வழக்கமாக குடியரசு தினத்தை ஒட்டி அறிவிக்கப்படும் பாரத ரத்னா விருது   டிசம்பர் மாதமே வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 அன்று அறிவிக்கப்பட்டுவிட்டது. பாரதப் பிரதமராக இருத்த மூத்த அரசியல்வாதியான வாஜ்பாய்க்கு வாழும் காலத்திலேயே பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது பாராட்டத்தக்கது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் 90 வயது முடிந்து 91-ல் காலடி வைத்த  தருணத்தில் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது கிடைத்தது. 1996-ல் 13 நாட்களும்; 1998-2004லும் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு விருது கொடுத்ததில் சர்ச்சை எதுவும் எழமுடியாத அளவு எதிர்க்கட்சிக்காரர்களும் மதித்துப்போற்றும் ஷ்டேஷ்மேனாகத் திகழ்ந்தவர் அவர்.

மிகச் சிறந்த பேச்சாளர். கவிஞர், இலக்கியவாதி, திறமையான நிர்வாகி, சமன் செய்து சீர்தூக்கிப் பார்த்து சிறந்த ஆட்சியைக் கொடுத்தவர் என்ற புகழ் அவருக்கு இன்றளவும் உண்டு.

பாகிஸ்தானுடன் நல்லுறவு கருதி ரொம்பவே விட்டுக் கொடுத்து எல்லைப்புற வாஹா பகுதியிலிருந்து பாகிஸ்தான் லாகூருக்கு நேரடி பஸ் சேவை தொடங்கி வைத்தவர். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த அமைச்சரவையிலேயே வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். ஜனசங்கம் என்ற புதிய கட்சியை நிறுவி அது பின்னாளில் பாரதிய ஜனதாவாக உருவெடுக்க முதற்காரணமானவர்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றதுடன், ஆர்.எஸ்.எஸ். மூலம் தீனதயாள் உபாத்யாயாவுடன் பாரதிய ஜனசங்கத்திற்கு வந்தவர். காஷ்மீர் போராட்டத்தில் சிறையில் உயிரிழந்த இந்துத்வா தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிஷ்யர்.

ஜவஹர்லால் நேரு பிரதமாராக இருந்த காலத்திலேயே 'இந்த இளைஞன் ஒரு நாள் இந்தியாவின் பிரதமர் பதவியில் அமர்வான்' என்று அவரால் வியந்து பாராட்டப்பட்டவர். நானாஜி தேஷ்முக். பால்ராஜ் மாதாக், எஸ்.கே.அத்வானி போன்றவர்களுடன் இணைந்து ஜனசங்கம் கட்சியை தேசிய அளவில் உயர்த்தியவர். 1977-ல் ஐ.நா. சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக தன் தாய்மொழியான இந்தியில் உரையாற்றி சாதித்தவர்.

இவருடைய ஆட்சியில்தான் இந்தியா அணு ஆயுத சோதனையை 1967க்குப் பிறகு 1998-ல் தார் பாலைவனப் பகுதியான பொக்ரானில் நடத்தி உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போது மேற்கத்திய நாடுகள் இந்தியா ஒரு அணுசக்தியாக வளர்வதை விரும்பாமல் இந்தியாவிற்கான பல நிதியுதவிகளை ரத்து செய்தபோது, சவாலாக வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் டெபாசிட் பெற்று இந்தியப் பொருளாதாரத்தை சுயகவுரவம் பெறச் செய்தார்.

எந்த பாகிஸ்தானுடன் நல்லுறவு கருதி பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்துச் சென்றாரோ, அதே பாகிஸ்தான் கார்கில் பகுதியில் நம்பிக்கை துரோகம் செய்தபோது 'ஆபரேஷன் விஜய்' மூலம் தகுந்த பதிலடி கொடுத்து சாது மிரண்டால் என்ன ஆகும் என்பதையும் நிரூபித்தவர்.

அதே சமயம் 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஷ்தானுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது, சில நூறு பயணிகளில் உயிரைக் காப்பதற்காக ஈகோவை விட்டுக்கொடுத்து மவுலானா மசூத் அசார் என்ற தீவிரவாதியை விடுவிடுத்து பயணிகளைச் சாதுர்யமாக மீட்டவர். தேசம் முழுவதும் தங்க நாற்கர சாலை அமைத்து கட்டமைப்பு புரட்சி செய்தவர்.

சீனாவுடன் இந்தியாவுக்கு இருந்த கசப்பான உறவை ஓரளவு சீர்படுத்தியவர் வாஜ்பாய். திபெத்தை சீனப்பகுதி என்று உலகமே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில் இதை இந்தியாவும் ஒப்புக்கொண்டு அதன் மூலம் இந்தியாவுடன் இணைந்த சிக்கிமை இந்தியப் பகுதியாக சீனா அங்கீகரிக்கச் செய்தவர்.

காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கே வாஜ்பாயை பீஷ்மப் பிதாமகர் என்று ராஜ்யசபாவில் போற்றினார். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தினால் பிரும்மச்சாரியாகவே இருக்கும் வாஜ்பாய்க்கு ஒரு வளர்ப்பு மகள் உண்டு. 1992ல் பத்மவிபூஷன் விருதும் 1994-ல் பாரத ரத்னா – பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த் விருதும் இன்னும் பல விருதுகளும் பெற்றவருக்கு உச்சிமகுடமாக பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published.