பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் பயணமாக நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். தனது அழைப்பை ஏற்று, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவந்த ஒபாமா- மிச்செல் தம்பதியினரை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

ஒபாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசு தினவிழாவுக்கு அழைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான நட்பு நாடுகள்.

இரு நாடுகளும் ஒன்றாக கைகோர்த்து நடப்பதில் உறுதிப்பூண்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இருநாடுகளும் ஒத்த கருத்துடன் உள்ளன. தீவிரவாதம் இன்னும் முதன்மையான உலகளாவிய அச்சுறுத்தலாக நீடிக்கிறது. தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் விரிவான உலகளாவிய கொள்கைத்திட்டம் வேண்டும் என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்போம்.

இரு தரப்பு கொள்கை ரீதியிலான கூட்டாளித்துவத்துக்கு வெற்றி தேடித்தருவதில் வலுவானதும், வளர்ச்சி காண்பதுமான பொருளாதார உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே மையப்புள்ளியாக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும். மரபுசாரா எரிசக்தி அனைவருக்கும் கிடைக்க அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனக்கும் ஒபாமாவுக்கும் இடையே மிகச்சிறந்த நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் உரையாடுகிறோம்.

இருவருக்கும் இடையேயான சிறந்த நட்பால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேம்படும். உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் இந்திய அமெரிக்க ஒத்துழைப்பு அவசியம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, நமது உறவினை மாற்றி அமைத்து வருகிறோம். அந்த வகையில், சிவில் அணுசக்தி உடன்பாடு நமது மாற்றியமைக்கப்பட்ட உறவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அது நமது நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. மேலும், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதுடன், தூய்மையான எரிசக்திக்கான நமது வாய்ப்பை விஸ்தரித்துள்ளது.

நாம் நமது இரு தரப்பு உடன்பாட்டினை கையெழுத்திட்டு 6 ஆண்டுகளுக்கு பின்னர், நமது சட்டத்துக்கும், சர்வதேச கடமைகளுக்கும் உட்பட்டு, தொழில்நுட்ப ரீதியில், வணிக ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்ல இரு தரப்பும் முடிவு செய்துள்ளோம்.

பாதுகாப்பு தொடர்பான விரிவான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கிறோம், கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மேலும் வலுப்படுத்தப்படும். இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்படும். அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க ஒபாமா உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வேலை பார்க்கிற லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக சமூக பாதுகாப்பு உடன்படிக்கை ஏற்படுத்த பேச்சு வார்த்தை நடத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, விவசாயம், சுகாதாரம், கல்வி, திறன்கள் ஆகியவற்றில் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துதல் வேண்டும், இந்தியாவும், அமெரிக்காவும் வழக்கமான உச்சி மாநாடுகளை அடிக்கடி நடத்த வேண்டும். இரு தரப்பு தலைவர்கள் (மோடி-ஒபாமா) நேரடியாக பேசவும், இரு தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நேரடியாக பேசவும் தனித்தனி தொலைபேசி 'ஹாட்லைன்' வசதி ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

Leave a Reply