முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்திக்கு பிறகு இந்திய பிரதமர் நரேந்திரமோடி முதன் முறையாக இலங்கை செல்ல முடிவு செய்துள்ளார்.

இலங்கையில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் சர்வாதிகார போக்குடன் நடந்துகொண்ட ராஜபக்சேவின் ஆட்சி முடிவுக்குவந்தது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேன புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிபர் மைத்ரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவு, மீனவர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 1987ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி இலங்கை சென்றார். அதன் பிறகு இந்திய பிரதமர்கள் யாரும் இலங்கை செல்லவில்லை.

தற்போது இலங்கை மற்றும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முதன் முறையாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை செல்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமர வீரா நிருபர்களிடம் பேசுகையில், புதிய அரசு இந்தியாவுடன் ஆழமான நட்பை மேற்கொள்ள விரும்புகிறது என்றார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியாவந்து சென்றதும் பிப்ரவரியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை செல்கிறார். இதனை தொடர்ந்து இந்தியபிரதமர் மோடியும் முதன் முறையாக இலங்கை செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.மேலும் சமர வீரா கூறுகையில், தேர்தலின் இறுதிநேரத்தில் ராஜபக்சே அவசர நிலையை கொண்டு வந்து ஆட்சியை கைப்பற்ற சதிசெய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். அதேபோல் கடந்த 2009ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சியின் போது விடுதலை புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

Leave a Reply