வணிகர் மரபில் உதித்த திருக்கச்சி நம்பிகள் பூந்தமல்லி வரதராஜப் பெருமாளுடன் பேசும் பாக்கியம் பெற்றவர். பலருடைய சந்தேகங்களை பகவானிடமே கேட்டு தெளிவுபட எடுத்துக் கூறியவர்.

ஒருநாள் திருக்கச்சி நம்பியிடம் அவருடைய சீடர் ஒருவர், “தங்களுக்கு தொண்டு செய்துவரும் எனக்கு, வைகுந்தத்தில்பெருமாளுடன் வாசம் செய்யும் பாக்கியம் கிடைக்குமா?” என்று பணிவுடன் கேட்டார்.

நம்பிகளும் வரதராஜப் பெருமாளிடம் கேட்க, “அவனுக்கு இல்லாத இடமா? வைகுந்தம் அவனுக்கு நிச்சயம் உண்டு” என்று பதிலளித்தார் பெருமாள்.

மகிழ்ச்சி அடைந்த சீடன் திருக்கச்சி நம்பியிடம், “எனக்கு வைகுந்தம் உண்டு என்பது தீர்மானம் ஆகிவிட்டது. தாங்கள் அங்கு இருந்தால் தானே உமக்கு நான் தொண்டு செய்யமுடியும்? உங்களுக்கும் வைகுந்தம் உண்டா என்று கேளுங்கள்” எண்டு கேட்க, நம்பிகளும் வரதராஜப் பெருமாளிடம் கேட்டார்.

“உனக்கா… வைகுந்தமா…எதற்கு? கண்டிப்பாக கிடையாது” என்று மறுத்துவிட்டார் பெருமாள்.

“சுவாமி, தினம் தினம் இங்கு தங்களுடன் பேசி, விசிறி வீசும் பாக்கியம் கிடைத்த எனக்கு அங்கு கிடையாதா? எனது சீடனுக்கு வைகுந்தம் கொடுத்த நீர், எனக்கு மறுப்பது நியாயமா?” என்று சொல்லி அழுதார்.

“உமது சீடன், என் பக்தனான உமக்குத் தொண்டு செய்த புண்ணியத்தால் வைகுந்தம் வருகிறான். என் அடியார்களுக்கு நீங்கள் தொண்டு செய்தது உண்டா?” என்று புன்சிரிப்புடன் வினவினார்.

இதன்பின், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பிகளுக்குத் தெரியாமல், அவருக்கு மாட்டுவண்டி ஓட்டி, துணி துவைத்து கைங்கர்யங்கள் பல செய்தார் என்கிறது குரு பரம்பரை வரலாறு.

பகவானைவிட அவனின் திரு அடியார்களுக்கு தொண்டு செய்யும் பக்தனே உயர்ந்தவர் என்பதால்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் தாசர்களை வழிபடும் வழக்கம் வளர்ந்துள்ளது.

நன்றி : விஜயபாரதம்

Tags:

Leave a Reply