சர்வதேச ஒப்பந்த விவகாரத்துக்கு தீர்வு கண்டு விட்டால். கருப்புப் பண குற்றத்தில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை வழங்குவதில் பாஜக வெற்றிபெறும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டுவருவது என்பது மிக மிக சிக்கலான விவகாரம். இது இந்தியா மட்டுமே சார்ந்த விவகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்தங்கள் குறுக்கிடுகின்றன.

இது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. கருப்புப்பண விவகாரத்தில் சர்வதேச அரங்கில் நல்லதொரு சூழ்நிலையை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார் . சர்வதேச ஒப்பந்த விவகாரத்துக்கு தீர்வு கண்டு விட்டால். கருப்புப் பண குற்றத்தில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை வழங்குவதில் பாஜக வெற்றிபெறும்.

மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த உடனேயே சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள சுமார் 700 பேர் அடங்கியபட்டியல் சிறப்புப் புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை.

முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதை தடுப்பதில் எதிர்க் கட்சிகள் குறியாக உள்ளன. மாநிலங்களவையை முடக்கி மத்திய அரசின் வளர்ச்ச்சி திட்டங்களை முறியடிக்க எதிர்க் கட்சிகள் நினைத்தால் அது தவறாகும்.

நாடு வளர்ச்சி அடைவதற்கான செயல்திட்டங்கள் நிறைவேறவிடாது எதிர்க்கட்சிகள் தடுக்க முன்வந்தால் அதை பாஜக அனுமதிக்காது. ஏற்கெனவே இதுதொடர்பாக பல அவசர சட்டங்களை கொண்டுவந்துள்ளோம். மோடி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார்,

முன் எப்போதும் இல்லா வகையில் மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட், ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோகவெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச்செய்ய வேண்டியது அவசியம்.

பொய்சொல்வதில் சாதனை நிகழ்த்துகிறது ஆம் ஆத்மி கட்சி. மலிவான உத்திகளை கையாண்டு சாமான்யர்களின் கட்சி என தங்களை பிரபலப்படுத்திக் கொள்கிறது அக்கட்சி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்கிய போது இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கவில்லை. அவர்களாகவே தாக்குதலை நிறுத்தினர். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தகுந்தபதிலடி கொடுக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் முப்படைகளை நவீனப்படுத்துவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் நவீன மயமாக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. என்று அமித் ஷா பேசினார்.

Leave a Reply