நான் உத்தரகண்ட்டில் பிறந்தாலும் தமிழ் மண்ணின் மைந்தனாகவே எண்ணி வாழ்கிறேன்'என்று தருண் விஜய் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு திருவள்ளுவர் திருப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:

திருவள்ளுவரைப் பற்றி நாடு முழுவதும் வாழும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை நிலைநாட்டவும், புது தமிழ்ச் சமுதாயம் அமைக்கும் நோக்கத்திலும் திருவள்ளுவர் திருப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட திருக்குறள், தமிழர்களின் பெருமையையும், அடையாளத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது. உத்தரகண்ட்டில் பிறந்த நான், ஏதோ உள்நோக்கத்துடன் தமிழ் மொழியைப் போற்றுவதாகச் சொல்கிறார்கள். நான் அந்த மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் மண்ணின் மைந்தனாகவே எண்ணி வாழ்கிறேன்.

தமிழகத்தில் மறைந்து கிடக்கும் இலக்கியத்தையும், கலாசாரத்தையும் நாடுமுழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எனது செயல்பாடுகள் உள்ளன என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சொந்த ஊரான டேராடூனில் விரைவில் தமிழ்ப்பயிற்சி மையம் தொடங்க உள்ளேன்.

திருக்குறளை நாடுமுழுவதிலும் அனைத்து மொழிகளிலும் பாடமாக வைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வரும் நிலையில், பஞ்சாப் அரசும் இதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

திருக்குறளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நாடுமுழுவதும் கார்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் அந்தந்த மாநிலமொழிகளில் திருக்குறளை எழுதச் செய்யவேண்டும்.

உலகில் பெருகிவரும் தீவிரவாதத்துக்கும், அடிப்படை வாதத்துக்கும் திருக்குறளில் உள்ள கருத்துகள் நல்ல தீர்வாக அமையும். திருவள்ளுவர் இந்தியாமுழுமைக்கும் சொந்தமானவர். எனவே, திருக்குறள் மூலமாக இந்தியாவை இணைக்கவேண்டும் என்றார் அவர்.

Leave a Reply