இன்னும் வெறி அடங்கவில்லை, அந்தப் படுபாதகனுக்கு. "இந்தியவம்சாவளி மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு ஈழத் தமிழர்கள்தான் என் தோல்விக்குக் காரணம்" என பழிவாங்கத் தயாராகும் ஒரு காட்டு விலங்கைப் போல, 'சிங்கள மக்கள் என் பக்கம்தான்' என மார்தட்டியிருக்கிறார், மகிந்த ராஜபக்சே.

அரசுத்தலைவருக்கான அலறி மாளிகையிலிருந்து வெளியேறி, அம்பந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான மெலமுதனவில் போய், இப்படி திருவாய்மலர்ந்து இருக்கிறார், இனப்படுகொலையாளனும் மாபாதகனுமான அந்த மனிதப் பிறவி!

ஆட்சியதிகாரம் எல்லாவற்றையும் மக்கள் ராஜபக்சே குடும்பத்திடமிருந்து பறித்து, இன்னொருவரிடம் கொடுத்துவிட்டார்களே? பெரிய மாற்றம் வந்ததாகச் சொன்னார்களே? ராஜபக்சே குடும்பமே நாட்டைவிட்டு ஓடிப்போய் விட்டது என்றார்களே? எப்படி இப்படி பழைய கோதாவில் பேசமுடிகிறது? என்னதான் நடக்கிறது, இலங்கைத் தீவில்? ராஜபக்சே குடும்பமோ அதைச் சுற்றியிருந்த கூட்டமோ நாட்டைவிட்டு ஓடிவிடவில்லை. இனப்படுகொலையை வழிநடத்தி உத்தரவுகளை இட்ட மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்சே, கடந்த ஞாயிறுவரை, அரசாங்க வீட்டை காலிசெய்யவில்லை. ரகசியமாக தப்பிவிட்டதாகச் சொல்லப்படும், குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யும் இலங்கையைவிட்டு தான் வெளியே செல்லவில்லை என அறிக்கைவிட்டிருக்கிறார்.

இதற்கு நேர்மாறாக, ராஜபக்சே கூட்டத்தால் ராணுவத்தை விட்டு நீக்கப்பட்டு, வெளிநாட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் தலைமைத் தளபதி பொன்சேகாவுக்கு நெருக்கமான முன்னாள் தளபதிகள், நாடு திரும்பியிருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டி வலன ஆகிய இருவருமே, சனியன்று கொழும்பு வந்தடைந்த அதிகாரிகள். இவர்களுடன் பொன் சேகாவுக்கு வேண்டப்பட்ட மேலும் சில ராணுவ அதிகாரிகளும் இலங்கைக்குத் திரும்பவுள்ளனர். இவர்களெல்லாம் 2010 அதிபர் தேர்தலில் பொன்சேகா தோற்றதையடுத்து, பதிவிப் பறிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டதால், வெளிநாடுகளுக்குச் சென்று வசித்துவந்தனர். இப்போது அதிபராகியிருக்கும் மைத்திரிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய பொன்சேகாவின் ஆசியால், இவர்களுக்கு மீண்டும் ராணுவப் பதவிகள் அளிக்கப்படும் என்ற அத்தகவலை நடப்பு நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இத்துடன், மகிந்த அரசாங்கத்தின் கொலைவெறித் தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, வெளிநாடுகளுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் இலங்கைக்குத் திரும்ப புதிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மைத்திரியின் சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன, 10ஆம் தேதியன்று கொழும்புவில் செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் நடந்தேறிய அநியாய, அட்டூழியங்களை நேரில் பார்த்தவர்கள், அனுபவித்தவர்களுக்கு உண்மையில் இது குறிப்பிடத்தக்க மாற்றம்தான். குடிமக்களுக்கான அடிப்படையான உரிமைகளைப் பறித்து, பிறந்து – வளர்ந்தபாரம்பரிய மண்ணைவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக வெளிநாட்டுக்குப் போனவர்களுக்கு, இந்த மாற்றம் பெரும் நிம்மதிதான்!

