மேற்கு வங்கத்தில் ரூ.2.43 லட்சம் கோடி முதலீடுசெய்ய தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக மாநில முதல்வர் மம்தாபானர்ஜி வெளியிட்ட தகவல்கள் தவறானது என்று பாஜக விமர்சித்துள்ளது.

கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தொழில் நிறுவனங்கள் மேற்குவங்கத்தில் முதலீடு செய்ய உள்ள தொகையை மம்தாபானர்ஜி தெரிவித்தார்.

அதை மேற்குவங்க பாஜக தலைவர் ராகுல் சின்ஹா மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் சில நிறுவனங்கள் ரூ.2.43 லட்சம் கோடி முதலீடுசெய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் ரூ.1.14 கோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் வழியாக வரும் முதலீடாகும்.

மேலும், ரூ.77 ஆயிரம் கோடிக்கு குடியிருப்புகள் கட்டுவதையும், ரூ.7,000 கோடிக்கு தொழில்பூங்கா கட்டுவதையும் மம்தா குறிப்பிட்டார். அதை தொழில் துறை முதலீடாகக் கருதக் கூடாது.

மேற்குவங்கத்தில் நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை, குஜராத் மாநாட்டுடன் ஒப்பிடமுடியாது.

சாரதா நிதி நிறுவன மோசடி காரணமாக திரிணமூல் காங்கிரஸின் செல்வாக்கு மக்கள்மத்தியில் வேகமாக சரிந்து வருகிறது. நன்கொடை என்ற பெயரில் போலியான வங்கி கணக்குகள் மூலம் திரிணமூல் காங்கிரஸூக்கு பணம் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மக்களவை தேர்தலின் போது, கட்சியின் வருமானம் குறித்து பொய்யான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸார் சமர்ப்பித்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply