குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள்நூலை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக் கிழமை வெளியிட்டார்.

தமிழின் செவ்வியல் இலக்கியப் படைப்புகளில் பிரதான இடத்தை பெற்றுள்ள நூலாக திருக்குறள் திகழ்கிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு படைக்கப்பட்ட இந்நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகள் இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துவதாக உள்ளன.

மேலும், எந்தவொரு நாடு, மொழி, தலைவர், சமூகம், மதம், சாதியை குறிப்பிடும் வாசகங்கள் இந்தநூலில் இடம்பெறாதது இதன் சிறப்பம்சம்.

இத்தகைய சிறப்பு மிக்க நூலை இது வரை மொழி பெயர்ப்பு செய்யப்படாத அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து எடுத்துச் செல்ல மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஹிந்தி மொழிப் பேராசிரியரும், குஜராத்தில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் டாக்டர் பி.சி. கோகிலாவிடம் குஜராத்தியில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அப்பணியை அவர் முடித்ததால், திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அந்நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, "புலவர் திருவள்ளுவருக்கு நான் தலைவணங்குகிறேன்; எளிமையும், அளப்பரிய நம்பிக்கையும் கொண்டுள்ள அவரது சிந்தனையும், எழுத்தும் பல நூற்றாண்டுகளாக மனித இனத்தின் மீது வலுவான ஆளுமையைச் செலுத்தி வருகிறது' என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டாக்டர் பி.சி. கோகிலா, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் வி.ஜி. பூமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:

Leave a Reply