2009 மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் பெரும் மனிதப்படுகொலையை நிகழ்த்தி விட்டு, அதை ஒட்டுமொத்த இலங்கையின் வெற்றியாகச் சித்தரித்துக் காட்டியது முதல், கடந்த 9 ஆம் தேதி அதிகாலை அலறி மாளிகையை விட்டு வெளியேறும்வரை… ராஜபக்சேகள் ஆடிய ஆட்டத்தை அந்தத் தீவு மக்களால் மேலும் தாங்கமுடியவில்லை. இந்தியாவின் தமிழகத்தின் அரசியல் கோமாளிக்கூத்துகளை எல்லாம் மிஞ்சிவிட்ட புகழ்பாடும் பேனர்கள். பெரிய பெரிய படங்கள், ரத்தக்கறையை முன்னவே காட்டிக்கொண்டதன் அடையாளமோ என்னவோ, ஆளுயர இளங்கருஞ்சிவப்பு சால்வையுடன் வெண்பற்களை எல்லாம் காட்டிச் சிரித்தபடி, எங்கு பார்த்தாலும் மகிந்த ராஜபக்சேவின் படங்கள்…! சுவர்கள், பேருந்துகள், அரசு வாகனங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் என எல்லா இடங்களிலும் படங்களாக இருந்தன. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சிறு நிகழ்வுகளிலும் ராஜபக்சேவைத் துதிபாடி பாடல்களைப் பாடவைத்தார்கள்.

"இலங்கையின் விடுதலைக்காக தமிழ், சிங்களத் தலைவர்கள் எத்தனையோ பேர் உழைத்தும் அவர்களின் பெயர்களை மறைத்துவிட்டு, ராஜபக்சேவை இலங்கையின் தேசத்தந்தை என்றெல்லாம் கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. உச்சகட்டமாக, இலங்கையின் பணத்தாள்களில் ராஜபக்சேவின் படம் அச்சிடப்பட்டதுவரை போனது, அதிகார அத்துமீறல். தேர்தலில் தோற்று, அலறி மாளிகையைக் காலி செய்து சொந்த ஊருக்குப் புறப்பட்டபோதுதான், இந்த அதிகாரம் மறையத் தொடங்கியது. அதுவரை அலறி மாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்ட இறங்கு தளத்திலிருந்து, ஹெலிகாப்டரில்தான் மகிந்த அய்யா எங்கேயும் கிளம்புவார். ஊருக்குப் பெட்டி படுக்கையைக் கட்டியபோது காரில் போனாலும், அதிபருக்குரிய பாதுகாப்பு வாகனத் தொடரணியும் உடன்சென்றது" என்கிற கொழும்பு பத்திரிகையாளர்கள், கடைசி நேரத்திலும் ராணுவத்தின் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்சேகள் முயன்றார்கள் என அதிர்ச்சிக் கதையையும் சொல்கிறார்கள்.

"வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும் மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. சொந்த ஊரில் வாக்குப்பதிவு செய்த பின்னர், அலறி மாளிகைக்கு இரவு வந்துசேர்ந்த மகிந்த ராஜபக்சே சோர்வாக இருந்திருக்கிறார்; அன்று இரவு முப்படைகளின் தளபதிகளும் மகிந்தாவின் நெருக்கமான ஆதரவாளர்களும் அங்கு வந்தார்கள். வழக்கத்துக்கு மாறான ஏதோ ஒன்று நடக்கப்போவது மட்டும் அவர்களுக்குத் தெரிந்தது; ஆனாலும், அமைதியாகவே இருந்தார் மகிந்த ராஜபக்சே. தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்காக படுக்கையறையிலிருந்து அன்று இரவு மட்டும், நான்கு முறை கீழே வந்து கருங்காப்பி குடித்திருப்பார். அதிபரின் செயலாரான லலித் வீரதுங்க, அவ்வப்போது அவருக்கு தேர்தல் முடிவுகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்" என்கிறார் இலங்கையின் அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ்.

