பிஎஸ்என்எல். இணைப்புகளை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டிய என் மீது 2011-ஆம் ஆண்டிலேயே மான நஷ்டவழக்கு தொடுக்கப் போவதாக கூறிய தயா நிதி மாறன் இது வரை அவ்வழக்கை தொடுக்காதது ஏன்? என பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தினமணி செய்தியாளரிடம் கூறியது:-

""மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது அவரது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் போட்கிளப் வீட்டில் 323 பி.எஸ்.என்.எல்., ஐ.எஸ்.டி.என். இணைப்புகள் நிறுவப்பட்டன. இந்த இணைப்பை பயன்படுத்தி 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

ரகசியத் தொலைபேசி இணைப்பகம்: தயாநிதி மாறன் வீட்டில் 323 இணைப்புகளைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகம் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதை கேபிள்கள் மூலம் சன் தொலைக்காட்சி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இதை சிபிஐ தனது ஆய்வின் மூலம் கண்டறிந்து அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், "தூங்குகிறது சிபிஐ அறிக்கை' என்ற தலைப்பில் தினமணியில் இந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தேன். அரசியல் காழ்ப்புணர்வால் தன் மீது புகார் கூறப்பட்டுள்ளதாகவும், ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு என் மீது (குருமூர்த்தி) மான நஷ்ட வழக்கு தொடுக்கப் போவதாகவும் மாறன் தெரிவித்திருந்தார். வழக்குரைஞர் மூலம் நோட்டீஸýம் அனுப்பியிருந்தார்.

இதற்கு "வரவேற்கிறோம் தயாநிதி மாறன்…' என்ற தலைப்பில் தினமணியில் நான் எழுதிய கட்டுரையில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதை வரவேற்பதாகத் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் மான நஷ்ட வழக்கு தொடுக்கவில்லை.

சிபிஐ வாக்குறுதியால் நடவடிக்கை: தயாநிதி மாறன் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு இரண்டு முறை கடிதம் எழுதினேன். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து, 2013-ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தேன். இந்தமனு மீது கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த விசாரணையின் போது, தயா நிதி மாறன் மீதான புகார்குறித்து முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்.) பதிவுசெய்து நடவடிக்கை எடுப்பதாக சி.பி.ஐ. வாக்குறுதி அளித்தது.

அதன் அடிப்படையிலேயே இப்போது தயா நிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச்செயலர், சன் தொலைக் காட்சி ஊழியர்கள் இருவர் ஆகியோரை சிபிஐ கைதுசெய்துள்ளது. இதற்கும் பாஜக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தவிவகாரம் தொடங்கிய 2007-ம் ஆண்டுமுதல் 2014-ம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

எனவே, அரசியல் காழ்ப்புணர்வால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தயாநிதி மாறன் கூறுவதை யாரும் நம்பமாட்டார்கள். மேலும், இந்தப் புகார் தொடர்பாக சிபிஐ தானாக மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே நான் வழக்குத் தொடுத்தேன்.

என் மீது தயாநிதி மாறன் தற்போது கூறியுள்ள குற்றச்சாட்டுகளையே கடந்த 2011-ஆம் ஆண்டிலும் கூறினார். இதற்காக மான நஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாகவும் அறிவித்தார். ஆனால், இதுவரை மான நஷ்ட வழக்கு தொடுக்கவில்லை. மானம் இருப்பவர்கள்தான் மான நஷ்ட வழக்கு தொடர்வார்கள்.

Leave a Reply