மத மாற்ற விவகாரம், சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் போன்றவை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான வாய்ப்புகளை பாதிக்கின்றன என்று மத்திய அமைச்சர் உபேந்திர குஷ் வாஹா தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக் கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

ஜம்முகாஷ்மீர் மாநில சட்டப் பேரவைக்கு கடந்தமாதம் நடைபெற்ற தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அங்கு தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்றார். அதில் கலந்துகொண்ட பொதுமக்களின் எண்ணிக்கை வைத்து, காஷ்மீர் பிராந்தியத்தில் ஓரிரு இடங்களிலாவது பாஜக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மதமாற்ற விவகாரம், சர்ச்சைக்குரிய பேச்சுகள் போன்ற காரணங்களால், காஷ்மீர் பிராந்தியத்தில் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்தப்போக்கு தொடர்ந்தால், எதிர்வரும் தேர்தல்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும். இதனை மனதில்கொண்டு, பாஜக ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், வளர்ச்சி திட்டங்களை நோக்கி செயல்பட பிரதமர் மோடியை அனுமதிக்க வேண்டும்.

விரைவில் நடை பெறவுள்ள தில்லி பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் பேசும்படியான எவ்வித சர்ச்சைகளுக்கும் இடமளிக்காமல், நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் பிரச்னைகளுக்கும் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும்வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் செயல்பட வேண்டியது அவசியம்.

மதம் என்பது தனிமனிதவிருப்பம் சார்ந்த விஷயமாகும். ஒருவரை கட்டாயப் படுத்தி மதமாற்றம் செய்வதுதவறு.

இதனைத் தடுக்க, ஏற்கெனவே உள்ள சட்டங்களே போது மானவை. மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டுவர வேண்டியதில்லை என்று உபேந்திர குஷ் வாஹா தெரிவித்தார்.

Tags:

Leave a Reply