ரகசியமாக அணு ஆயுதங் களை தயாரிக்க பாகிஸ்தான் அணு உலைகளை நிறுவியுள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது. கடந்த 15ம் தேதி செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய அணு உலை அமைந்துள்ளதற்கு ஆதாரம் சிக்கியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஷாப்மாவட்டத்தில் இருக்கும் அணு உலை வளாகத்தில் புதிய அணு ஆயுத தயாரிப்புக்கான உலைகள் அமைக்கப்பட்டுள்ளன,

இந்த 4வது அணு உலை ஏற்கனவே செயல்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அணுஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் தீவிரமாக இறங்கியுள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதபரவல் தடைச் சட்டத்தை வலியுறுத்தி வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில் இதனை பிரதமர் நரேந்திரமோடி அவரது கவனத்திற்கு கொண்டுசெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஷாப் மின் நிலையம் 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் அணு மின் உற்பத்திக்கு தேவைப்படும் கடினநீர் உற்பத்தி ஆலை அதில் நிறுவபட்டது.

1998ம் ஆண்டு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அணுகுண்டுகள் வெடிப்பு சோதனைகள் நடந்ததற்கு பின்னர் குஷாப் அணு மின் நிலையத்தில் 2000-ம் ஆண்டு முதல் மூன்று அணு உலைகள் அமைக்கப்பட்டன. தற்போது 4வது உலை செயல்படுவது ஆதாரப் பூர்வமாக தெரியவந்துள்ளது.

Leave a Reply