"அதிகாலை 4 மணிக்குதான் மைத்திரிக்கு வெற்றி என்பதை மகிந்த நம்பியிருக்கிறார். நாடு முழுவதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரிடமும் கேட்டு, மொத்த வாக்குகள் எவ்வளவு என்பதை சரியாக வாங்கிய பின்னரே அவர்க்கு தோல்வி முகம் உரைத்திருக்கிறது. கடைசிநேரம்வரை தனக்கு தோல்வி என அவர் நம்பவே இல்லை" என்றும் சொல்கிறார், ஜெயராஜ்.

முடிவுகளை உறுதிப்படுத்திக்கொண்ட மகிந்த ராஜபக்சே, ஈழத்தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டிருப்பதைப் போல, தலைநகர் கொழும்புவில் அதிக அளவில் படையினரை நிறுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் பல இடங்களில் முடிவு

அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, அதை ஏற்க மறுத்துவிட்டார். தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைத்து, அவசரச் சட்டத்தின் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு உதவ ராணுவத் தரப்பில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். இதுவரை ராஜபக்சேவுடனேயே இருந்து செயல்பட்ட படைத் தளபதிகளுக்கே கூட, அவர்களை குடும்ப ஆட்சியதிகாரம் கடுமையான கோபத்தை உண்டாக்கியிருந்தது. உள்ளுறையாக இருந்த அதிருப்தியை வாய்ப்பு கிடைத்தபோது, சுதந்திரமாகக் காட்டிவிட்டார்கள், ராணுவ அதிகாரிகள் (ராணுவத் தரப்பிலேயே இத்தகவல் உறுதிப் படுத்தப்பட்டது).

வேறு எந்த வழியுமில்லாத ராஜபக்சே, யாரை கடந்த பத்து வருடங்களாக அரசியலிலிருந்து அகற்றி, ஒடுக்கி வைத்திருந்தாரோ, அந்த அரசியல் எதிரியை, பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை, கௌரவ (இலங்கையின் மாண்புமிகு)ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, தொலைபேசியில் இரைஞ்சிக் கூப்பிட்டார். 2005-ல் விடுதலைப் புலிகளின் முடிவால் அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சொந்தக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலிருந்தே விலக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட ரனில் விக்கிரமசிங்கே, கடந்துபோன எல்லாவற்றையும் மறந்து, அதிகாலை வேளையில் அரசதிபரின் அலறி மாளிகைகுச் சென்றார்.

அப்போது, விடுதலை புலிகளைத் தோற்கடித்ததால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து என்றும் அதனால் இந்தியாவில் முக்கிய பிரமுகர்களுக்குத் தரப்படுவதைப் போல, தங்களுக்கும் ராணுவப் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் ரனிலிடம் ராஜபக்சே இரைஞ்சிக் கேட்டுள்ளார். இலங்கையை மட்டுமல்ல அருகிலுள்ள இந்தியாவின் கண்ணிலும் விரலைவிட்டு ஆட்டியபடி கர்ஜித்துக்கொண்டு திரிந்த இனவெறி மிருகம், ரனிலின் முன்பு மண்டியிடாத குறையாக உயிர்ப் பிச்சை கேட்டு கெஞ்சியிருக்கிறது. ராஜபக்சேவின் பல்வேறு முகங்களைப் பார்த்த ரனில் என்னும் சக சிங்கள அரசியல்வாதி, அமைதிப் பேச்சு வார்த்தை எனப் புலிகளிடம் கூறி, கருணாவைப் பிரித்தெடுத்த கனவான் ஆயிற்றே.. புதிய அரசின் சார்பில், ராஜபக்சேவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் தந்தார், ஏற்கனவே மைத்திரியுடன் பேசிவைத்தபடி.

