பிரதமர் மோடி வளர்ச்சி என்ற ஒரே இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவரது ஆட்சி மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என "துக்ளக்' வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமி தெரிவித்தார்.

"துக்ளக்' வார இதழின் 45-ஆவது ஆண்டு நிறைவு விழா சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சோ பேசியதாவது:

தமிழகத்தில் ஜெயலலி தாவுக்கு மாற்றாக யாரும் இல்லை. திமுக தனது செல்வாக்கை இழந்துவருகிறது. அதிமுகவுக்கு மாற்றாக பாஜக வேண்டுமானால் வரலாம்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தான் தமிழக அரசியலின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும். இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டால், 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இல்லையெனில் அமையப்போகும் கூட்டணிகளும், மக்களின் மனநிலையும் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும். ஆனால், என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது.

சொத்துக் குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு சாதகமான பல அம்சங்கள் இருப்பதை சட்ட வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் கணக்குகளை நீதிபதி தோராயமாக மாற்றி அமைத்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம் 2010-இல் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி ஜெயலலிதா வழக்கில் வருமான வரித் துறை அளித்த விவரங்களை தனி நீதிபதி ஏற்கவில்லை. பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது கணக்கில் கொள்ளப்படவில்லை. இவ்வாறு ஜெயலலிதாவுக்கு பல சாதகமான அம்சங்கள் உள்ளன. ஆனால், இறுதித் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என இப்போது கணிக்க முடியாது.

திருவாரூர் கருணாநிதியாக மாற வேண்டியிருக்கும் என பாஜகவுக்கு கருணாநிதி விடுத்த எச்சரிக்கையை ஹெச். ராஜா பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. திமுக பொதுக் குழுவில் இந்த எச்சரிக்கையை அவர் பாஜகவுக்கு விடுக்கவில்லை. பாஜகவுக்கு என்ற பெயரில் மறைமுகமாக தனது குடும்பத்துக்கு எச்சரிக்கை அவர் விடுத்துள்ளார்.

கருணாநிதி தனது கடுமையான உழைப்பு, சிந்தனை மூலம் உயரத்துக்கு வந்தவர். கட்சியிலும், குடும்பத்திலும் எண்ணற்ற பிரச்னைகளைச் சமாளித்து இந்த வயதிலும் கட்சியைக் கட்டிக் காத்து வருகிறார். கருணாநிதிக்கு அவரது பலமும், எல்லையும் தெரியும். அதனால் தான் இன்றளவும் அரசியலில் நிலைத்து நிற்கிறார். அவர் 11-ஆவது முறையாக திமுக தலைவராக வெற்றி பெற்றுள்ளது குறித்துக் கேட்டார்கள். 12-ஆவது முறையும் அவர் தான் வெற்றி பெறுவார்.

இந்து அமைப்புகள் தினந்தோறும் எதையாவது பேசி பாஜக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன. நரேந்திர மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு இதுபோல நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, இந்து அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்த வேண்டும்.

பிரதமர் மோடி வளர்ச்சி என்ற ஒரே இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவரது ஆட்சி மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் நாடெங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜம்முவில் கூட பாஜகவால் சாதிக்க முடிந்துள்ளது. மோடியின் கடந்த 7 மாத ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு பத்தாக பதிலடி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் எல்லைப் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்க பாகிஸ்தான் முயல்கிறது. மோடி ஆட்சியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படும், ஊழல் குறையும் என நான் நம்புகிறேன்.

மதமாற்ற தடைச் சட்டம் வேண்டும்: மறு மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள் மதமாற்றம் குறித்துப் பேச மறுக்கிறார்கள். தனி நபர் மதம் மாறுவது பிரச்னை அல்ல. கூட்டமாகக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது தடுக்கப்பட வேண்டும். அதற்காக, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவதில் தவறில்லை. இந்து மதத்தில் மதமாற்றத்துக்கு வழியே இல்லை. சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக பாஜக தவிர மற்ற கட்சிகள் இதனை அரசியலாக்கி வருகின்றன என்றார் சோ.

Leave a Reply