காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சீக்கிணாங்குப்பம் கிராமத்தில் சுமார் 140 ஏக்கர் பரப்பளவில் சென்னையை சேர்ந்த 'ப்ரோஆல்ஜென் பயோடெக்' என்ற தனியார் நிறுவனம் கடல் பாசி உற்பத்தி மற்றும் அதில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசு சமீபத்தில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ரெயில் மற்றும் அனைத்து வித அரசு வாகனங்களுக்கும் பயோ டீசலை பயன்படுத்தி இயக்க முடிவு செய்து உள்ளது.

இதையடுத்து இந்த நிறுவனத்தில் பாசி தயாரிக்கும் முறைகளையும், திருக்கழுக்குன்றம் அருகே நடுவக்கரை கிராமத்தில் செயல்பட்டு வரும் பயோ டீசல் தயாரிக்கும் ஆலையில் உற்பத்தி முறைகளையும் ஆய்வு செய்வதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை நேரில் வந்து பார்வையிட்டனர்.

தனியார் நிறுவன இயக்குனர் பாலமுகுந்தன், மத்திய மந்திரிகளை வரவேற்று பாசி வளர்க்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வளர்க்கப்படும் பாசிகளை ஆய்வு செய்தனர்.

2007-ம் ஆண்டு முதல் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் கிடைக்கும் உப்பு நீரை பயன்படுத்தி பாசி வளர்த்து வருவதாகவும், 40 தினங்களுக்கு பிறகு அறுவடை செய்து பதப்படுத்தி அதில் இருந்து நச்சு புகை இல்லாத பயோ டீசல் தயாரித்து வருவதாகவும் மத்திய மந்திரிகளுக்கு பாலமுகுந்தன் விளக்கம் அளித்தார்.

சுமார் அரை மணி நேரம் ஆய்வு செய்த மத்திய மந்திரிகள், பின்னர் அங்கிருந்து திருக்கழுக்குன்றம் பகுதியில் அமைந்து உள்ள டீசல் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு பதப்படுத்திய பாசியில் இருந்து டீசல் தயாரிக்கும் முறையை பார்வையிட்டனர்.

அப்போது மந்திய மந்திரி நிதின்கட்காரி, "பயோ டீசல் தயாரிக்கும் இதுபோன்ற தொழிற்சாலைகள் கூடுதலாக அமைந்தால் டீசல் தட்டுப்பாடு நீங்கும். நச்சு புகை இல்லாமல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்" என்றார்.

Leave a Reply