கமுக்கமாக நடந்தேறிய பரஸ்பர உடன்பாட்டின்படி, பதவியிலிருந்தபோது என்ன பாதுகாப்பு தரப்பட்டதோ, அதே பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது, மகிந்த ராஜபக்சேவின் குடும்பம் ஆனால் அங்கு போயும் தன் அரவத்தை அடக்காத மகிந்த ராஜபக்சே, அடுத்துவரும் எம்.பி. தேர்தலில் ஒரு கை பார்த்துவிடுவோம் என சிங்கள மக்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். காரணம், சிங்களர்கள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் ராஜபக்சேவின் விளம்பர அரசியலுக்கு பலன் கிடைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில்.

அதிகாரப்பூர்வமற்ற ஒரு புள்ளிவிவரத்தின்படி, தமிழீழப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருந்தால், கூடுதல் வாக்குகள் பெற்று, மகிந்த ராஜபக்சேவே மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருக்கக்கூடும் என்பது தமிழ் மக்களுக்கு எவ்வளவு கசப்பான எதார்த்தமாக இருந்திருக்கும்?

சிங்களர் பகுதியில், மைத்திரிபாலவின் வாக்குகள்: 52,39,051 தமிழர்கள் வாழும் (வடக்கு கிழக்கில் 9,78,111), சிங்களர் பகுதியில் ராஜபக்சேவின் வாக்குகள்: 54,44,490 தமிழர்கள் வாழும் (வடக்கு கிழக்கில் 3,23,600) நல்ல வேளையாக, அப்படியொரு முடிவை எடுக்கவில்லை என மனம் பதறுகிறார்கள், தமிழீழத்தில். தேர்தல் பிரச்சாரத்தின்போது, இனப்படுகொலை குறித்து ராஜபக்சே மீதோ ராணுவத்தினர் மீதோ பன்னாட்டு விசாரணையை நடத்தமாட்டோம் என பகிரங்கமாகச் சொன்னார், மைத்திரி. பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டிருக்கும் என்றும் தெளிவாகவே சொன்னார். ஆனாலும் அதையும் மீறி, மகிந்தவைத் தண்டிக்க, மைத்திரிக்கு மனமுவந்து தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
முன்னாள் அதிபர் சந்திரிகா கொடுத்த உறுதிமொழியை உறுதியாக நம்பி, மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் சந்திரிகாவின் வழக்குரைஞர், பிரச்சாரத்தில் தமிழர் பிரச்சினையைப் பற்றி அக்கறை கொண்டால் சிங்களர் மத்தியில் வாக்கு கிடைக்காது எனக் கூறியிருக்கிறார். கட்டமைப்பின் தரப்பில் அதற்குத் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார்கள் என உள்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியேற்ற பின்னர் பேசிய இலங்கை அரசுத் தலைவர் மைத்திரி, நாடு முழுவதும் சட்டப்படியான ஆட்சி நடைபெற உறுதியளிப்பதாக கூறினார். மூன்று இன (சிங்களர், தமிழ், முஸ்லிம்)- மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் சொன்னார்.

இனப்படுகொலைப் போரால் வாழ்க்கையை இழந்துநிற்கும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் – சொந்த இடங்களில் மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களின் நிலையை அறிவிப்பது, விசாரணையே செய்யப்படாமல் 30 ஆண்டுகள்வரை அரசியல் கைதிகளாக அடைபட்டுக் கிடக்கும் தமிழ் கைதிகளை விடுவிப்பது – ஆகியவை.

எரிமலையாய் வெடித்து வாக்குகளில் காட்டியுள்ள தமிழ் மக்களின் மன உணர்வுகளை மைத்திரி அரசு செயல்படுத்த வேண்டும். அதைச் செய்ய வைப்பது தமிழினத்தின் சகோதரக் கடமை.
நன்றி : நக்கீரன்

Leave a Reply