாய்.

நேருவிடம் மதிப்பு வைத்திருந்தது போலவே அண்ணாவில் தொடங்கி வைகோ வரை திராவிட இயக்கத் தலைவர்களிடமும் நல்ல நட்புக் கொண்டிருந்தார். தனது கவிதைத் தொகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பை அண்ணாவிற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் வாஜ்பாய்.

'என்னுடைய கவிதைகள் தமிழில் வெளியிடப்படும் இந்த நேரத்தில் எனது கெழுதகை நண்பர் அமரர் சி.என்.அண்ணாதுரை அவர்களை நினைவு கூர்ந்து ஒரு தனி பாராட்டுரை கூற நான் பெரிதும் விரும்புகிறேன். தமிழகத்தின் தலைசிறந்த தலைவரும். முன்னாள் தமிழக முதல்வருமான இப்பெருமகனார் எனது இனிய நண்பர். அது மட்டுமல்ல, எங்களது நட்பு ஒருவர் பால் மற்றவர் கொண்ட நம்பிக்கையாலும் மரியாதையாலும் பெரிதும் வளர்ந்தது. இந்த நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது.

நானும் அவரும் 1960-களில் ராஜ்யசபா உறுப்பினர்களாக தில்லியில் இருந்தோம். அறிஞர் அண்ணா இந்திய மொழிகள் எல்லாவற்றையும் நம் அரசியல் சாசனத்தின்கீழ் தேசிய மொழிகளாகக் கொண்டுவர வேண்டும் என்று நியாயமாக விரும்பினார்கள்.

சிலர் நினைப்பது போல் அண்ணா அவர்கள் இந்திக்கு எதிரானவர் அல்லர். இது பற்றி ஒரு சிறு சம்பவத்தை இங்கு நினைவு கூர்வது என் கடமையாகும். மார்ச் 1965-ஆம் ஆண்டில் ஒரு விவாதத்தின்போது அண்ணா சொன்னார்கள். 'இந்தி மொழிபால் எங்களுக்கு என்ன வெறுப்பு? ஒளிவு மறைவின்றி நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். எந்த மொழியின் மீதும் எங்களுக்கு வெறுப்பு கிடையாது. அதிலும் முக்கியமாக என் அருமை நண்பர் திரு.வாஜ்பாய் அவர்கள் பேசும் போது இந்த மொழி ஒரு நல்ல மொழியாகவே இருக்கிறது என எண்ணுகிறேன்' என்றார்.

'எனவே இந்தத் தமிழ் வெளியீட்டை என் அருமை நண்பர் மாபெரும் அண்ணா அவர்களின் நினைவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்' என்று எழுதுகிறார் வாஜ்பாய்.

வாஜ்பாய்க்கும் தனக்கும் நடந்த ஒரு சுவாரஷ்யமான உரையாடல் குறித்து வைகோ ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். பொடா வழக்கின்கீழ் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை வழக்கில் இருந்து விடுவிக்க, அப்போதைய மத்திய அரசிடம் தமிழகத் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். வாஜ்பாய் தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் வைகோ ஜாமீனில் விடுதலை ஆனார்.

மே 24, 2004 அன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த காங்கிரஸ் புதிய அமைச்சரவை பதிவி ஏற்பு வாஜ்பாயும் வைகோவும் கலந்து கொண்டார்கள். அப்போது நேருக்கு நேர் சந்தித்த இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
வாஜ்பாய்: என்மீது கோபமாக இருக்கிறீர்களா?

வைகோ: எனக்கு என்ன கோபம்? எப்போதும் போல் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன். தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும்போது கூட, 'வாஜ்பாய் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்' என்றுதான் சொல்வேன்.

வாஜ்பாய்: அதுபற்றி நானும் கேள்விப்பட்டேன். நீங்கள் சிறையில் இருக்கும்போது நான் நேரில் வந்து பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் மரபும், விதியும் அனுமதிக்கவில்லை. தொலைபேசியிலாவது பேச விரும்பினேன். அதற்கும் வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டார்கள்.

வைகோ: ஜார்ஜ் பெர்னாண்டஸ் இதுபற்றி என்னிடம் சொன்னார்.
வாஜ்பாய்: என்றைக்குமே நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவர் நீங்கள்.

வைகோ: கடைசியாக நான் சிறையில் இருந்து எழுதிய கடிதம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா?

வாஜ்பாய்: அந்தக் கடிதத்தை இன்றைக்கும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அவரது இந்த அணுகுமுறை அவருக்கு எல்லாக் கட்சிகளிலும் நண்பர்களைப் பெற்றுத் தந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் எதிரி நாடான பாகிஸ்தானுடனும் நட்பைப் பெற்றுத் தந்தது. முஷரப் காலத்தில் அவரது அயலுறவுத் துறை அமைச்சராக இருந்த குர்ஷீத அகமது கசௌரி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் எப்படி வாஜ்பாயும் முஷாரபும் சேர்ந்து 2002-இல் இரு நான்கு அம்சத் திட்டத்தை உருவாக்கினார்கள் என்றும் அதை எப்படி 2007 வரை நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் சில சம்பவங்கள் மூலம் விவரித்திருப்பதாகவும் அந்த நூல் விரைவில் வெளிவரப் போவதாகவும் பாகிஸ்தான் பத்திரிக்கை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படி 'எல்லை மீறி' நட்புப் பாராட்டியது கட்சிக்குள் அவரைப் பற்றி சில முணுமுணுப்புகளை எழுப்பின. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை வாஜ்பாய் விரும்பவில்லை. அதைக் குறித்து வருந்தியதாகச் சொல்கிறார்கள். கட்சியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் (அவர் இப்போது அமைச்சரவையில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்) பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது, 'வாஜ்பாய் அங்கில்லையே?' என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது, 'இருந்திருந்தால் மட்டும் என்ன செய்திருப்பார்? நாலு வரி கவிதை பாடியிருந்திருப்பார்' என்று கமெண்ட் அடித்தாராம்.

