ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுப்பிரமணியத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தே.மு.தி.க. அறிவித்துள்ளது.

திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக. செயலாளர் விஜய ராஜன் பாஜக. வேட்பாளர் ஆக்ஸ் போர்டு சுப்பிரமணியத்தை இன்று நேரில்சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயராஜன், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆக்ஸ் போர்டு சுப்பிரமணியம் போட்டியிடுகிறார். தேமுதிக. வேட்பாளர் இந்த தொகுதியில் போட்டியிட்டால் எப்படி அவரது வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு தருவோமோ , அதேபோல் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. பாஜக. அரசு பொறுப்பேற்ற பிறகு 6 முறை பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்களுக்கு மாதத்திற்கு ரூ.1500 வரை மிச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலசாதனை திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவுபெருகி வருகிறது. தமிழகத்தை பொருத்த வரை ஊழல்கள் பெருகிய வண்ணம் உள்ளது. இதுபோன்ற நிலையை மாற்றுவதற்கு ஸ்ரீ ரங்கத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் வெற்றி ஒரு அடித்தளமாக அமையும். இந்ததேர்தலின் வெற்றி வருகிற சட்ட சபை தேர்தலில் வெற்றிக்கு முதல் படியாக அமையும். எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுப்பிரமணியத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய பாடுபடுவோம் என்றார்.

Leave a Reply