இந்த விஷயம் வாஜ்பாய் காதிற்குப் போயிற்று. சில வாரங்கள் கழித்து லக்னோவில் ஒரு விழாவில் அவரைப் பேச அழைத்தார்கள். 'நான் என்ன செய்துவிடப் போகிறேன், நாலு வரி கவிதை பாடுவதைத் தவிர' என்று தனதுபேச்சை ஆரம்பித்து பலவேறு பிரச்சினைகளைத் தொட்டு ஒவ்வொன்றைப் பற்றிப் பேசும் போதும் 'நான் என்ன செய்து விடப் போகிறேன், நாலு வரி கவிதை பாடுவதைத் தவிர' என்று திருப்பித் திருப்பிச் சொல்லி அந்தப் பிரமுகரை முகம் வெளிறச் செய்து விட்டார் வாஜ்பாய். ஆனால் அவர் அடித்த கமெண்ட்டை மனதில் வைத்துக் கொள்ளாமல் பின்னால் அவரை ராஜ்யசபை உறுப்பினராகவும் ஆக்கினார்.

அதேபோல் 2002 கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரங்களின்போது, 'இது ராஜ தர்மம் அல்ல' என்று மோதியைக் கண்டித்தவரும் அவர்தான்.

தனக்குச் சரியெனத் தோன்றியதை, விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பேசியவர் மட்டுமல்ல, செயலிலும் காட்டியவர். அவர் 1950-களில் தில்லி எம்.பி.யாக இருந்தபோது அவரது நண்பராக இருந்தவர் பி.என் கவுல். தில்லிக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அவர் அகாலமாக இறந்து போனபோது, அவரது மனைவி, மகள் எனக் குடும்பம் முழுவதையும் காப்பாற்றும் பொறுப்பை வாஜ்பாய் ஏற்றுக் கொண்டார். அவரது மகள் நமீதாவைத் தனது மகளாகத் தத்து எடுத்துக் கொண்டார்.. அப்போது அதைக் குறித்து பல கிசுகிசுக்களும் முணுமுணுப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. அவர் பிரதமரானபோது தனது வளர்ப்பு மகளின் கணவரை பிரதமர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக நியமித்து கொண்டபோதும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போதும் அதைப் பொருட்படுத்தவில்லை.

வாஜ்பாயின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. நறுக்கென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் சிரிப்பைப் பற்ற வைப்பார். ராம் ஜென்ம பூமிக்காக அத்வானி ரதயாத்திரை கிளம்பும்போது வாஜ்பாய் அடித்த கமெண்ட்: 'புறப்பட்டுவிட்டது வானர சேனை!'

'அவுட்லுக்' பத்திரிகையின் ஆசிரியர் வினோத் மேத்தா, வாஜ்பாயின் நண்பர்களில் ஒருவர் அவர் பிரதமாராக இருந்தபோது அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். அப்போது ஜோக்குகள் தூள் பறக்கும். ஒருமுறை வினோத் மேத்தா போனபோது வாஜ்பாய் சோர்வாகக் காணப்பட்டதைக் கண்டு, 'என்ன ஆச்சு? ஏன் கவலையாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். சிரிக்காமல் வாஜ்பாய் சொன்னார்: 'அதுவா, உங்களுக்குப் பிறகு என்னை ஜெயலலிதா சந்திக்க வருகிறார்.'

"1991-இல் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நான் இருந்தபோது தேர்தல் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடந்தது. நான் பேசியபோது தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் நின்று வெற்றி பெறுவோம் என்ற பொருளில் கடிங்கே (khadinge) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டம் முடிந்தவுடன் மாடிப் படிகளில் இறங்கி வந்தபோது பின்னால் இருந்து என் தோளில் யாரோ கை போடுவதை உணர்ந்து திரும்பினேன். பார்த்தால் வாஜ்பாய். 'ஹிந்தி அகராதிக்குப் புதிதாக ஒரு வார்த்தையை கொடுத்திருக்கிறீர்கள். நன்றி!' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேர்தலில் 'நிற்போம்' என்பதற்கு கடியங்கே என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது" என்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசன்.

புலமையும் இனிமையும் கொண்டு கேட்பவர்களை வசீகரித்த அந்தக் குரல் இன்று பேச்செழாமல் முடங்கிக் கிடக்கிறது. நடமாட்டமின்றி நோய்வாய்ப்பட்ட நிலையில் அண்மையில் தனது 90-வது பிறந்தநாளைக் கடந்தார் வாஜ்பாய். அந்தப் பிறந்த நாளில்தான் அவருக்குப் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கார்கில் போரில் நாம் வென்றபோதே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். காலம் தாழ்ந்து அளிக்கப்படுகிறது இந்த விருது.

காலத்தின் கரங்களில் உள்ள மகுடத்தை யார் அறிவார்?

நன்றி : புதிய தலைமுறை

Leave a Reply